Published:Updated:

`போராடுபவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும்!' - கொரோனா இறப்பு கேள்வியால் கொதித்த விஜயபாஸ்கர்

 அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

இப்படிப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா நோயை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். -விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட படுக்கைகள் மற்றும் வசதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வல்லரசு நாடே விழிபிதுங்கிக்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் தமிழக அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கடுமையாகப் போராடி வருகிறது. கேள்விகள் கேட்பது எளிது. களத்தில் நின்று போராடுவது கடினமானது.

இரவு பகலாகக் களத்திலிருந்து போராடுபவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் பல முக்கிய முடிவுகளைத் திறம்பட எடுத்து வருகிறார். நாங்கள் களத்தில் நின்று போராடுகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா நோயை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே தமிழக அரசால் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 12,480 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தற்போது, தற்காலிக செவிலியர்கள் 2,000 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

`போராடுபவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும்!' - கொரோனா இறப்பு கேள்வியால் கொதித்த விஜயபாஸ்கர்

கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவரப் படுக்கைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் தட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது பல தாலுகா மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் இந்த நேரத்தில் சரியாக மருந்துகளை உட்கொண்டு தங்களது நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ பழனி தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார். இரண்டு முறை முதலமைச்சர் அவரிடம் நலம் விசாரித்துள்ளார். அவரிடமும், மருத்துவமனை நிர்வாகத்திடமும் பேசினேன். நலமாக உள்ளார் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இறப்பு விகிதத்தை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. வெளிப்படைத்தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு