Published:Updated:

வைரல்:`நிவாரணம் கொடுக்குறோம்; ஓட்டு மாத்திப் போடுறீங்க?!’- அமைச்சரின் வாட்ஸ்அப் உரையாடல்

வாட்ஸ்அப்பில் உரையாடும் அமைச்சர்
வாட்ஸ்அப்பில் உரையாடும் அமைச்சர்

``எங்க பிள்ளைங்க கூட சொல்லுதுங்க அமைச்சர் விஜயபாஸ்கர் எல்லாருக்கும் நல்லது பண்ணுகிறாருன்னு. அப்படி இருக்க நாங்க ஏன் அடுத்தவர்களுக்கு ஓட்டு போடப்போகிறோம்’’.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாகவே தன்னை வெற்றி பெற வைத்த விராலிமலைத் தொகுதி மக்களுக்கு தன் சொந்தச் செலவில் அரிசி மூட்டைகளை நிவாரணமாக வழங்க ஆரம்பித்துவிட்டார். பல இடங்களில் அமைச்சரே நேரடியாக வந்து நிவாரண உதவிகளை வழங்கினார். அரிசி மூட்டைகளில் `நாளைய முதல்வர்' என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்று வெளியாகவே அமைச்சருக்குப் பெரும் குடைச்சலை ஏற்படுத்தியது. அதே நேரம், மற்ற பகுதிகளில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லையா? என்று கேள்வி எழுந்தது. இதனால், தற்காலிகமாக நிவாரணம் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், தற்போது தொகுதியில் பொறுப்பாளர்களைக் கொண்டு பொதுமக்களிடம் நிவாரணப் பொருள்களை கொண்டு சேர்த்து வருகிறார்.

வாட்ஸ்அப் உரையாடல்
வாட்ஸ்அப் உரையாடல்

சென்னையிலிருந்தாலும், தன் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பொதுமக்களிடமும் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பேசி, நிவாரணங்கள் கிடைத்துவிட்டதா என்று விசாரிக்கும் அமைச்சர், இப்போதே ஓட்டு வேட்டையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விராலிமலைத் தொகுதிக்குட்பட்ட தேராவூர் ஊராட்சி பொதுமக்களிடம் அமைச்சர் வாட்ஸ் அப் வீடியோ கால் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

``நூறு நாள் வேலைத்திட்டப் பெண்களிடம், பணிகள் நடக்கிறதா, நிவாரணங்கள் எல்லாம் சரியாகக் கிடைத்துவிட்டதா?’’ என்று அமைச்சர் கேட்க, அங்கிருந்த மக்கள் போனைப் பார்த்து கைகூப்பி கும்பிட்டவாறே, `பணி நடக்கிறது சார். ஏற்கெனவே அரிசி, கோதுமை, காய்கறிகள் கிடைத்துவிட்டது. தற்போது, முட்டை, மளிகைப் பொருள்கள் எல்லாம் கிடைக்கிறது. ரொம்பவே சந்தோஷம் சார்’’ என்கின்றனர்.

தொடர்ந்து, அமைச்சர், ``நீங்க கஷ்டப்படும் நேரத்தில் பொருள் எல்லாம் கொடுத்து நாங்க உதவுகிறோம். ஆனா, நீங்க ஜோதிமணிக்கு மட்டும் ஓட்டுப் போடுறீங்க. யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?’’ என்று கேட்க, ``எப்பவும் அமைச்சருக்குத்தான் நாங்க எல்லாரும் ஓட்டுப் போடுவோம்’’ என்கின்றனர். ``எங்க பிள்ளைங்க கூட சொல்லுதுங்க அமைச்சர் விஜயபாஸ்கர் எல்லாருக்கும் நல்லது பண்ணுகிறாருன்னு. அப்படி இருக்க நாங்க ஏன் அடுத்தவர்களுக்கு ஓட்டுப் போடப்போகிறோம். ஜோதிமணி ஓட்டுக் கேட்டு வந்ததுக்கு அப்புறம் வரவே இல்லை.

வாட்ஸ்அப் உரையாடல்
வாட்ஸ்அப் உரையாடல்

கொரோனாவுல தப்பிச்சு இருக்கமான்னு பார்க்கக் கூட வரலை. உங்களுக்குத்தான் எப்பவும் ஓட்டுப் போடுவோம். நீங்கதான் மீண்டும் அமைச்சராக வரணும். எங்களுக்கு நிறைய செய்யணும்'’ என்கின்றனர். எல்லாத்தையும் கேட்டுக்கொண்ட அமைச்சர் கடைசியாக, ``ஓட்டுப் போடவேண்டும் என்பதற்காக, நான் நிவாரணம் கொடுக்கவில்லை. நீங்க கஷ்டப்படுவதால் மட்டும்தான் கொடுக்கிறேன்" சந்தோஷம் என்று கூறி முடிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு