Published:Updated:

"எம்.எல்.ஏ மாரிமுத்துவை அமைச்சர்கள் உட்காரச் சொல்லியிருக்கலாம்"-இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் வருத்தம்

அமைச்சர் எ.வ.வேலு -  எம்.எல்.ஏ மாரித்து
அமைச்சர் எ.வ.வேலு - எம்.எல்.ஏ மாரித்து

மக்களின் அடிப்படை வசதிகளுக்காக, பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பதால், இவருக்கு திருத்துறைப்பூண்டி தொகுதி முழுவதும் ஆதரவு அலை வீசியது. அதிமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் சுரேஷ்குமாரைவிட சுமார் 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவிடம், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ஆகியோர் நடந்துகொண்டவிதம் வருத்தமளிப்பதாக திருத்துறைப்பூண்டித் தொகுதி மக்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துவருகிறார்கள்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருத்துறைப்பூண்டி [தனி] தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாரிமுத்து போட்டியிட்டார். இவர் குடிசை வீட்டில் வசிக்கும் மிகவும் எளிமையான வேட்பாளர் எனவும், இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பதால் இவருக்கு திருத்துறைப்பூண்டி தொகுதி முழுவதும் ஆதரவு அலை வீசியது. அதிமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் சுரேஷ்குமாரைவிட 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தொகுதி மக்களின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க, அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நேரில் சந்தித்து மனு அளித்துவருகிறார்.

மாரிமுத்து
மாரிமுத்து

நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபோது, ‘’எங்களோட திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஒரு நகரப் பேருந்துகூட கிடையாது. இந்தப் பகுதியில பெண் தொழிலாளர்கள் அதிகம். இங்கு நகரப்பேருந்து இயக்கினால், அவங்களுக்கு உதவியாக இருக்கும்" என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதைத் தொடர்ந்து இங்கு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில்தான், முத்துப்பேட்டை பகுதியைத் தனி தாலுகாவாக அறிவிக்கக் கோரி, எம்.எல்.ஏ மாரிமுத்து, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது அமைச்சர் உட்கார்ந்துகொண்டே மனு வாங்கினார். திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்கக் கோரி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவைச் சந்தித்தும் எம்.எல்.ஏ மாரிமுத்து மனு அளித்தார். எ.வ.வேலுவும் நாற்காலியில் அமர்ந்துகொண்டே மனு வாங்கியிருக்கிறார். இது திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களிடமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரகுமார்
சந்திரகுமார்

இது குறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் சந்திரகுமார், ``தனது தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற, அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் அளித்துவரும் எம்.எல்.ஏ மாரிமுத்துவின் முயற்சி, பாராட்டுக்குரியது. இதை நிறைவேற்ற உறுதியளித்த அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவிப்போம். ஆனால் அதேசமயம், ஒரு சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து கோரிக்கை மனுவை அமைச்சர்கள் எழுந்து நின்று பெற்றிருக்க வேண்டும் அல்லது சட்டமன்ற உறுப்பினரை அமரச் செய்து மனுவைப் பெற்றிருக்க வேண்டும். அமைச்சர்கள் தேவையற்ற விமர்சனங்களுக்குள்ளாவதை தவிர்க்க வேண்டுகிறோம்’’என்றார்.

அடுத்த கட்டுரைக்கு