Published:Updated:

`மருத்துவர்களே இல்லை; மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையா இது?’ - நாகையில் கொந்தளித்த ஓ.எஸ் மணியன்

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், இந்த மருத்துவமனையின் குறைகளையெல்லாம் களைய வேண்டிய பொறுப்பில் இருப்பவர், அவர் ஏதோ எதிர்க்கட்சித் தலைவர்கள்போல பேசியது ஆச்சர்யமாகவும் இருந்தது.

மருத்துவமனை
மருத்துவமனை

`நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் இதயநோய் சிகிச்சைப்பிரிவு உட்பட உயிர்க்காக்கும் முக்கியப் பிரிவுகளுக்கு மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்' என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சமீபத்தில் நாகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ``நாகையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, பெயருக்குத்தான் இருக்கிறது. ஆனால், அங்கே இதய சிகிச்சை உட்பட முக்கிய பிரிவுக்குப் போதுமான மருத்துவர்கள் இல்லை. அவசரத்துக்கு சி.டி ஸ்கேன் போன்றவை எடுப்பதற்கு கூட, வாரத்துக்கு இரண்டு நாள்கள் மயிலாடுதுறை மருத்துவமனையில் இருந்துதான் அதற்கான பணியாளர்கள் வர வேண்டும். ஆபத்தில் சிக்கி அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தேவையான சிகிச்சை இன்றி அல்லல்படுகிறார்கள்" என்று பேசியபோது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், இந்த மருத்துவமனையின் குறைகளையெல்லாம் களைய வேண்டிய பொறுப்பில் இருப்பவர், அவர் ஏதோ எதிர்க்கட்சி தலைவர்கள்போல பேசியது ஆச்சர்யமாகவும் இருந்தது.

இது தொடர்பாக பேசிய அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ``கடந்த மாதம் திடீரென மயங்கி விழுந்த என் தாயாரை அவசரத்துக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தோம். நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். ஈ.சி.ஜி. எடுத்துப் பார்த்த மருத்துவர்கள், இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் `மேற்கொண்டு எக்கோ எடுத்துப் பார்ப்பதற்கும், கலந்தாலோசனை செய்வதற்கும் நாகப்பட்டினம் மருத்துவமனையில் இதய நோய் மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும், திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேல்சிகிச்சை எடுக்கவும்' அறிவுறுத்தினர். அந்த மருத்துவமனையில் இதய நோய்ப் பிரிவில் மருத்துவர்களே இல்லை என்பது அதிர்ச்சியாய் இருந்தது.

மருத்துவமனை
மருத்துவமனை

மருத்துவம் வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், மெடிக்கல் டூரிஸம் இந்தியாவில் மேம்பட்டுவிட்டதாய் பெருமை பேசும் இத்தருணத்தில் ஒரு மாவட்டத் தலைநகரில் இதயநோய் மருத்துவர்கள் இல்லை என்பதும் அங்கே எக்கோ கூட எடுக்க முடியாதென்பதும் அவலம்தான். எளிய மனிதர்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள முதலில் நாடுவது அரசு மருத்துவமனையைத்தான். ஆகவே, நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் உடனடியாக இதய நோய்ப் பிரிவுக்கு மருத்துவர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்" என்றார்.

இதுபற்றி நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காதர், ``இதய நோய்ப் பிரிவுக்கு டாக்டர்கள் இல்லை என்பது உண்மைதான். சுமார் 20 டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. சி.டி. ஸ்கேன் போன்ற மற்ற எல்லாக் குறைகளையும் நான் சொல்வது சரியாக இருக்காது" என்று முடித்துக்கொண்டார்.