Published:Updated:

பி.டி.ஆர் கார்மீது செருப்புவீச்சு: அண்ணாமலை பெயரில் பரவும் ஆடியோ- பாஜக மாவட்டத் தலைவர் சொல்வதென்ன?

அண்ணாமலை

இந்தச் சம்பவத்தின் மூலம் அரசியல் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறுவதுபோல் அந்த உரையாடல் அமைந்துள்ளது. இந்த ஆடியோ எந்த அளவுக்கு உண்மைத்தன்மை உடையது என்று உறுதியாகாத நிலையில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

பி.டி.ஆர் கார்மீது செருப்புவீச்சு: அண்ணாமலை பெயரில் பரவும் ஆடியோ- பாஜக மாவட்டத் தலைவர் சொல்வதென்ன?

இந்தச் சம்பவத்தின் மூலம் அரசியல் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறுவதுபோல் அந்த உரையாடல் அமைந்துள்ளது. இந்த ஆடியோ எந்த அளவுக்கு உண்மைத்தன்மை உடையது என்று உறுதியாகாத நிலையில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

Published:Updated:
அண்ணாமலை

மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார்மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக போன் உரையாடல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

உரையாடல் ஆடியோ
உரையாடல் ஆடியோ

காஷ்மீரில் வீரமரணமடைந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தச் சென்றபோது அங்கிருந்த பா.ஜ.க-வினருக்கும் அவருக்கும் வாக்குவாதமாகி பின்பு அவர் கார்மீது செருப்பு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பின்பு மதுரை மாநகர பா.ஜ.க தலைவர் டாக்டர் சரவணன் நள்ளிரவில் அமைச்சரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டதும், பின்பு பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக அறிவித்ததும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தின.

பி.டி.ஆர் - சரவணன்
பி.டி.ஆர் - சரவணன்

இந்தச் சம்பவத்தில் மூன்று பெண்கள் உட்பட்ட ஒன்பது பா.ஜ.க-வினர் கைதுசெயப்பட்டனர். இதில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், செருப்பு வீசச் சொன்னது யார் என்பது குறித்து தனிப்படையினர் பா.ஜ.க நிர்வாகிகளிடம் தினமும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

`இந்தச் சம்பவத்துக்குக் காரணம் டாக்டர் சரவணன்தான். அவரைக் கைதுசெய்யுங்கள்’ என்று மதுரை மாநகரப் பொறுப்பையும் கூடுதலாக வகித்துவரும் புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் தலைமையிலான பா.ஜ.க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனரிடம் சமீபத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று புறநகர் மாவட்டச் செயலாளர் சுசீந்திரனும், மாநிலத் தலைவர் அண்ணாமலையும் போனில் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

டாக்டர் சரவணனை கைது செய்ய பா.ஜ.கவினர் மனு கொடுத்தபோது
டாக்டர் சரவணனை கைது செய்ய பா.ஜ.கவினர் மனு கொடுத்தபோது

அதில் இந்தச் சம்பவத்தின் மூலம் அரசியல் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறுவதுபோல் அந்த உரையாடல் அமைந்துள்ளது. இந்த ஆடியோ எந்த அளவுக்கு உண்மைத்தன்மை உடையது என்று உறுதியாகாத நிலையில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

இது குறித்து மதுரை மாநகர மற்றும் மாவட்டத் தலைவர் சுசீந்திரனிடம் பேசினோம். ``இது முழுக்கப் பொய்யான ஆடியோ, அதில் உள்ளது என் குரல் அல்ல. அதுபோல் மாநிலத் தலைவர் பல்வேறு இடங்களில் பேசியதிலிருந்து சில வார்த்தைகளை எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அன்றைய தினம் நானும் தலைவர் அண்ணாமலையும் ஒரே காரில்தான் பயணம் செய்து விமான நிலயத்தில் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றோம். ஒன்றாக இருக்கும்போது எதற்கு போனில் பேசப்போகிறோம்..?

சுசீந்திரன்
சுசீந்திரன்

வீரமரணமடைந்த வீரர் உடலை ஊருக்குக் கொண்டு செல்லும்போது கட்சியினரை வைத்து மலர் தூவ ஏற்பாடு செய்யுங்கள் என்று தலைவர் சொல்லியிருந்தார். அதன்படி 12 இடங்களில் எங்கள் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

உண்மை இப்படி இருக்கும்போது கட்சியை வளர்க்க நான் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுவது பிடிக்காதவர்கள் இப்படி ஒரு ஆடியோவை உருவாக்கி என்னை மன உளைச்சலாக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள். அது நடக்காது. இந்த ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் இன்று புகார் கொடுக்கவிருக்கிறேன்" என்றவரிடம், "இதன் பின்னணியில் யார் இருப்பதாக நினைக்கிறீர்கள்?" என்று கேட்டோம். "யார் செய்திருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?" என்று நம்மிடமே திருப்பிக் கேட்டார்.

இந்த ஆடியோ குறித்து காவல்துறை சரியான முறையில் விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என்கிறார்கள் தி.மு.க-வினர்.