Published:Updated:

`பா.ஜ.க-விடமிருந்து விலக நேரத்தை எதிர்பார்க்கிறோம்!’ - அமைச்சர் பாஸ்கரன் பேச்சால் தொடரும் குழப்பம்

ஜி.பாஸ்கரன்
ஜி.பாஸ்கரன்

பி.ஜே.பி-யை விட்டு அ.தி.மு.க விலக நேரம் பார்த்துவருவதாக அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கைத் தொகுதி எம்.எல்.ஏ-வும், தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சருமான ஜி.பாஸ்கரன், பி.ஜே.பி-யை விட்டு விலக நேரம் பார்த்துவருவதாகத் தெரிவித்துள்ள கருத்து, பி.ஜே.பி-யினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளையான்குடி மேடையில் ஜி.பாஸ்கரன்
இளையான்குடி மேடையில் ஜி.பாஸ்கரன்

சிவகங்கை மாவட்டத்தில், இளையான்குடி அதிகப்படியான இஸ்லாமிய சமுதாய மக்கள் வாழ்ந்துவரும் பகுதி. இப்பகுதி மக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வை அமைச்சர் விமர்சனம் செய்து பேசிய கருத்துதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளையான்குடியில், எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது. இதில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், ``பி.ஜே.பி-யிடமிருந்து நாங்கள் தனியாகச் செல்வதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அமைச்சர் ஜி.பாஸ்கரன்
அமைச்சர் ஜி.பாஸ்கரன்
சாய்தர்மராஜ்

அமைச்சர்களாகிய நாங்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இளையான்குடியில் தி.மு.க கட்சியினரே ஆளுங்கட்சியினர் போல் நடந்துகொள்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் எங்கள் கையில் இருந்தது. அப்போது 5 ஓட்டுகள், 3 ஓட்டுகள் வித்தியாசத்தில் எத்தனையோ பேர் தோல்வி அடைந்தார்கள். அதில், அ.தி.மு.க வெற்றிபெற்றது என்று அறிவித்திருக்கலாம். ஆனால், நாங்கள் அ.தி.மு.க.... அவ்வாறு செய்ய மாட்டோம்.

அ.தி.மு.க-வினர் சாதாரண மனிதர்கள். நீங்கள் எங்களை எப்போதும் அணுகலாம். நீங்கள் எம்.எல்.ஏ- வையும், சேர்மனையும், என்னையும் சட்டையைப் பிடித்துக் கேட்கலாம். மீட்டிங்கில் பேசியதுபோல் திட்டங்களைச் செயல்படுத்தவில்லையே என்று கேட்கமுடியும். ஆனால், தி.மு.க -வை கேட்க முடியுமா?” என்றார்.

ஏற்கெனவே, கூட்டணி தொடர்பாகக் கட்சியினர் பொதுவெளியில் பேசக்கூடாது என கட்சித் தலைமை அறிவிப்பு செய்திருந்த நிலையில், அமைச்சர் ஒருவரே இப்படி பேசியது கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.பாஸ்கரன்
ஜி.பாஸ்கரன்

பி.ஜே.பி கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜி.பாஸ்கரனைத் தொடர்புகொண்டு பேசினோம், "பி.ஜே.பி-யைப் பற்றி நான் எதுவும் சர்ச்சையாகப் பேசவில்லையே" என்றார். நீங்கள் பேசியதாக வீடியோ உள்ளதே என்றதற்கு, ``ஆமாம். நான் அவ்வாறு சொன்னேன். அதற்கு தற்போது மறுப்பு தெரிவித்துவிட்டேன். பி.ஜே.பி-யுடன் எங்கள் கூட்டணி எப்போதும் வலுவாக இருக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு