Published:Updated:

“முதல்வர் வாக்குறுதி கொடுத்திருந்தா அவரைப் போய் பாருங்க!”

விவசாயிகளை உதாசீனப்படுத்தினாரா செந்தில் பாலாஜி?

பிரீமியம் ஸ்டோரி

“போராட்டத்தைத் தொடருங்க... நாங்க ஆட்சிக்கு வந்ததும் உயர்மின் கோபுரப் பிரச்னையை சரிசெஞ்சுடலாம்...” - 2018 டிசம்பரில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக ஈரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளைச் சந்தித்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகள் இவை. கடந்த சட்டசபைத் தேர்தல் வாக்குறுதியிலும் இதைக் குறிப்பிட்டிருந்தது தி.மு.க. இந்த நிலையில்தான், கடந்த சில நாள்களாக உயர்மின் கோபுர திட்டப் பணிகள் தொடங்கியிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்தபோது அவரும் விவசாயிகளை உதாசீனப்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது!

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில், மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் ஏழு உயர்மின் கோபுர திட்டங்களையும், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் 15 திட்டங்களையும் செயல்படுத்திவருகின்றன. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2017 முதல் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர். தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். தி.மு.க தனது தேர்தல் அறிக்கையிலும், இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது. இந்த நிலையில் தான் மீண்டும் இந்தப் பணிகள் வேகமெடுத்துள்ளன.

 “முதல்வர் வாக்குறுதி கொடுத்திருந்தா அவரைப் போய் பாருங்க!”

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைப் பற்றி வரிசையாக அடுக்கினார் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி... “உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 2018, டிசம்பரில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 15 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினோம். ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘உங்களோட போராட்டத்துக்கு தி.மு.க எப்பவும் உறுதுணையாக இருக்கும். நாங்க ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்போம்’ என்று பேசினார். தொடர்ந்து 2019, ஜனவரி மாதம் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்ற விவசாயிகளைச் சந்தித்தும் ஆதரவு கொடுத்தார். 5.1.2019 அன்று உயர் மின்கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கக் கோரி சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் ஸ்டாலின் கொண்டுவந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும், 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் உயர்மின் கோபுரத் திட்டங்களுக்கு உரிய இழப்பீடும் வாடகையும் வழங்கப்படும்; பிரச்னை சரிசெய்யப்படும் என்று உறுதியும் அளித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஈரோட்டில் நடைபெற்ற மேற்கு மண்டல விவசாயிகளின் கோரிக்கை மாநாட்டிலும், ஸ்டாலின் இதை உறுதிப்படுத்தினார்.

 “முதல்வர் வாக்குறுதி கொடுத்திருந்தா அவரைப் போய் பாருங்க!”

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் 2019 அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தனது கன்னிப்பேச்சில் இந்தப் பிரச்னையைத்தான் பேசினார். ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்து அவர் அமைச்சரான பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் நடந்துகொள்ளும் போக்கைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. கூடங்குளம், ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோகார்பன், எட்டுவழிச் சாலை, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட அனைத்துப் போராட்ட வழக்குகளையும் திரும்பப் பெற்ற தி.மு.க அரசு, உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான 38 போராட்ட வழக்குகளை மட்டும் திரும்பப் பெறவில்லை. இதை வலியுறுத்தி, நாங்கள் தொடர்ச்சியாக எட்டுமுறை அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்து மனு கொடுத்தோம்; உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட இடங்களுக்கு இழப்பீட்டையும் கேட்டிருந்தோம். அவை எதுவுமே நடக்காத நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்மின் கோபுர திட்டப் பணிகள், மீண்டும் தொடங்கியிருக்கின்றன.

இதனால், அதிர்ச்சியடைந்த நாங்கள் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் செந்தில் பாலாஜியைச் சந்தித்துப் பேசினோம். அவரோ, ‘எனக்கு ஆயிரம் வேலை இருக்கும். உங்க செளகரியத்துக்கெல்லாம் நான் உங்களைப் பார்க்க முடியாது. `அமைச்சரோட அணுகுமுறை சரியில்லை... முதலமைச்சரை சந்திக்கப் போறோம்’னு சொன்னீங்களாமே... உங்களுக்கு நான் எந்த உறுதிமொழியையும் கொடுக்கலை. முதல்வர் வாக்குறுதி கொடுத்திருந்தா நீங்க அவரைப் போய் பாருங்க’ என்று கோபத்துடன் பேசி விவசாய சங்க நிர்வாகிகளை அனுப்பிவிட்டார். இனி நாங்கள் செந்தில் பாலாஜியை நம்ப மாட்டோம். ஸ்டாலினை நம்பி, அவருக்கு ஆதரவாக வாக்களித்தோம். முதல்வர் அவரது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என்றார் உறுதியாக.

ஈசன் முருகசாமி, சிவக்குமார்
ஈசன் முருகசாமி, சிவக்குமார்

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க கொள்கை பரப்புச் செயலாளர் தாராபுரம் சிவக்குமாரோ, “கடந்த ஆட்சியில இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்றதா சொன்னவங்க, மறுபடியும் இந்தத் திட்டப்பணிகள் ஆரம்பிச்சதும் ‘இது மத்திய அரசோட திட்டம். நாங்க ஒண்ணும் செய்ய முடியாது’னு சொல்றாங்க. உண்மையாவே விவசாயிகள் மேல இருக்கும் அக்கறையால வாக்குறுதி கொடுத்தாங்களா இல்லை தேர்தலுக்காக வாக்குறுதி கொடுத்தாங்களான்னு தெரியலை. போன ஆட்சியில எங்க மேல 40 வழக்குகள் போட்டாங்க. இப்போ 400 வழக்குகள் போட்டாலும் போராடத் தயாராக இருக்கோம். எங்களைத் திரும்பவும் போராட வெச்சுடாதீங்க” என்றார் கொதிப்புடன்!

இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டோம். “ஒரு மீட்டிங்ல இருக்கேன். முடிச்சுட்டு கூப்பிடட்டுமா” என்றவர், அதன் பிறகு நமது அழைப்பை எடுக்கவே இல்லை!

முதல்வர் ஸ்டாலின் இதற்கொரு தீர்வைக் கொடுப்பாரா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு