Published:Updated:

`22 -ம் தேதி விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!’ - மியாட் மருத்துவமனை

விஜயகாந்த் - மருத்துவமனை அறிக்கை
விஜயகாந்த் - மருத்துவமனை அறிக்கை

தே.மு.தி.க தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது என்றும், அது உடனடியாகச் சரி செய்யப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த் கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. தொடர்ந்து ஓய்வில் இருந்துவந்த அவருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

தே.மு.தி.க அறிக்கை
தே.மு.தி.க அறிக்கை

இந்த நிலையில் தே.மு.தி.க சார்பில், விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், `வழக்கமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உடல் பரிசோதனைக்காக கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரிசெய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல்நலத்துடன் விஜயகாந்த் இருக்கிறார்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`லேசான கொரோனா அறிகுறி; சரி செய்யப்பட்டு விட்டது!’ - விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக

இந்தநிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மியாட் மருத்துவமனை, அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த 22-ம் தேதி விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், `அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனை அறிக்கை

தே.மு.தி.க தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது என்றும், அது உடனடியாக சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு