Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் ஒரு பக்கம்... நேரு மறு பக்கம்... பரேடு வாங்கிய தி.மு.க கவுன்சிலர்கள்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

என்னை விசாரித்த அமலாக்கத்துறை, ஏன் தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனை விசாரிக்கவில்லை?’ என்று சீறியிருக்கிறார்

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் ஒரு பக்கம்... நேரு மறு பக்கம்... பரேடு வாங்கிய தி.மு.க கவுன்சிலர்கள்!

என்னை விசாரித்த அமலாக்கத்துறை, ஏன் தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனை விசாரிக்கவில்லை?’ என்று சீறியிருக்கிறார்

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

“குழந்தைத்தனமாக நடந்துகொள்கிறார்களே” என்று சிரித்தபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “எதைச் சொல்கிறீர்?” என்றோம். “தொழில்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக விகடன் நிருபர் சென்றிருந்தபோது, ‘விகடனிலிருந்து வருபவர்களை அனுமதிக்க வேண்டாமென செய்தித்துறை அதிகாரி ஒருவர் உத்தரவு போட்டிருக்கிறார்’ என்று தடுத்திருக்கிறார்கள் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள். இவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டும்தான் செய்திகளைத் திரட்ட முடியுமா என்ன?” என்றபடியே கச்சேரியை ஆரம்பித்தார்.

“முதல்வர் ஸ்டாலினைச் சந்திப்பதே பெரும்பாடாக இருக்கிறது என்று தொழிலதிபர்களும் ஒப்பந்ததாரர்களும் புலம்புகிறார்கள். அவரைச் சந்திக்க நேரம் கேட்டாலே, ஏன்... எதற்கு... என்பதை விவரமாக எழுதி வாங்கிக்கொண்டுதான் அப்பாயின்மென்ட்டே கொடுக்கப்படுகிறதாம். அதோடு, எழுதிக்கொடுத்தவை தவிர வேறு எந்த விஷயம் குறித்தும் பேசக் கூடாது என்று கண்டிஷனும் போடுகிறார்களாம். இது பற்றி சீனியர் அமைச்சர் ஒருவரிடம் முறையிட்டால், ‘எங்களால்கூட சில விஷயங்களை எளிதில் முதல்வரிடம் கொண்டுசெல்ல முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அவரை அடைத்துவிட்டார்கள்’ என அவரும் புலம்பியிருக்கிறார். இப்படியே போனால், தொழில் முதலீட்டாளர்களெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு நகர்ந்துவிடக்கூடும் என்ற பேச்சு கோட்டையில் கேட்கிறது.”

“உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் கடுமை காட்டியிருக்கிறாரே முதல்வர்?”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் ஒரு பக்கம்... நேரு மறு பக்கம்... பரேடு வாங்கிய தி.மு.க கவுன்சிலர்கள்!

“ஆமாம். ஜூலை 3-ம் தேதி, தி.மு.க-வின் சார்பாக நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில், நடந்த நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில், ‘சர்வாதிகாரியாக மாறுவேன்’ என்று முழங்கியிருக்கிறார் ஸ்டாலின். அவர் அப்படிக் கோபமாகப் பேசியதற்கு அடிபோட்டதே சென்னை கவுன்சிலர்கள்தான். அராஜகச் செயல்பாடு, வசூல்வேட்டை என்று சென்னை கவுன்சிலர்கள் மீதான புகார்கள் முதல்வர் வரை போயிருக்கிறது. அது பற்றி உளவுத்துறையும், தனியார் ஆய்வு நிறுவனமும் கொடுத்த ரிப்போர்ட்டை முன்பே அமைச்சர் நேருவிடம் கொடுத்து, எச்சரிக்கும்படி சொன்னாராம் ஸ்டாலின். அதன்படியே, கடந்த ஜூன் 29-ம் தேதி சென்னை அறிவாலயத்தில் `உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்’ என்ற பெயரில் ‘டோஸ்விடும் கூட்டம்’ நடத்தப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர்கள் 153 பேரில், அதிக புகாருக்குள்ளான 91 பேர் மட்டுமே அந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்களாம். துணை மேயர் மகேஷ்குமார், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு முன்னிலையில் கவுன்சிலர்களிடம் பேசிய நேரு, ‘நீங்க வேலையெல்லாம் நல்லாத்தான் பண்ணுறீங்க. ஆனா, கூட இருக்கிறவங்க சரியில்லை’ என்று சாஃப்ட்டாக ஆரம்பித்தவர், பிறகு வறுத்தெடுத்துவிட்டாராம். ‘இனிமே பொதுமக்கள் உங்களை போன்ல கூப்பிட்டா, நீங்கதான் பேசணும். மத்தவங்களைப் பேசவிடக் கூடாது. பெண் கவுன்சிலர்கள் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு பண்ணப் போனா, நீங்க மட்டும் போங்க. உறவினர்கள் வேணாம். சில கவுன்சிலர்கள் மேல ரொம்பப் புகார்கள் வருது. இனியும் தொடர்ந்தால், பின்விளைவு மோசமா இருக்கும். ஜாக்கிரதை’ என்று தனக்கே உரிய பாணியில் எச்சரித்திருக்கிறார் நேரு.”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் ஒரு பக்கம்... நேரு மறு பக்கம்... பரேடு வாங்கிய தி.மு.க கவுன்சிலர்கள்!

“ஓஹோ...”

“இந்தக் கூட்டத்தில் நடந்ததைத்தான் கொஞ்சம் நாகரிகமான வார்த்தைகளில், நாமக்கல் மாநாட்டில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். ஒரு பக்கம் ஸ்டாலினும்... இன்னொரு பக்கம் நேருவும் எடுத்த பரேடில் மிரண்டு போயிருக்கிறார்கள் தி.மு.க கவுன்சிலர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும். இந்த ரெய்டு ஒரு பக்கம் இருக்க, அந்த நாமக்கல் மாநாட்டில் எங்களை மேடையில் உட்காரவைக்கவில்லையே என்று வருத்தத்தில் இருக்கிறார்களாம் கொங்கு மண்டல மேயர்கள். சென்னை மேயர் பிரியா, திருச்சி மேயர் அன்பழகனுக்கு மட்டும் மேடையில் இடம் கொடுத்ததே அவர்களின் வருத்தத்துக்குக் காரணம்.”

“ம்...”

“மாநாட்டைவைத்து இன்னொரு பஞ்சாயத்தும் ஓடுகிறது. மாநாட்டு ஏற்பாடுகளை கவனித்தது அமைச்சர் செந்தில் பாலாஜிதான் என்று ஒரு தரப்பு சொல்ல, தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்.பி-யோ, ‘நான்தான் முழு ஏற்பாடுகளையும் செய்தேன்’ என்று தம்பட்டமடிக்கிறாராம். ‘முதல்வர் குடும்ப உறவின் தயவினால், மாவட்ட அரசியலிலிருந்து சீனியர்களை ஓரங்கட்டியவர், இப்போது செந்தில் பாலாஜியிடமும் முட்ட ஆரம்பித்துவிட்டார். இதெல்லாம் எங்கே போய் முடியப்போகிறதோ?’ என்று முணுமுணுக்கிறார்கள் கொங்கு மண்டல உடன்பிறப்புகள்” என்ற கழுகாருக்கு பண்ருட்டி பலாச்சுளைகளைத் தட்டில் நிரப்பிக்கொடுத்தோம். ருசித்தவாறே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

ராஜேஸ்குமார்
ராஜேஸ்குமார்

“கம்யூனிஸ்ட்டுகளால் தனது அலுவலகம் தாக்கப்பட்டபோதுகூட கோபப்படாத ராகுல் காந்தி, 3-ம் தேதி கேரளாவின் வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது பினராயி மீது பாய்ந்திருக்கிறார். ‘என்னை விசாரித்த அமலாக்கத்துறை, ஏன் தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனை விசாரிக்கவில்லை?’ என்று சீறியிருக்கிறார். ‘கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் 44 அலுவலகங்களையும், இந்திரா காந்தி சிலையையும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உடைத்திருக்கிறார்கள். கேரளாவில் சி.பி.எம்-மை எதிர்த்து நாங்கள் அரசியல் செய்ய வேண்டுமானால், நீங்கள் மாநில ஆட்சிக்கு எதிராகப் பேசியே ஆக வேண்டும்’ என்று மாநிலத் தலைவர் சுதாகரனும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனும் நிலைமையை எடுத்துச் சொன்னதாலேயே ராகுல் அப்படிப் பேசினாராம்” என்று புறப்படும் மூடுக்கு வந்த கழுகார்,

செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி

“தி.மு.க-வைச் சேர்ந்த சிட்டிங் எம்.பி ஒருவர், சென்னைப் புறநகரில் இருக்கும் தனது நிலத்தில், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான அப்ரூவலுக்காக மாதக்கணக்கில் அலைந்து கொண்டிருக்கிறார். சி.எம்.டி.ஏ அதிகாரிகளே ஓ.கே சொல்லியும், மூத்த அமைச்சர் ஒருவர் ரெக்கமெண்ட் செய்தும் பிளான் அப்ரூவல் கிடைக்கவில்லை. விசாரித்ததில், அந்த நிலம் அமைந்திருக்கும் மாவட்ட அமைச்சரின் புதல்வர்தான் காரணம் என்று தெரியவந்ததாம். ‘ஸ்வீட் பாக்ஸ்’ நகராத வரை, எந்த அப்ரூவல் ஃபைலும் நகராது என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்களாம். வேறு வழியின்றி எம்.பி தரப்பு நீதிமன்றம் செல்ல முடிவெடுத்திருப்பதாகத் தகவல்” என்றபடி கிளம்பிச் சென்றார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. ‘அப்படி ஏதாவது நடந்தால் தனக்குச் சிக்கல்’ எனக் கருதும் அந்த அதிகாரி, தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றப்பத்திரிகையைத் தாமதப்படுத்திவருகிறாராம்.

* பாங்காக்கில் இந்தியத் தூதரக கவுன்சலராக அயல் பணியில் பணியாற்றும் தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான ஐ.ஜி செந்தில்வேலன், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பவிருக்கிறார். அவருக்குத் தமிழ்நாட்டில் முக்கியமான பதவி காத்திருக்கிறதாம்!

* அ.தி.மு.க தயவில் எம்.பி-யாக இருக்கும், வாரிசுத் தலைவர் கட்சியைக் கலைத்துவிட்டு, தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமாகும் மூடில் இருக்கிறாராம். இது அவருக்குப் புதிதல்ல என்றாலும், முன்பைப்போலவே அவருக்கு மத்தியில் பெரிய பதவி கிடைப்பது சந்தேகம்தானாம்.