Published:Updated:

மிஸ்டர் கழுகு: “கோஷ்டி சண்டையை விட்டுடுங்க!” - அமித் ஷா அட்வைஸ்... சீனியர்ஸ் அப்செட்!

அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நியமனம் தொடங்கி, சமீபத்தில் நடந்த எந்த நியமனத்திலும் ஆளுநர், தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்கவில்லையாம்.

மிஸ்டர் கழுகு: “கோஷ்டி சண்டையை விட்டுடுங்க!” - அமித் ஷா அட்வைஸ்... சீனியர்ஸ் அப்செட்!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நியமனம் தொடங்கி, சமீபத்தில் நடந்த எந்த நியமனத்திலும் ஆளுநர், தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்கவில்லையாம்.

Published:Updated:
அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா

“நாளுக்கு நாள் தமிழகத்தில் அனல் அதிகமாகிக்கொண்டே போகிறதே...” என்ற பீடிகையுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “வெயிலைப் பற்றிச் சொல்கிறீரா... துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத் திருத்தத்தைப் பற்றிச் சொல்கிறீரா..?” என்றபடி, வெயிலுக்கு இதமாக நுங்கு சர்பத் கொடுத்தோம். ருசித்தபடியே, உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“ஆளுநரின் அட்ராசிட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகவே, துணைவேந்தர் நியமனச் சட்டத் திருத்தத்தைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகச் சொல்கிறது ஆளும் தரப்பு. இதை உறுதிப்படுத்தும்விதமாகவே முதல்வரும், ‘தமிழ்நாட்டில், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கியுள்ளது’ என வார்த்தைகளில் கடுமை காட்டியிருக்கிறார். இந்தச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். ஆனால், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நேரடியாகச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்யாமல், ‘அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்தார்’ என்ற காரணத்தைச் சொல்லி வெளிநடப்பு செய்தனர்.”

“கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை அப்படித்தானே..!”

“ஆமாம். துணைவேந்தர் நியமனத்தைப் பொறுத்தவரையில், இதுநாள் வரை ஆளுநர் மாளிகை சார்பில் துணைவேந்தர் தேடல்குழு அமைக்கப்படும். அக்குழுவில் மாநில அரசுத் தரப்பு உறுப்பினர்களே மெஜாரிட்டியாக இருப்பார்கள். அந்தத் தேடல்குழு மூன்று நபர்களைப் பரிந்துரை செய்யும். அவர்களிலிருந்து ஒருவரை ஆளுநர் தேர்வுசெய்வார். ஆனால், இப்போது புதிதாக நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டத் திருத்தத் தீர்மானம், ‘உயர்கல்வித்துறை அமைச்சரே ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் இணைவேந்தராக நீடிப்பார்’ என்கிறது. அதேபோல், தேடல்குழு அமைப்பதிலிருந்து, துணைவேந்தரைத் தேர்வுசெய்வது வரை மாநில அரசே இனி நேரடியாக மேற்கொள்ளும் என்பதோடு, புகாருக்குள்ளாகும் துணைவேந்தர்களுக்கு விளக்கமளிக்கும் உரிமையும் இந்தத் தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்துக்கும் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். பல ஃபைல்களை அவரே கிடப்பில் போட்டுவைத்திருக்கும் நிலையில், இப்போது அவரது பவரைப் பிடுங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எப்படிக் கையெழுத்திடுவார்... ‘பொறுத்திருந்து பாருங்கள், வேடிக்கை நிறைய இருக்கிறது’ என்கிறார்கள் ராஜ்பவன் தரப்பினர்.”

“எப்படியிருந்தாலும் இது ஆளுநருக்கு வைக்கப்பட்ட செக்தான். அதுசரி... திடீரென ஏன் இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்... அதைச் சொல்லும்.”

“தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நியமனம் தொடங்கி, சமீபத்தில் நடந்த எந்த நியமனத்திலும் ஆளுநர், தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்கவில்லையாம். பல்கலைக்கழகங்களுக்கு விசிட் செல்வது, நிர்வாக விவகாரங்கள் தொடர்பாக அறிக்கை கேட்பது என ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டிருக்கிறார். மேலும், ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர் மாநாடு குறித்தும் அரசுக்கு எந்தத் தகவலும் சொல்லப்படவில்லையாம். அதனால்தான் இந்தச் சட்டத் திருத்தத்தை தமிழக அரசு, மாநாடு நடந்த அதேநாளில் அதிரடியாக நிறைவேற்றியிருக்கிறது என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: “கோஷ்டி சண்டையை விட்டுடுங்க!” - அமித் ஷா அட்வைஸ்... சீனியர்ஸ் அப்செட்!

“அமித் ஷாவின் சென்னை விசிட் சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறதே, என்ன காரணமோ..?”

“அரசு சார்பில் யாரும் அமித் ஷாவை வரவேற்கச் செல்லவில்லை. முன்னதாக, ‘மாநில அரசின் எந்த புரோட்டாகால் அணுகுமுறையும் தேவையில்லை’ என்று மத்தியிலிருந்தே சொல்லப்பட்டுவிட்டதாம். தமிழக பா.ஜக சார்பில், பதினைந்து பேர் மட்டும் வரவேற்கச் சென்றுள்ளனர். எல்லோரையும் முந்திக்கொண்டு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சால்வை கொடுத்து வரவேற்றதை, பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கோஷ்டி எதிர்பார்க்கவில்லையாம். ஒருவழியாக அமித் ஷாவின் காரில் அண்ணாமலை ஏறிவிட, அவருடன் சி.டி.ரவியும் சென்றிருக்கிறார். முருகன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டவர்கள் பின்னால் வந்த காரில் ஏறியிருக்கிறார்கள்.”

“ஓஹோ...”

“எப்போது சென்னை வந்தாலும் தனியார் ஹோட்டலில் தங்கும் அமித் ஷா, இந்த முறை ‘மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் எந்த இடமும் வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டு, ஆவடியிலுள்ள சி.ஆர்.பி.எஃப் கேம்ப் விருந்தினர் மாளிகையில் சென்று தங்கியிருக்கிறார். அங்கே இரவு உணவின்போது, அமித் ஷாவுடன் அண்ணாமலை, சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி, முருகன் உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அ.தி.மு.க-வைப் பற்றிய பேச்சின்போது, ‘அ.தி.மு.க வீக்காக இருப்பது நமக்கு நல்லதுதான்’ என்று கேசவ விநாயகம் தரப்பில் சொல்லப்பட.... அப்போது குறுக்கிட்ட அமித் ஷா ‘ஒன்றுபட்ட அ.தி.மு.க-வாக இருந்தால் நமக்குப் பயன் இருக்கிறதா... நாம் கேட்கும் சீட்டைத் தருவார்களா?’ என்று கேட்க, ‘அது சாத்தியமில்லை’ என்றிருக்கிறார் அண்ணாமலை. வேறொன்றும் சொல்லாமல் அமித் ஷா புன்னகைத்தாராம்.”

அண்ணாமலை
அண்ணாமலை

“இந்தச் சந்திப்பில், அண்ணாமலைக்கும் டோஸ் விழுந்ததாமே?”

“தி.மு.க அரசுக்கு எதிராக, தான் சேகரித்த ஆவணங்கள், தரவுகளை அமித் ஷாவிடம் பட்டியலிட்டிருக்கிறார் அண்ணாமலை. அமைதியாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, ‘அதெல்லாம் இருக்கட்டும். கட்சியை வளர்க்கச் சொன்னா, நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?’ என அண்ணாமலையிடம் கேட்க, மனிதர் ஷாக்காகியிருக்கிறார். பூத் கமிட்டி விவரங்களையெல்லாம் அடிக்கோடிட்டு அமித் ஷா பேச, அண்ணாமலை அமைதியாகி விட்டாராம். அதே வேகத்தில், அங்கிருந்த சீனியர்கள் பக்கம் திரும்பிய அமித் ஷா, அவர்களில் ஒருவருக்கு அழுத்தமாகப் புரியும்படி ‘தேவையில்லாத கோஷ்டி சண்டையை விட்டுடுங்க... ஒழுங்கா கட்சியை வளர்க்கப் பாருங்க’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார். ‘கட்சித் தலைவராக யார் இருந்தாலும், அவருக்கு ஆதரவானவர்களை நியமித்தால்தான் கட்சியை நடத்த முடியும். அதனால், நிர்வாகிகள் பட்டியலிலுள்ள பிரச்னைகளை முடித்துவிட்டு சீக்கிரம் பட்டியலை வெளியிட வேண்டும்’ என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். சீனியர்கள் முகத்தில் ஈயாடவில்லையாம்.”

“வெங்கைய நாயுடு - ஸ்டாலின் சந்திப்பில் என்ன நடந்தது?”

‘‘துணைவேந்தர் நியமனம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு, துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவை அமைச்சர் துரைமுருகன், எம்.பி டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் இறையன்பு சகிதம் சந்தித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தத் தீர்மானம் தொடர்பாகவும், ஆளுநரின் அதிகார அத்துமீறல் தொடர்பாகவும் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ‘அனைத்தையும் டெல்லி மேலிடத்தின் பார்வைக்குக் கொண்டு செல்வதாக’க் கூறிய வெங்கைய நாயுடு, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகச் சில முக்கியமான வார்த்தைகளைப் பேசியதாகச் சொல்கிறார்கள்.”

“நடக்கட்டும்... சசிகலாவிடம் கொடநாடு விவகாரத்தில் நடத்தப்பட்ட முழு விசாரணை நிலவரமும் தெரிய வந்ததா?”

“உண்மையில் இது விசாரணையாக இல்லையாம். சசிகலாவிடமிருந்து தகவல்களை வாங்கிச் செல்லவே கோவையிலிருந்து காவல்துறை வந்திருந்தது என்கிறார்கள். விசாரணையில், சில கேள்விகளுக்கு, ‘தெரியாது’ என்று பதில் சொன்னவர், குறிப்பிட்ட சில விவகாரங்களுக்கு மட்டும் விளக்கமாகவே பதிலளித்திருக்கிறார்.”

“ஓஹோ!”

“ ‘கொடநாடு எஸ்டேட் யாருடையது என்று தெரிந்தும் அங்கு கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றால், ஆளும் தரப்பின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாக எனக்குத் தகவல் வந்தது’ என்றும் சசிகலா சொல்ல, ‘இந்தக் கொள்ளை எதற்காக நடந்திருக்கும்?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘அங்குதான் அக்கா பல ஃபைல்களை வைத்திருந்தார். எடப்பாடி, பன்னீர் உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட ஃபைல்களையும், சில வீடியோக்களையும்கூட அங்குதான் வைத்திருந்தார். இப்போது என்னென்ன பொருள்கள் காணாமல் போயிருக்கின்றன என்பதை நான் அங்கு சென்று பார்த்தால்தான் தெரியும்’ என்று எடப்பாடியை இந்த வழக்கில் கொண்டுவருவதற்கான பாயின்ட்களை அடுக்கியிருக்கிறார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சயான், வயலார் மனோஜ் உள்ளிட்டவர்கள் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சொல்லியிருக்கிறார்.”

சசிகலா
சசிகலா

“காவல்துறை தரப்பில் என்ன சொல்கிறார்கள்?”

“கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு சசிகலா, கொடநாட்டுக்கு இதுவரை செல்லவில்லை என்பதால், அவரால் அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையாக பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், எடப்பாடிக்கு இதில் தொடர்புள்ளது என்பதைத் தனது பதிலின்போது அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். சசிகலாவின் பதிலை வைத்து இந்த வழக்கில் அடுத்து எடப்பாடிக்கு சம்மன் வழங்க வாய்ப்புள்ளது. அப்போதுதான் சசிகலா எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும். காவல்துறையும்கூட இதே முடிவுக்கு வந்துவிட்டதால், விரைவில் எடப்பாடிக்கு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்மன் அனுப்பப் போவது உறுதி என்கிறார்கள்.”

“சென்னையில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளதே?’’

“சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதி விக்னேஷ் இறந்த சம்பவத்தில், சிசிடிவி பதிவு ஒன்றைப் பார்த்த போலீஸ் உயரதிகாரி, இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள காவலர்களைக் கடிந்துகொண்டதோடு மூவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார். உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷின் அண்ணன் வினோத், ‘ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இந்தப் பிரச்னையை போலீஸார் மூடி மறைக்க முயல்கிறார்கள்’ எனக் குற்றம்சாட்டியிருப்பதை அடுத்தே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் டி.ஜி.பி சைலேந்திரபாபு. இந்த வழக்கு சாதாரணமாக முடியப்போவதில்லை. வழக்கு பூதாகரமாகும் பாருங்கள்” என்று மர்மப் புன்னகையை உதிர்த்தபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism