Published:Updated:

மிஸ்டர் கழுகு: அடகுக் கடையில் பணம்! - தேர்தலுக்குத் தயாராகும் ஆளுங்கட்சி...

திருமாவளவன் பேச்சால் தி.மு.க தரப்பு கடும் அப்செட் என்கிறார்களே..?

பிரீமியம் ஸ்டோரி

‘ஒருநாள் மழைக்கே சென்னை மிதந்துவிட்டதே!’’ - ரெயின் கோட்டைக் கழற்றியபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். சூடாக இஞ்சி டீயை கழுகாருக்கு அளித்தபடி, ‘‘இது வழக்கமானதுதானே... சென்னையில் 60 சதவிகிதத்துக்கும் மேலான சாலைகள் பல்லிளித்துவிட்டன. மழைநீர் வடிகால்வாய்கள் எல்லாம் என்னவாகின என்றே தெரியவில்லை’’ என்றோம். ஆமோதித்த கழுகார், ‘‘மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆள்பவர்களுக்குப் புரிந்தால் சரி...” என்றபடி செய்திகளுக்குள் தாவினார்.

‘‘சமீபத்தில் ரஜினி பெயரில் வெளியான ஓர் அறிக்கை சமூக வலைதளங்களைக் கலங்கடித்தது. ‘ஜனவரி 15-ம் தேதிக்குள் கொரோனா தொற்று சரியாகாவிட்டால், என்னால் அரசியல் பயணத்தில் ஈடுபட முடியாது’ என்று ரஜினி குறிப்பிட்டதைப்போல வெளியான அந்த அறிக்கையை, தான் வெளியிடவில்லை என்று ரஜினி மறுத்திருக்கிறார். அதேசமயம், ‘அதில் கூறப்பட்டுள்ள மருத்துவம் சார்ந்த விஷயங்களும் ஆலோசனைகளும் உண்மைதான்’ என்றும் உறுதி செய்திருக்கிறார். விசாரித்தால், கதையே வேறு என்கிறார்கள். ரஜினிக்கு நெருக்கமான மூவரணியைக் கையிலெடுத்து, தி.மு.க குடும்பப் பிரமுகர் ஒருவர் நடத்திய திருவிளையாடலை ஏற்கெனவே நான் கூறியிருந்தேன் அல்லவா... இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: அடகுக் கடையில் பணம்! - தேர்தலுக்குத் தயாராகும் ஆளுங்கட்சி...

“விளக்கமாகச் சொல்லும்...”

“ரஜினிக்கு வேண்டப்பட்ட ‘நிலையக் கலைஞர்’கள் அனைவருமே ரஜினி தங்களிடம் பேசிய விவரங்களை வெளியே வந்தவுடன் பெருமையாக வாய்ப்பந்தல் போட்டுவிடுகிறார்கள். இப்படித்தான் ரஜினிக்கு மருத்துவர்கள் சொன்ன அறிவுரைகளும் அந்த குடும்பப் பிரமுகரின் காதுகளுக்குச் சென்றிருக்கிறது. கடைசி நேரத்தில் ரஜினியின் அரசியல் வருகை தி.மு.க-வுக்கு பாதகமாகிவிடக் கூடாது என்பதால், மேற்கண்ட தகவல்களை வைத்து, ரஜினியின் பெயராலேயே போலியாக ஓர் அறிக்கையை உலவவிட்டிருக்கிறார் அந்தப் பிரமுகர். இதைக் கண்டு ஜெர்க் ஆன ரஜினி, அதன் பிறகே வேறு வழியில்லாமல் அந்த அறிக்கைக்கு விளக்கம் அளித்திருக்கிறார். ஜனவரியிலும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லையென்றால், ரஜினியின் அரசியல் பிரவேசம் அம்போவென காலாவதியாகிவிடும் என்கிறார்கள்.’’

‘‘திருமாவளவன் பேச்சால் தி.மு.க தரப்பு கடும் அப்செட் என்கிறார்களே..?’’

‘‘தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலர் இது குறித்து காட்டமாகக் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் விவாதித்திருக்கிறார்கள். ‘தேர்தல் நேரத்துல தேவையில்லாம எதுக்காக மனு தர்ம விவகாரத்தை திருமா கையிலெடுக்கணும்... அவர்களைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிடலாம்னாலும் கேட்க மாட்டேங்குறீங்க’ என்று கோபித்திருக்கிறார்கள். அவர்களிடம், ‘திருமா பேச்சுக்கு நாம் ஆதரவு கொடுக்காவிட்டால், பா.ஜ.க-வுக்கு நாம் பணிந்துவிட்டோம் என்று தகவல் பரப்புவார்கள்’ என்று சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். திருமாவின் கொந்தளிப்புக்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.’’

‘‘என்னவாம்?’’

‘‘பா.ம.க-வுடன் தி.மு.க நடத்தும் மறைமுகப் பேச்சுவார்த்தை திருமாவுக்குப் பிடிக்கவில்லை. தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வன்னியர் சமூக தி.மு.க பிரமுகர் ஒருவரிடம், 60 தொகுதிகளில் பேரத்தை ஆரம்பித்து 48 தொகுதிகள் வரை இறங்கி வந்திருக்கிறதாம் பா.ம.க தரப்பு. தி.மு.க தரப்பில் 15 தொகுதிகளிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள். ‘அதிகம்போனால் தைலாபுரத்துக்கு 20 தொகுதிகளுக்கு மேல் தரக் கூடாது’ என்பதிலும் தெளிவாக இருக்கிறது அறிவாலயம். பா.ம.க-வைக் கூட்டணிக்குள் இழுத்தால், விடுதலைச் சிறுத்தைகளால் அந்தக் கூட்டணியில் தொடர முடியாது. ‘இந்தக் கணக்குகள் தெரிந்ததால்தான் மனுதர்ம விவகாரம் மூலமாகக் கூட்டணிக்குள் அதிர்வைக் கிளப்பி, ஸ்டாலின் வாயாலேயே தனக்கு ஆதரவு தெரிவிக்கும்படியான சூழலை உருவாக்கிவிட்டார்’ என்கிறார்கள் திருமாவுக்கு நெருக்கமானவர்கள்.’’

மிஸ்டர் கழுகு: அடகுக் கடையில் பணம்! - தேர்தலுக்குத் தயாராகும் ஆளுங்கட்சி...

‘‘ஓஹோ... ‘தி.மு.க-வுடன் உறவா?’ என்று சின்ன மருத்துவர் கோபித்திருப்பாரே?’’

‘‘அவர் கோபத்தை யார் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள்? 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்குப் போனபோதும், இதேபோலத்தான் முறுக்கிக்கொண்டு நின்றார் அன்புமணி. முடிவில் ராமதாஸின் கட்டளையை ஏற்கவில்லையா? அ.தி.மு.க கூட்டணியில் துணை முதல்வர் பதவியும், 60 சீட்டும் பா.ம.க எதிர்பார்க்கிறது. இதற்கு ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டாராம் எடப்பாடி. இதைத் தொடர்ந்துதான் தி.மு.க முகாமிடமும் பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறார்கள். முடிவாக, `தி.மு.க என்ன ஒதுக்குகிறதோ, அதை ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்துக்குள் நுழைவதுதான் புத்திசாலித்தனம்’ என்று மகனுக்கு அட்வைஸ் செய்திருக்கிறாராம் ராமதாஸ்.’’

‘‘சரிதான்!’’

‘‘ஆளும்கட்சித் தரப்பில் தேர்தல் செலவுகளுக்கான நிதி கிட்டத்தட்ட அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று சேர்ந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். சட்ட மன்றத் தொகுதிகளிலுள்ள முக்கியஸ்தர்களின் அடகுக் கடைகளை லிஸ்ட் எடுத்து, அங்கே பல லட்ச ரூபாய் பணம் பதுக்கிவைக்கப் பட்டிருக்கிறதாம். தேர்தல் நேரத்தில், அடகுக் கடைகள் மூலமாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதுதான் திட்டமாம்.’’

“அடேங்கப்பா!” என்று ஆச்சர்யத்தைப் பகிர்ந்தபடி, கழுகாருக்கு சமோசாக்களைத் தட்டில் அடுக்கினோம். சூடாக சமோசாவைச் சுவைத்தவரிடம், ‘‘ஜூ.வி-யின் புதிய பகுதிகளுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி?’’ என்று கேட்டோம்.

‘‘கடந்த இதழில் சில பக்கங்கள் சர்ப்ரைஸ் என்றால், இந்த இதழில் வேறு சில பக்கங்களைப் புதிய பகுதிகளாகக் கொண்டு வந்து அசத்தியிருக்கிறீர்! ரெஸ்பான்ஸுக் கென்ன... வாசகர்களுக்குக் கொண்டாட்டம்தான். வாரா வாரம் ஏதாவது செய்து அசத்தப்போகிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது’’ என்று நம்மைப் பாராட்டியவர்...

‘‘காவல்துறையின் உச்சத்திலிருக்கும் அதிகாரி ஒருவர் சென்னை புறநகர்ப் பகுதியான திருப்போரூர் அருகே நீச்சல் குளத்துடன்கூடிய பங்களா கட்டிவருகிறாராம். அதேபோல், சென்னைக்கு வெளியே முக்கியப் பதவியில் இருக்கும் இன்னோர் உயரதிகாரி விரைவில் ஓய்வு பெறவிருக்கிறார். அவருக்காக ஆறு கோடி ரூபாய் செலவில் கோவையில் மாளிகை ஒன்று தயாராகிறதாம். ஐ.பி.எஸ் வட்டாரத்தில் இந்த விவகாரங்கள் பரபரப்பாகப் பேசப்படுகின்றன’’ என்ற கழுகார், ‘‘அடுத்த மழை ஆரம்பிப்பதற்குள் கிளம்புகிறேன்” என்றபடி ரெயின் கோட்டை மாட்டிக்கொண்டு பறந்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

l 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகை விந்தியாவைக் களமிறக்க முடிவெடுத்திருக்கிறதாம் அ.தி.மு.க தலைமை. இதையறிந்து, அங்கு பல மாதங்களாகவே தேர்தல் வேலைகளைப் பார்த்துவந்த மூத்த ‘கெளரவ’த் தலைவரின் குடும்பப் பிரமுகர், ‘மெயின் ரோடு’தான் இந்த வேலையைப் பார்த்திருக்கணும்... சீட்டு மட்டும் கிடைக்கலை, ரோட்டைப் பள்ளம் தோண்டிடுறேன்’ என்று கொந்தளிக்கிறாராம்!

l ‘‘காங்கிரஸ் கட்சிக்கு இருபதுக்கும் குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டால், தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேறலாம். நாம் இல்லாதது அவர்களுக்கும் வாக்கு சதவிகிதத்தைக் குறைக்கும்’’ என்று தமிழக காங்கிரஸ் தலைமைக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார் ப.சிதம்பரம். இதையடுத்து, இதை ‘தற்கொலை’ முயற்சி என்று சிதம்பரத்துக்கு ஆதரவான சில தலைவர்களே மேலிடத்துக்கு ரகசியமாகத் தந்தியை தட்டிவருகிறார்களாம்!

l ம.நடராசன் தந்தையின் பெயரில் செயல்படும் ‘மருதப்பா அறக்கட்டளை’ சார்பில், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட பத்துக் கோடி ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றனவாம். பணத்தைச் செலுத்துவதற்கான தேதியையும் ஆஸ்தான ஜோதிடர்கள் மூலம் குறித்து வைத்திருக்கிறார்களாம்.

l ‘பா.ஜ.க-வின் வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி கொடுத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும்’ என்று முதல்வருக்கு நோட் போட்டுள்ளது உளவுத்துறை. ‘வட மாவட்டங்கள் வழியாக இந்த யாத்திரை செல்லும்போது விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு காட்டுவார்கள். இதனால், யாத்திரைக்கு அனுமதியைப் பொறுமையாக வழங்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதை முன்னிட்டு, முதல்வரும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். இதற்கிடையே அக்டோபர் 29-ம் தேதி இரவு, விடுதலைச் சிறுத்தைகள் தரப்பிலும் ‘யாத்திரை’க்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்!

ஆளுநருக்கு அழுத்தம்!

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு அளிக்கக் கோரும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி தராத நிலையில், உள்ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. ‘இந்த விவகாரத்தில் உறுதியான சில முடிவுகளை எடுத்தால்தான் அரசியலில் நிலைக்க முடியும்’ என்று எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் நின்றதால், இந்த அரசாணை வெளிவந்ததாம். ‘மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதற்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைதான் இது’ என்கிறது கோட்டை வட்டாரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு