“வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான ஃபார்ம் 16-ஐ தாக்கல் செய்துவிட்டீர்களா?” என்றபடி என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு, சூடான மசால் வடையை நீட்டியபடி, “அதுதான் டிசம்பர் 31 வரை நீட்டித்திருக்கிறார்களே... என்ன, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ரெய்டை கவனித்துவிட்டு வந்தீரா... அதுதான் 48 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்களே... பெரிதாக ஏதாவது கிடைத்ததா?” என்று கேட்டோம்...
“ம்ம்க்கும்... ஏற்கெனவே எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி வீடுகளில் ஆதாரங்களையும் ஆவணங்களையும் அள்ளிவிட்டார்களாக்கும்... எல்லாம் கண்துடைப்பு நடவடிக்கை என்று அ.தி.மு.க-வினரே நக்கல் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இத்தனைக்கும் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோதே, அக்டோபர் மத்தியில் தனக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடக்கும் என்று கணித்துவிட்டாராம் விஜயபாஸ்கர். அதனால்தான், நடந்த முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக எதுவும் பேசாமல் அமுக்கமாக இருந்தார் என்கிறார்கள். இந்த நிலையில்தான் ரெய்டு நடப்பதற்கு முந்தைய நாள் இரவே ‘நாளை காலை ரெய்டு வரப்போகிறது’ என்று விஜயபாஸ்கர் தரப்புக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. அதனால், அக்டோபர் 18-ம் தேதி அதிகாலையே அவர் ரெய்டுக்காகத் தயாராகக் காத்திருந்தார் என்கிறார்கள்.”
“சரி, ரெய்டில் ஆவணங்கள்தான் சிக்கவில்லை... உமக்காவது விசேஷ தகவல் ஏதாவது கிடைத்ததா?”

“ம்ம்... கடந்த 2017-ம் ஆண்டு விஜயபாஸ்கர் வீட்டில் ஐ.டி சோதனை நடந்தபோது, அவரின் மகளை தூக்கிக்கொண்டு மீடியாவிடம் காட்டி, ‘என் மகளை ஸ்கூலுக்குக்குக்கூட அனுப்பவிடாம அடைச்சுவெச்சுருக்காங்க’ என்று கதறி அனுதாபம் தேடினார். இந்த முறை அதிகாரிகள் விசாரணைக்குச் சென்றபோது, வீட்டில் மனைவியும் மகளும் இல்லை. ‘உங்கள் மனைவி எங்கே?’ என்று அதிகாரிகள் கேட்டபோது, ‘அவருக்கு கொரோனா; மனைவியோட மகளும் இருந்ததால, ரெண்டு பேரையும் தனிமையில் வெச்சிருக்கேன். அவங்களை நீங்க விசாரிக்க முடியாது’ என்று சொல்லி, கொரோனாவுக்கான சான்றிதழையும் காட்டியிருக்கிறார்.’’
‘‘சரிதான்...’’
‘‘விஜயபாஸ்கரின் நிழலாக இருந்த அவரின் உதவியாளர் சரவணன் வீட்டிலும், விஜயபாஸ்கரிடம் பணிபுரிந்த சீனிவாசன், அஜய் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் ரெய்டு நடந்துள்ளது. மருத்துவத்துறையில் சரவணன் கைகாட்டும் நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படும் என்ற நிலை கடந்த ஆட்சியில் இருந்தது. தற்போது சரவணன், தி.மு.க அமைச்சர்கள் சிலருடன் நெருக்கத்தில் இருக்கிறார். பதினைந்து நாள்களுக்கு முன்பாகவே விஜயபாஸ்கர் குறித்த ஒரு ஃபைல் முதல்வரின் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறது. அது குறித்து தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் மூலம் அறிந்துகொண்டு, அதை விஜயபாஸ்கருக்கு பாஸ் செய்தாராம் சரவணன். அதனால், சரவணனும் ரெய்டை எதிர்பார்த்தே இருந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு, தனக்கு நெருக்கமான சுகாதார ஆய்வாளர் ஒருவர் நடத்தும் திருவல்லிக்கேணி ஃபைனான்ஸ் அலுவலகத்துக்குச் சென்ற சரவணன், அங்கு சில டீலிங்குகளை முடித்திருக்கிறார். சென்னை, நந்தனத்திலுள்ள சரவணன் வீட்டுக்கு ரெய்டுக்குச் சென்றபோது, அவரது வீடு பூட்டப்பட்டிருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்த போலீஸார், அவரின் வீட்டுக்கு சீல் வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதேபோலத்தான் கடந்த முறை நடந்த ஐ.டி ரெய்டிலும் பல மணி நேரம் அதிகாரிகளைக் காக்கவைத்தே பிறகே மெதுவாக வந்திருக்கிறார். அதேபோல விஜயபாஸ்கரின் இன்னோர் உதவியாளராக இருந்த அன்பானந்தத்தின் புதுக்கோட்டை நரிமேடு வீடு, அடப்பயன்வயல் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது, அன்பானந்தத்தின் மூன்று வீடுகளுக்கும் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வரவேற்பறை முதல் புழக்கடை வரை சென்ட்ரலைஸ்டு ஏசி போடப்பட்டிருப்பதைக் கண்டு வாயடைத்துப்போனார்களாம்!


‘‘எல்லாம் சரி... லஞ்ச ஒழிப்புத்துறை என்ன சொல்கிறது?’’
‘‘தகவல் கசியவிட்டது எல்லாமே விஜயபாஸ்கரை சிக்கவைக்கப் போட்ட நாடகம்தான் என்கிறார்கள்... ‘இத்தனை நாள் கழித்து ரெய்டு நடந்தால் பெரிதாக எதுவும் சிக்காது என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், ஏற்கெனவே நடந்த ஐ.டி ரெய்டில் சிக்கிய ஆவணங்களை வாங்கியிருக்கிறோம். அந்த ஆவணங்களுக்குக் கூடுதல் பலம் சேர்க்கவே தற்போதைய ரெய்டு நடத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் அவரை லூஸில்விட்டு, சில நகர்வுகளையும் கண்காணித்திருக்கிறோம். விரைவில் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் அவரைக் கொண்டுவருவோம்’ என்கிறார்கள்!”
“அதையும்தான் பார்ப்போம்... துரைமுருகன் அழாத குறையாக புலம்பினாராமே?”
‘‘ஆமாம்... சமீப நாள்களாக, ‘கட்சி, ஆட்சி அதிகாரம் இரண்டிலும் ஸ்டாலினுக்கு அடுத்து நான்தான். யாராவது தவறு செய்தது தெரிந்தால் 24 மணி நேரத்தில் கட்டம் கட்டப்படுவீர்கள்’ என்று பொதுமேடைகளில் முழங்கிவந்தார் துரைமுருகன். கூடுதலாக, ‘சம்பத், எம்.ஜி.ஆர்., வைகோ என இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது’ என்றும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் முழங்கினார் அல்லவா... இது கூட்டணியிலிருக்கும் வைகோவுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முதல்வர் காதுக்கும் செல்லவே... துரைமுருகனை அழைத்த முதல்வர், ‘அண்ணே, தயவு செஞ்சு கொஞ்ச நாளைக்கு எதுவும் பேசாதீங்க. பத்திரிகையாளர்களையும் சந்திக்காதீங்க’ என்று கறார் காட்டினாராம். அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டு வந்தவர், ‘அண்ணன் எப்போ கிளம்புவான்... திண்ணை எப்போ காலியாகும்னு காத்திருக்கும் சிலர் என்னைப் பத்தி தலைவர்கிட்ட வத்தி வெச்சிருக்காங்க’ என்று புலம்பியிருக்கிறார்’’ என்ற கழுகாருக்கு சூடான இஞ்சி டீயை நீட்டினோம். அதைப் பருகியபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

‘‘சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஐந்து பேர் கூடுதல் டி.ஜி.பி பதவியிலிருந்து டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். இதனால் இதுவரை ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்த சென்னை போலீஸ் கமிஷனர் பதவி, டி.ஜி.பி அந்தஸ்துக்குத் தரம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, டி.ஜி.பி-யாக பதவி உயர்வுபெற்ற சங்கர் ஜிவால், ஆணையர் பதவியில் தொடர்வார் என்று அரசு தெரிவித்தது. இதனால், சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு காய்நகர்த்திய ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். சங்கர் ஜிவால் மட்டுமல்லாமல், டெல்லி ஐ.பி-யில் இருக்கும் ரவிச்சந்திரன் தவிர்த்து அவரோடு பதவி உயர்வுபெற்ற மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தற்போது வகித்துவரும் அதே பணியைத் தொடர்கிறார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.
*****
கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!
* சென்னைக்கு அருகிலிருக்கும் மாவட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருவர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதில் ஒருவர், ‘‘தொகுதியின் அமைச்சரைவிட நான் சீனியர். ஆனால் எனக்குக் கட்சி முக்கியத்துவம் கொடுக்கவில்லை’’ என்று புலம்பிவருகிறார். இன்னொருவரோ ‘‘நான் சீட் வாங்கியது முதல் வெற்றி பெற்றது வரை தலைநகர அமைச்சருக்குப் பிடிக்கவில்லை. என்னை கார்னர் செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்” என்று புலம்புகிறார். இரண்டு எம்.எல்.ஏ-க்களின் புலம்பலையும் சட்டை செய்வதே இல்லையாம் அமைச்சர்.
தஞ்சையில் முகாமிடும் சசிகலா!
தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டியில், அக்டோபர் 27-ம் தேதி தினகரன் மகள் ஜெயஹரிணி திருமண வரவேற்பு விழா நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாட்டை மணமகன் குடும்பத்தினரான வாண்டையார் தரப்பு செய்துவருகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் சசிகலா, தஞ்சாவூரிலுள்ள தனது இல்லத்தில் தங்கி ஓய்வெடுக்கிறாராம். இதற்காக வாஸ்து முறைப்படி வீட்டைப் புதுப்பித்துவருகிறார்கள். அங்கிருந்த படியே, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலரை வரவழைத்து ஆலோசனை நடத்தவும், தினகரன், திவாகரன் தரப்பை அழைத்துப் பேசி அவர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் சசி!