Published:Updated:

`ரெய்டு' விஜய், `தனி வழி' ரஜினி, பிரசாந்த் கிஷோர் பூகம்பம்..! மிஸ்டர் கழுகின் அரசியல் அப்டேட்ஸ்

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

அன்புச்செழியன், விஜய் ரெய்டு, ரஜினியின் அரசியல், டிஎன்பிஎஸ்சி சர்ச்சை, பிரசாந்த் கிஷோரின் வருகை, சசிகலா சொத்து விவகாரம், ராஜேந்திர பாலாஜியின் கலாட்டா உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளின் எக்ஸ்க்ளூசிவ் பின்னணி தகவல்களைத் தருகிறார் கழுகார்.

கழுகு @ மொபைல்

ஜூனியர் விகடன் இதழின் பிரதான அடையாளம் மிஸ்டர் கழுகு. இதழின் பல ரேப்பர் ஸ்டோரிகளே, கழுகார் தரும் ஸ்கூப் நியூஸ்தான். முதல் அமைச்சர் முதல் கடைசி தொண்டன் வரை பலரும் இவரின் தீவிர வாசகர்கள். இன்றைக்குப் பல ஊடகங்கள் புலானாய்வுச் செய்திகளை நிழல் கேரக்டர்கள் மூலம் வெளியிடும் முறைக்கு முன்னோடியே இவர்தான்.
கழுகு @ மொபைல்
கழுகு @ மொபைல்
இனி இணையத்திலும் ஆக்டிவ்வாக இருப்பார் கழுகார். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என அனைத்திலும் இவருக்கு அக்கவுன்ட் உண்டு. ஜோல்னா பை, பேஜர், நோட்பேட், பேனாவுடன் சுற்றும் அந்தக்கால நிருபர் அல்ல இந்த கழுகார். ஸ்மார்ட் போன், ஸ்பை கேமரா என நவீன வசதிகளைத் தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்பவர். அத்துடன், இனி உங்களிடமிருந்தும் தகவல்கள் கேட்டுப் பெறுவார். இனி... ஓவர் டூ மிஸ்டர் கழுகு!

`மதுரை ஃபைனான்சியர் அன்புச்செழியனிடமிருந்து ரூ.77 கோடி பறிமுதல், நடிகர் விஜய்யிடம் தொடர் விசாரணை' - என டிவியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கும்போதே, கூலாக என்ட்ரி கொடுத்தார் கழுகார். வாட்ஸ்அப்பில் வந்து விழுந்த ஐ.டி ரெய்டு பற்றிய ஸ்கூப் தகவல்களை நம்மிடம் கொட்டினார்.

அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு
அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு
`மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலிருந்தே நடிகர் விஜய்யை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனரே?'

``ஆமாம். நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் 2-ல் நேற்று `மாஸ்டர்' படத்தின் காட்சிகளைப் படமாக்கிக்கொண்டிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அப்போது அங்கு வந்த அதிகாரிகள், `வருமானவரிக் கணக்கு தொடர்பாகப் பேச வேண்டும். எங்களோடு வாருங்கள்' என அழைக்க, `சரி..என்னுடைய காரிலேயே வருகிறேன்' என நடிகர் விஜய் கூறியிருக்கிறார். இதை ஏற்காத அதிகாரிகள், அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு ஈ.சி.ஆர் சாலையில் உள்ள விஜய்யின் பனையூர் பண்ணை வீட்டுக்கு வந்தனர்".

``இவ்வளவு கெடுபிடி தேவைதானா..?

``எல்லாம் டெல்லி தரும் அழுத்தம்தான். கடந்த ஓராண்டாகவே விஜய்யைக் குறிவைத்து ஐ.டி அதிகாரிகள் இயங்கி வந்தனர். இதற்கான தொடக்கப்புள்ளி `மெர்சல்' பட வெளியீட்டிலிருந்தே தொடங்குகிறது. அந்தப் படத்தில் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரியைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்திருப்பார், நடிகர் விஜய். இதற்கு எதிராக பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டவர்கள் கொந்தளித்தனர். `ஜோசப் விஜய்' என்றும் அவரை விமர்சித்தனர். `அந்தக் குறிப்பிட்ட வசனத்தை நீக்க வேண்டும்' என்றும் போர்க்கொடி உயர்த்தினார்கள். மேலும், மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு விவகாரத்தையும் விமர்சனம் செய்து, வீடியோ ஒன்றில் பேசியிருந்தார் நடிகர் விஜய். இதுவும் மத்திய அரசின் கோபத்தை அதிகப்படுத்தியது. கூடவே, சர்கார் விவகாரமும் சேர்ந்து கொண்டது."

விஜய்
விஜய்
`இது மட்டும்தான் காரணமா?'

"இதையும் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம். அதைவிட முக்கியமாக, தமிழக அரசியல் களத்தைச் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் வேலைகளில் பா.ஜ.க தலைமை ஈடுபட்டு வருகிறது. இதற்காக நடிகர் ரஜினியைத் தயார்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. நேற்று போயஸ் கார்டனில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். `இந்தப் பேச்சுகள் எல்லாம் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பதாக', நேற்று நெல்லையில் பேட்டி கொடுத்திருந்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன். காங்கிரஸ் கமிட்டி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரியும், ரஜினியின் பேச்சை விமர்சித்துக் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்"

"ரஜினியை ஒரு ஆப்ஷனாக நினைத்திருந்த காங்கிரஸ் கட்சிக்குக் கோபம் வரத்தானே செய்யும்?"

"உண்மைதான். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு நடிகர் ரஜினி தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டிக்கு வந்துவிட்டனர். ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை, மக்கள் நலப் பணிகள் எனத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் ரஜினி வழியில் செல்லும் முடிவில் இருந்த விஜய், தற்போது விஜயகாந்த் பாணியில் அதிரடியாகச் செயல்படத் திட்டமிட்டிருக்கிறார். சர்கார் பட விவகாரத்தில் அரசின் எதிர்ப்புக்கு எதிராக அவர் எந்தக் கருத்தையும் பேசவில்லை. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமே இலவச மிக்ஸி, கிரைண்டரை கேக் வடிவில் வெட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். நடிகர் விஜய் அமைதியாக இருப்பது, விஜய் மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகளுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாகத்தான், பிகில் ஆடியோ லாஞ்சில், `என் ரசிகர்கள் மேல கையை வைக்காதீங்க...' எனக் கோபத்தைக் காட்டினார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அரசுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படுவதால், எதாவது நடவடிக்கை வரும் என விஜய் தரப்பினரும் எதிர்பார்த்தே காத்திருந்தனர். அதனால்தான், மக்கள் மன்ற நிர்வாகிகளிடம், `எந்த வேலையைச் செய்தாலும் முறையான கணக்கு வழக்குகளைப் பராமரித்துக்கொள்ளுங்கள்' எனத் தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. தவிர, உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் சிலர் வெற்றி பெற்றனர். இதையே முன்னோட்டமாக எடுத்துக்கொண்டு சில மாவட்டங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் பணிகளையும் தொடங்கிவிட்டனர். ரஜினிக்காகப் பாதையைத் தயார் செய்யும் நேரத்தில் விஜய்யின் செயல்பாடுகள் டெல்லியின் கண்களை உறுத்தியதாலேயே ரெய்டு நடவடிக்கை பாய்ந்தது" என மூச்சுவிடாமல் பேசி முடித்த கழுகாரை ஆசுவாசப்படுத்திவிட்டு, இஞ்சி டீ கொடுத்தோம். டீயை ரசித்துக் குடித்தவரிடம், அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

``டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்ட ஜெயக்குமார் சரணடைந்துவிட்டாரே?''

"போலீஸ் எஸ்.ஐ சித்தாண்டியுடன் மேலும் ஒரு காவலர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் சக்தி என்கிற நாராயணன், கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கார்த்தி, எழிலகத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். நாராயணன், விழுப்புரத்தில் வடமருதூர் கிராமத்தில் வி.ஏ.ஓவாக வேலை பார்த்து வருகிறார். மாவட்டத்துக்கு ஒரு ஏஜென்ட் என நியமித்து, சித்தாண்டி அண்ட் கோ மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஜெயக்குமார், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

இவர் மூலமாக மோசடியின் அடுத்தகட்ட அதிர்ச்சித் தகவல்கள் வரும் எனத் தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். இதில், ஹைலைட்டான விஷயம் ஒன்றும் உள்ளது. ஆளும்கட்சி அமைச்சர் ஒருவரின் ஆதரவாளராக வலம் வந்தவர்தான் இந்த ஜெயக்குமார். இதுதொடர்பாக, அண்ணா நகரில் உள்ள அந்தப் புள்ளியின் வீட்டுக்கு ஜெயக்குமார் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளும் உள்ளன. அதேநேரம், ` சித்தாண்டி, வேல்முருகன் உட்பட ஒரு சிலரோடு இந்தக் கைது நடவடிக்கையை முடித்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால், டிஎன்பிஎஸ்சியில் உள்ள சில ஊழியர்களைக் கைது செய்யலாம்' எனக் கோட்டை வட்டாரத்துக்குச் சிலர் தூது சென்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாகத்தான் ஜெயக்குமார் சரணடைந்தார் என்றும் சொல்கிறார்கள்".

"தி.மு.க-வுக்குள் பிரசாந்த் கிஷோரின் வருகை நிர்வாகிகள் மத்தியில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறதே?"

"காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும் என்ற வாதத்தை அறிவாலய நிர்வாகிகள் முன்வைத்தாலும், பேச்சாளர்கள் மத்தியில்தான் புகைச்சல் அதிகமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின்போதே ஆளுக்குத் தலா பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து, `பிரசாரம் எனச் சொல்லிக்கொண்டு யாரும் போக வேண்டாம்' எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார் ஸ்டாலின். இதனால், பலரும் வேலையில்லாமல் உள்ளனர். போதாக்குறைக்கு ஐபேக் நிறுவனம் வந்துவிட்டதால், `நன்னிலம் நடராசன், தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், புதுக்கோட்டை விஜயா, வண்ணை ஸ்டெல்லா, வண்ணைதேவகி, கா.காளிமுத்து, திருச்சி சிவா, இளம்பரிதி, வண்ணை கோவிந்தன், கவிதைப்பித்தன், கவிதைக் காதலன், தஞ்சை ஆடலரசன், தமிழ்ப்பித்தன், சாமிநாகப்பன், பொன்னிவளவன், சிங்காரசடையப்பன் என விடிய விடிய காத்துக் கிடந்து பேச்சைக் கேட்ட ஊரு இது. இனி உங்களுக்குப் பேச்சாளர் வட்டமே தேவையில்லையா?' எனச் சிலர் கொதிப்பை வெளிக்காட்டி வருகின்றனர். இதைத் தி.மு.க தலைமையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை."

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
twitter
"ஓஹோ..."

``ஆனால், பா.ஜ.க ஆதரவு ஐ.டி விங்க் வட்டாரத்தில் ஐபேக் வருகை திகிலை ஏற்படுத்தியிருக்கிறது.`250 கோடி ரூபாய் செலவில் பீகாரின் பிரசாந்த் கிஷோர் மூலம் தேர்தல் யுக்திகளைக் கையாள உள்ளது தி.மு.க. இதற்காக மாதம் 25,000 கூலியில் 500 இளைஞர்கள் சமூக வலைதளங்களில் களமிறங்குகிறார்கள். கூலிக்கு மாரடிப்பவர்கள், எப்போதும் தேசபக்தர்களிடம் தோற்பதுதான் வரலாறு' எனக் கூறி, கலந்துரையாடல் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். `சாஃப்ரான் சோசியல் மீடியா நெட்வொர்க்' என்ற பெயரில் இந்த அணியினர், 2021 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் பிரசாந்த் கிஷோர் பற்றியும் விவாதிக்க இருக்கிறார்களாம்".

"அப்படியா... தமிழக உளவுத்துறையினர், நீலாங்கரையில் சசிகலா தரப்பிலிருந்து ஒரு சொத்து கை மாறிய விவகாரம் பற்றி விசாரிக்கிறார்களாமே?"

‘‘ஆமாம். தமிழகத்திலுள்ள முக்கியக் கட்சியின் சின்னம் தொடர்பாக டெல்லியில் நடந்த வழக்கிலிருந்து தொப்பித் தலைவரை விடுவிப்பதற்காக நீதியை அடைமொழியாகக் கொண்டுள்ள ஒருவருக்குத்தான் அந்த நிலம் தரப்பட்டிருக்கிறது. நீதித்துறையில் செல்வாக்குள்ள அந்த நபரின் மாமனார் பெயரில்தான் சொத்து கைமாற்றப்பட்டிருக்கிறது. அங்கே இப்போது அழகான தோட்டமே போட்டுவிட்டார்கள். இந்தச் சொத்து கைமாறிய பிறகுதான், டெல்லியில் அவரை பாம்பாகச் சுற்றிக்கொண்டிருந்த வழக்கிலிருந்து அவர் தப்பித்தாராம். அதைப்பற்றித்தான் உளவுத்துறை விசாரிக்கிறது!’’

சசிகலா
சசிகலா
“ஓ!’’

‘‘இன்னொரு மீடியேட்டர் விவகாரமும் சொல்கிறேன்... இதிலும் அந்த நீதி பார்ட்டி சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்று விசாரிக்கிறது டெல்லி தரப்பு. முட்டுக்காட்டில் சொத்துகள் விற்பனையில் 7 கோடியே 73 லட்சம் ரூபாய் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு, இப்போது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வருமான வரித்துறையினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பெரியளவில் முன்னேற்றம் இல்லை. காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் அறிமுகமான டெல்லிவாலாதான் மீடியேட்டராக இருந்ததாகத் தகவல் பரவியது. இப்போது நீதி பார்ட்டிமீதும் சந்தேகம் எழுந்துள்ளது. அதையும் விசாரிக்கிறது உளவுத்துறை!’’

``நீதி பார்ட்டிக்கு இவ்வளவு இன்ஃபுளூயன்ஸ் இருக்கும் அளவுக்கு டெல்லியில் அவருக்கு யாருடன் நட்பு இருக்கிறது?’’

‘‘என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்... மத்தியில் அசுரனாக அமர்ந்திருக்கும் அந்த பவர்ஃபுல் பிரமுகரின் மகனும் இவரும் மிகவும் நெருக்கம். இருவரும் சேர்ந்து கோவை அருகே நிறைய இடங்களை வாங்கிப்போட்டிருக்கிறார்கள். இமாசல பிரதேசத்தில் மின் உற்பத்தி நிறுவனத்தில்கூட இருவரும் கைகோத்து இருப்பதாகச் சொல்கிறார்கள்!’’

"சசிகலா குடும்பத்தின் கணக்கு வழக்குகளைக் கவனிப்பவர் குடும்பத்திலேயே பிணக்கு என்கிறார்களே?"
ஜெயலலிதா
ஜெயலலிதா

"உண்மைதான். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாகவே பார்க்கப்பட்டவர் அந்த நபர். இப்போதும் போயஸ் கார்டன் முகவரியில்தான் அவருக்கு ரேஷன் கார்டு இருக்கிறது. அவருக்குப் பெண் பார்த்த இடம் குறித்து அப்போது உளவுத்துறை தரப்பில் சில தகவல்கள் சொல்லப்பட்டன. மத்திய வருவாய் புலனாய்வுத்துறையின் வளையத்தில் பெண்ணின் குடும்பத்தார் இருப்பது பற்றியும் சொல்லப்பட்டது. இதனால், வேறு பெண் பார்க்கலாம் என்று ஜெயலலிதா கூறியபோது, அந்தப் பெண்ணைத்தான் கட்டுவேன் என உறுதியாக இருந்தார் அந்த நபர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு காரணமாக, கணக்கு வழக்குப் புள்ளியின் மனைவிக்குக் கொடும் காயம் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள். விவகாரம், பரப்பன அக்ரஹாரா சிறை வரை சென்றுள்ளது".

"ஓஹோ... சென்னை சிட்டி கமிஷனர் மாற்றம் பற்றிய பேச்சு கோட்டையில் எதிரொலித்ததே!''

``ஆமாம். ஆனால், உண்மை அதுவல்ல. போலீஸ் அதிகாரிகளால், ஏ.கே.வி என்றழைக்கப்படும் ஏ.கே.விஸ்வநாதனுக்கு முக்கியப் பதவியைக் கொடுப்பது தொடர்பாகக் கோட்டை வட்டாரத்தில் திடீர் விவாதம் கிளம்பியது. உளவுப்பிரிவில் இருக்கும் ஐ.ஜி சத்யமூர்த்தி, இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் ஏ.கே.வி-யை அந்தப்பதவியில் அமர்த்துவது தொடர்பாகச் சிலர் பேசியுள்ளனர். சத்யமூர்த்தி, ஐ.ஜி. அந்தஸ்துடைய அதிகாரி. ஆனால் முதல்வருக்கு மிகவும் வேண்டியவர். அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதல்வர் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் சிலர், அவரை நம்பி பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அதே அளவுக்கு ஏ.கே.வி.யும் ஆளும்கட்சியின் தீவிர விசுவாசிதான். ஆனால் ஏ.டி.ஜி.பி அந்தஸ்து அதிகாரி. நீண்டகாலமாக உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி. பணியிடம் காலியாக இருப்பதால் அதில் இவரை நியமித்து, அவருக்குக் கீழே ஐ.ஜி. யாரையாவது நியமிக்கலாம் என்று முடிவு செய்தார்களாம்.

ஆனால் உளவுப்பிரிவுக்குப் போவதற்கு ஏ.கே.வி.க்கு விருப்பம் இல்லையாம். அவர் சட்டம்–ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆகத்தான் விரும்புகிறாராம். அவரை எப்படியும் மாற்ற வேண்டுமென்பதால் சென்னை கமிஷனராக யாரை நியமிப்பது என்றும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஜெயந்த் முரளி, சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏ.டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. இந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே, முதல்வரை நேரில் பார்த்த ஏ.கே.விஸ்வநாதன், ``என் மகனுக்குத் திருமணத்துக்கு ஏற்பாடாகிவருகிறது. ஆறு மாதங்கள் கழித்து என்னை மாற்றிக்கொள்ளுங்கள். அதுவரை என்னை மாற்ற வேண்டாம்!’’ என்று கோரிக்கை வைத்தாராம்.

அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி, ‘ஐபிஎஸ் இடமாற்ற ஃபைலைக் கிடப்பில் போடுங்கள்' என்று கூறிவிட்டாராம். முதல்வரின் இந்த முடிவால், கமிஷனர் பதவிக்காகக் காயை நகர்த்திய அதிகாரிகள் அமைதியாகிவிட்டனர்.".

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
கே.ஜெரோம்
"அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முதல்வர் டோஸ் விட்ட பிறகு அமைதியாகிவிட்டாரே?!"

"ஹா ஹா... முதல்வரின் கோபத்துக்குப் பிறகு, `துறைரீதியான கேள்விகளை மட்டும் கேளுங்கள்' என மீடியாக்களிடம் கூறிவிட்டார் ராஜேந்திர பாலாஜி. அமைச்சரின் பேச்சுக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கண்டறியவும் முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலையில் தனிப்பட்ட காரணங்கள்தான் இருந்துள்ளன. இதுகுறித்து திருச்சி காவல்துறை உயர் அதிகாரி கூறிய பிறகும், அதை மறுத்துப் பேட்டி கொடுத்தார் ராஜேந்திரபாலாஜி, ‘மிட்டாய் பாபு என்ற முகமது பாபுவை வைத்துக் காரியத்தை முடித்துவிட்டார்கள்’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். `காவல்துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அமைச்சர் இப்படியெல்லாம் பேசலாமா?' என சி.எம் கவனத்துக்கு நோட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, `ஏற்கெனவே நமக்கு காவிச் சாயத்தைப் பூசிட்டாங்க. நீங்களும் மேலும் மேலும் ஏன் எடுத்துப் பூசிக்கறீங்க' எனக் கோபத்தை வெளிப்படுத்தினார் முதல்வர். தவிர, ராஜேந்திர பாலாஜி என்ன பேசினாலும், அதை லைவ் செய்வதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்குவதும் எனச் செயல்பட்டு வந்திருக்கிறார் முன்னாள் நெறியாளர் ஒருவர். அவரைப் பற்றியும் முதல்வரின் கவனத்துக்குச் சில தகவல்களைக் கொண்டு சென்றுள்ளனர்" எனக் கோட்டை வட்டார டேட்டாக்களை அடுக்கிய கழுகார்,

மிஸ்டர் கழுகு: அமைப்பு செயலாளர் மீது அதிரடி புகார்!

"ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள கெஸ்ட் ஹவுஸில் பொன்னான கோட்டைப் பிரமுகரும் இமயமலையைப் பெயராகக்கொண்ட நடிகையும் அடிக்கடி ‘டிஸ்கஷன்’ நடத்துகிறார்களாம். முக்கியமான அரசு வேலைகள் தொடர்பான முடிவுகள் அங்கேதான் எடுக்கப்படுகின்றனவாம்" என்றபடியே வாட்ஸ்அப்பை அணைத்துவிட்டுப் பறக்கத் தொடங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு