Published:Updated:

`SUNனோட SON க்கே தடையா?' - அழகிரி ஆதரவாளர்களின் போஸ்டர் `புரட்சி'

மு.க.அழகிரி பிறந்தநாள் போஸ்டர்கள்
மு.க.அழகிரி பிறந்தநாள் போஸ்டர்கள் ( என்.ஜி.மணிகண்டன் )

பிறந்த நாளில் தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பாரா அழகிரி?

மதுரையின் முக்கிய விழாவாகக் கொண்டாடப்பட்ட மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ஆண்டுக்கு ஆண்டு சுருதி குறைந்து வருகிறது. கலைஞர் மறைவினால் கடந்தாண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடவில்லை. இந்தாண்டும் கொண்டாடமாட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் எதையோ மனதில் வைத்து போஸ்டர் புரட்சி நடத்தி வருகிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி
என்.ஜி.மணிகண்டன்

தி.மு.கவின் தென் மண்டலப் பொறுப்பாளராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த காலத்தில் நகரம் முழுதும் எங்கு பார்த்தாலும் அழகிரி தெரிவார். அதிலும் பிறந்த நாள் வந்துவிட்டால், இரு நாள்களுக்கு முன்பிருந்தே ஸ்பீக்கர் சத்தம் காதைக் கிழிக்கும். எங்கு பார்த்தாலும் கொடி தோரணம், நலத்திட்ட உதவிகள், கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் களைகட்டும். சாரட்டு வண்டியில் மன்னர் போலக் கிளம்பி முக்கியச் சாலைகள் வழியாக நகர் வலம் செல்வார். ஆனால், இந்தக் கொண்டாட்டமும் குதூகலமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மக்கள் மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

``கடிகாரங்கள் தோற்கும்... உன் உழைப்பில்'' என்றும், ``SUNனோட SON க்கே தடையா?'' `அபாயகரமானது அதிகார அசை, அசிங்கமானது துரோக ஆசை' என எதையோ மனதில் வைத்து வார்த்தையில் கம்பு சுற்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், பழைய உற்சாகம் ஆதரவாளர்களிடம் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. அழகிரியும் ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஐந்து வருடங்கள் முடிந்து விட்டன. அழகிரியின் அரசியல் அவ்வளவுதானா? என்று மதுரை மக்கள் கேட்டு வருகிறார்கள்.

மு.க.அழகிரி பிறந்தநாள் போஸ்டர்
மு.க.அழகிரி பிறந்தநாள் போஸ்டர்
என்.ஜி.மணிகண்டன்

தீவிர விசுவாசி ஒருவர் ``நாங்கள் எப்போதும் தி.மு.க என்ற உணர்வோடுதான் இருக்கிறோம். அண்ணனுக்கும், தளபதி ஸ்டாலினுக்கும் இருந்த சிறிய இடைவெளியைக் கட்சியிலுள்ள சிலரும், ஸ்டாலின் குடும்பத்திலுள்ள சிலரும் பெரிதாக்கி விட்டார்கள். கலைஞர் இருக்கும்போதே அண்ணனைக் கட்சியில் இணைப்பதற்குச் சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால், துர்கா ஸ்டாலின் உறவினர்கள் இதைக் கெடுத்து விட்டார்கள்.

மு.க.அழகிரி பிறந்தநாள் போஸ்டர்
மு.க.அழகிரி பிறந்தநாள் போஸ்டர்
ஈ.ஜெ.நந்தகுமார்

கலைஞர் மறைவுக்குப்பின் இணைந்து விடத் தயாராகத்தான் இருந்தார். ஆனால், அப்போதும் சதி செய்தார்கள். அதனால்தான் சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்தி தன்னுடைய பலத்தைக் காட்டினார். இப்போது அமைதியாக இருந்தாலும், தன் அரசியல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார்'' என்றார்.

மற்றொரு ஆதரவாளர், ``அண்ணன் மீது இன்றும் விசுவாசத்துடன் இருந்தாலும், சமீபத்திய தேர்தல்களில் அண்ணன் கொடுத்த சில ஸ்டேட்மென்டுகளால் எங்களுக்கு வருத்தம்தான். ஸ்டாலின் தலைவராக இருக்கும் வரை தி.மு.க உருப்படாது என்றும், ஹெச்.ராஜா போன்றோர்களைச் சந்தித்துப் பேசியதும் பிடிக்கவில்லை.

மு.க.அழகிரி பிறந்தநாள் போஸ்டர்
மு.க.அழகிரி பிறந்தநாள் போஸ்டர்
ஈ.ஜெ.நந்தகுமார்

ஸ்டாலின் கோபப்படுவதில் நியாயம் உள்ளது. இப்போது நாங்களும் தி.மு.கவில் இணைய முடியாமலும், அண்ணனை விட்டு விலக முடியாமலும் அந்தரத்தில் இருக்கிறோம்'' என்றார்.

பிறந்த நாளுக்கு வீட்டுக்கு யாரும் வர வேண்டாம் என்று அழகிரி கூறியுள்ள நிலையில், முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம் கேட்டோம், ``தலைவர் மறைவால் அண்ணன் கடந்தாண்டைப் போல இந்தாண்டும் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. ஆனாலும், வழக்கம்போல 30-ம் தேதி மதுரையில் பல்வேறு இடங்களில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துவோம். அரசியல் நிலைப்பாடு என்னவென்று விரைவில் அறிவிப்பார்'' என்றார்.

மு.க.அழகிரி பிறந்தநாள் போஸ்டர்
மு.க.அழகிரி பிறந்தநாள் போஸ்டர்
என்.ஜி.மணிகண்டன்
மதுரை தி.மு.க-வை ஆட்டிவைக்கிறதா... அழகிரி விசுவாசம்..?

இதுபற்றி கருத்து அறிய அழகிரியின் அலைபேசிக்குத் தொடர்பு கொண்டோம், `சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்'' என்ற காலர் ட்யூன் மட்டும் ஒலித்தது. அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பீர்களா என்று மெசேஜ் மூலம் கேட்டதற்கும் பதில் அளிக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு