Published:Updated:

`ரஜினி கருத்தை ஆதரித்தேனா?’ - சோஷியல் மீடியா வதந்திகளுக்கு எதிராகக் கொதித்த மு.க அழகிரி

மு.க.அழகிரி
மு.க.அழகிரி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

தன் பெயரில் போலிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மீது காவல்துறையில் அவர் புகார் கொடுத்திருக்கிறார்.

தமிழக அரசு டாஸ்மாக் கடை திறந்தது சம்பந்தமாக அதை எதிர்க்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கருத்தை முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி ஆதரித்தது போல் சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வந்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இந்தநிலையில் இதை மு.க.அழகிரி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள்’ என்று நண்பர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்துடன் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் எந்தக் கணக்கும் இல்லை. அதை நான் பயன்படுத்தவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகிரியின் புகார்
அழகிரியின் புகார்
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்த நிலையில் தன் பெயரில் போலியாக கணக்குகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுக்கவும் தயாராகி வருகிறார் மு.க.அழகிரி.

தன் தந்தைக்கு சமூக ஊடகங்களில் எந்தக் கணக்கும் இல்லை, போலியான பதிவுகளை நம்பாதீர்கள் என்று தயாநிதி அழகிரியும் நேற்று காலை விளக்கமளித்திருந்தார்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி
ஈ.ஜெ.நந்தகுமார்

கடந்த 6 வருடங்களாக தீவிர அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் மு.க.அழகிரி பெயரில், அடிக்கடி இதுபோன்ற பரபரப்பு ஏற்படும், தற்போது ரஜினிக்கு ஆதரவு அளிக்கும் ட்விட்டர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு