வடமாவட்டங்கள் டார்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட்? - உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்

அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தை அவருடைய ஆதரவாளர்களைவிட அ.தி.மு.க - தி.மு.க-வினரே அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறர்கள்.
ஜனவரி 3-ம் தேதி, தன்னுடைய அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக மு.க.அழகிரி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்தக் கூட்டத்துக்கு அதிகமான அளவில் வடமாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க-வினரை அழைத்துவரும் பணியில் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார்கள்.

`பா.ஜ.க-வில் இணையவிருக்கிறார்; ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்கப்போகிறார்; தனிக்கட்சி தொடங்கவிருக்கிறார்’ என்று பலவித தகவல்கள் வந்துகொண்டிருந்த நிலையில், அதற்கு பட்டும் படாமலும் பதிலளித்து வந்தார் மு.க.அழகிரி.
இந்தநிலையில் அழகிரி கடந்த 25-ம் தேதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறேன். வரும் ஜனவரி 3-ம் தேதி, மாலை மதுரை பாண்டி கோயில் துவாரகா பேலஸில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில், தமிழகம் முழுவதுமுள்ள என் ஆதரவாளர்கள் கலந்து பங்கேற்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'’ என்று தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க-வில் இணையும் எண்ணமில்லை என்று சென்னையில் தெரிவித்தவர், ஜனவரி 30-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளில் தனி இயக்கம் பற்றி அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது. இந்தச் சூழலில், `அதுவரை காத்திருக்க முடியாது, ஜனவரி 3 -ம் தேதி மதுரை ஆலோசனைக் கூட்டம் முடிந்து, புதிய இயக்கத்தை அறிவிக்கவிருக்கிறார் அழகிரி’ என்று சொல்கிறார்கள்.
அழகிரிக்கு தென் மாவட்டங்களில் மட்டும்தான் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று தி.மு.க-வில் பொதுவான கருத்து இருக்கிறது. அதை உடைக்கும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கடலூர் பகுதிகளிலிருந்து தி.மு.க நிர்வாகிகளை அழைத்துவரத் திட்டமிட்டிருக்கிறார்கள். அந்தப் பகுதிகளில் இருக்கும் தி.மு.க மாவட்டச் செயலாளர்களுடன் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை வளைத்துப் பிடித்து மதுரைக்குக் கொண்டுவர பி.எம்.மன்னன் தலைமையிலான குழு தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
அது மட்டுமில்லாமல் எப்போதும் அழகிரி பிறந்தநாளுக்கு மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும்தான் விளம்பரம் செய்வார்கள். இந்த முறை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். தற்போது வடமாவட்டங்களில் இருந்து அதிகமானோர் மதுரை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை அழகிரி ஆதரவாளர்கள் செய்துவருகிறார்கள்.
அழகிரி நடத்தும் கூட்டத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஒத்துழைக்க ஆளும்கட்சி முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு தேவையான மீடியா ஆதரவுக்கு தேசியக் கட்சியின் முக்கியப்புள்ளிகள் உதவிவருவது மட்டுமல்லாமல், அழகிரியுடன் தொடர்பில் இருந்துவருவதாகவும் சொல்கிறார்கள்.

அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்தை அவருடைய ஆதரவாளர்களைவிட அ.தி.மு.க - தி.மு.க-வினரே அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறர்கள்.