Published:Updated:

ஹெச்.ராஜா - மு.க.அழகிரி 2 நிமிட சந்திப்பில் என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஹெச்.ராஜாவை, அவரது வீட்டில் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் மு.க.அழகிரி.

மு.க.அழகிரி - ஹெச்.ராஜா சந்திப்பு
மு.க.அழகிரி - ஹெச்.ராஜா சந்திப்பு

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின் மு.க.அழகிரி தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில் சென்னையில் அமைதிப் பேரணி நடத்தினார். ஆனால், அதன் பின்னர் பொதுவெளியிலிருந்து ஒதுங்கி இருந்துவருகிறார்.

திருமணத்துக்கு அழகிரி வாழ்த்து
திருமணத்துக்கு அழகிரி வாழ்த்து

அவ்வப்போது தனது கருத்துகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய அவர், மற்றபடி தொடர்ந்து அமைதியாகவே இருந்துவருகிறார். தொண்டர்களோ`அஞ்சா நெஞ்சர்’ எப்போது மீண்டுவருவார் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். அழகிரி, தொடர்ந்து அமைதியாக இருப்பதை விரும்பாத தொண்டர்கள், போஸ்டர்கள் மூலம் சற்று காட்டாமாகவே தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தநிலையில், மு.க.அழகிரி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஹெச்.ராஜா வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசினார். விரைவில் நடைபெற உள்ள ஹெச்.ராஜாவின் மகள் திருமணத்துக்கு முன்கூட்டியே பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அழகிரி.

அழகிரி சந்திப்பு
அழகிரி சந்திப்பு

அப்போது சில நிமிடங்கள் ஹெச்.ராஜாவிடம் அழகிரி தனியாக பேசினார் என்கிறார்கள். தி.மு.க பொதுக்குழு கூட்டம் முடிந்துள்ள நேரத்தில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. `பி.ஜே.பி-யின் நட்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என அழகிரி ஆசைப்படுகிறார் என பி.ஜே.பி தொண்டர்கள் கிசுகிசுக்கின்றனர்.

மதுரை தி.மு.க-வை ஆட்டிவைக்கிறதா... அழகிரி விசுவாசம்..?

``அண்ணன் தற்போது உள்ள சூழலில், அவருக்கு மிகப்பெரிய உதவி தேவைப்படுகிறது. அதனால், மறைமுகமாக பி.ஜே.பி-யுடன் இணைந்து அவர் காய் நகர்த்த வாய்ப்பு உள்ளது'' என அழகிரி நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பேட்டிகளைத் தவிர்த்துவரும் மு.க.அழகிரி, ஹெச்.ராஜா வீட்டைவிட்டு வெளியேறும்போது செய்தியாளர்களிடம் சுருக்கமாகப் பேசினார். அவர் கூறுகையில்,``ஹெச்.ராஜாவின் மகள் திருமணத்துக்கு வரமுடியாதென்று முன்கூட்டியே வந்து செல்கிறேன். வேறொன்றும் இல்லை. தி.மு.க பொதுக்குழு பற்றி எனக்குத் தெரியாது. நான் தி.மு.க-வில் இல்லை. அதைப்பற்றி என்னிடம் கேட்கவேண்டாம்" எனத் தெரிவித்தார்.

அழகிரி
அழகிரி

பேட்டியளிப்பதுபோல் நின்றால் அதிக கேள்விகள் கேட்கப்படும் என தான் வந்த காரணத்தை மட்டும் சுருக்கமாகக் குறிப்பிட்ட அழகிரி, அத்தோடு முடித்துக்கொண்டார். ஹெச்.ராஜா வீட்டில் சிறிதுநேரம் இருந்த அழகிரி, ராஜாவிடம் தனியே 2 நிமிடங்கள் பேசினார் என்கிறார்கள். முக்கியமான சில விஷயங்கள் குறித்து ஹெச்.ராஜாவிடம் அழகிரி பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். தனது இல்லத் திருமணம் முடிந்ததும் அதைப் பார்த்துக்கொள்ளாம் என ஹெச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளாராம்.