Published:Updated:

`எதனால் விட்டேன்னு சொல்லவா?!' - ஸ்டாலினைக் கொதிக்கவைத்த கே.கே.நகர் தனசேகரன்

தனசேகரன்
தனசேகரன்

" `மாவட்டச் செயலாளருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்’ என்று 13 பேர் சொன்னார்கள்" என்றார். "அவர்களில் இரண்டு பேர் பெயரை மட்டும் சொல்லுங்கள்" என்று ஸ்டாலின் கேட்க, தனசேகரனால் பதில் சொல்ல முடியவில்லை.

அறிவாலயத்தில் நடக்கும் அதிகாரப் போட்டியைவிட, உடன்பிறப்புகளின் உள்குத்து அரசியல் தி.மு.க-வை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதில் லேட்டஸ்ட் வரவு, சென்னை கே.கே.நகரில் உடன்பிறப்புகளுக்குள் ஏற்பட்ட நேரடி மோதல்.

கட்சி அலுவலகம்
கட்சி அலுவலகம்

கே.கே.நகரில் தனசேகரனைத் தெரியாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்குக் கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு, ஆள்பலம் என அதிகார தோரணையோடு வலம்வந்துகொண்டிருப்பவர். தற்போது தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தாலும், கே.கே.நகர் பகுதியில் தன்னை மீறி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர். 2011, 2016 தேர்தல்களில் விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவிக்குப் போட்டியிட்டார். தொகுதியில் செல்வாக்கானவராக இருந்தாலும், அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு அவருடைய முந்தைய செயல்பாடுகளும் ஒரு காரணம் எனச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கே.கே.நகர் தெற்குப் பகுதிச் செயலாளராக நியமிக்கப்பட்ட கண்ணன், கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம்காட்டினார். உதயநிதியை அழைத்து வந்து சிலைத் திறப்பு, கொரோனா நிவாரண உதவிகள், அன்பில் மகேஷுடன் நட்பு என வளரத் தொடங்கினார். இதுவே நேரடி மோதலுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனர் உடன்பிறப்புகள்.

கண்ணன்
கண்ணன்

என்ன நடந்தது?

"எல்லாக் கட்சிகளிலும் கோஷ்டி மோதல் இருக்கும். அது இயற்கை. ஒருவர் அடுத்தகட்டத்துக்குப் போகும்போது பிரச்னைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தெற்குப் பகுதிக்குச் செயலாளராக தனசேகரன் இருந்தபோது, நாங்கள் அவருக்கு ஆதரவாக இருந்தோம். அதன் பின்னர் கண்ணன் பகுதிச் செயலாளராக வந்தார். வட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டுமென்றால், பகுதிச் செயலாளர்தான் பரிந்துரை அளிக்க வேண்டும். இதில் தனசேகரன் சொல்லும் ஆட்களுக்குப் பதவி மறுக்கப்பட்டது. இதனால் கடும் கோபத்திலிருந்தார் தனசேகரன்.

தொடர்ந்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பிரபாகர் ராஜா வந்தார். அவரும் கண்ணனும் களத்தில் இறங்கி வேலை பார்த்ததை தனசேகர் விரும்பவில்லை. பகுதிச் செயலாளர் பெயரைத் தவிர்த்துவிட்டு போஸ்டர் அடிக்கவைத்தார். விருகம்பாக்கத்தைப் பொறுத்தவரையில், போஸ்டர்களில் இவர் பெயர்தான் பெரிதாக வர வேண்டும். ஒருமுறை அன்பில் மகேஷ் இந்தப் பகுதிக்கு வந்தார். அதற்காக அடிக்கப்பட்ட போஸ்டர்களில், `என் பெயர்தான் முதலில் வர வேண்டும்' என்றார். `பதவி வரிசைப்படி பார்த்தால், அன்பில் பெயர்தான் முதலில் வர வேண்டும்' என்றோம். இந்த விவகாரத்தில் பெரிய தகராறே செய்துவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு பகுதிச் செயலாளர் கண்ணனின் போட்டோ எதிலும் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஒருமுறை எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பெயரையும் போடாமல் போஸ்டர் அடித்தார். இந்த நிலையில்தான் கட்சிக் கட்டடத்தை முன்வைத்து பிரச்னை செய்யத் தொடங்கினார்" என விவரித்த கே.கே.நகர் பகுதி தி.மு.க-வினர், "எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் அருகில் கட்சிக்கென தனியாகக் கட்டடம் உள்ளது. அங்கு கட்சி அலுவலகம் செயல்பட்டுவருகிறது. அங்கு ஒரு கடையை 24,000 ரூபாய் வாடகைக்கு விட்டிருந்தோம். அதற்காக வாங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் டெபாசிட் பணத்தில், கட்சி அறிவித்த ஆர்ப்பாட்டங்கள், செலவுகள் போக மீதம் 4 லட்சம் ரூபாய் மட்டும் இருந்தது. உடனே வட்டச் செயலாளர்களை வரவழைத்து, `கணக்கு வழக்குகளைக் காட்டுங்கள்' என்றார் தனசேகரன். அதற்குச் சரியான விளக்கமளித்தும், அவர் பிடிவாதமாக இருந்தார். அதேநேரம், அவருடைய ஆதரவாளர் ஒருவர் கட்சிக்குச் சொந்தமான வேறு ஒரு கடையில் 15 வருடங்களாக வாடகை வசூலித்துவருகிறார். அதற்கு எந்தக் கணக்கு வழக்கும் இல்லை.

கடைக்குப் பூட்டு
கடைக்குப் பூட்டு

அதன்பின்னர், `கணக்கு வழக்குகளுக்காக கமிட்டி போட வேண்டும்’ எனக் கூறி, ஆறு வட்டச் செயலாளர்களில் மூன்று பேரிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார். இவரைப் பகைத்துக் கொண்டால் பிரச்னை செய்வார் என்பதால், அனைவரும் பயந்துபோயிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காலையில், ஆட்களைக் கூட்டிவந்து கட்சி அலுவலகத்திலுள்ள கடைக்குப் பூட்டுப் போட்டார். இதையறிந்து நாங்கள் அங்கு போனோம். `இது கட்சி இடம். உங்களுக்குச் சொந்தமான இடம் கிடையாது. மாவட்டச் செயலாளருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது’ என்று கூறி கண்ணன் சண்டை போட்டார். போலீஸ் வந்தபோதும். `இது உள்கட்சி விவகாரம்' எனக் கூறி புகார் கொடுக்க மறுத்துவிட்டார் கண்ணன்.

இதையடுத்து, மாவட்டச் செயலாளர் மா.சு பேசியதும், மறுநாள் சாவியைக் கொண்டு வந்து கொடுத்தார். இப்போதும் கட்சி அலுவலகத்துக்கு வந்து தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். எங்களின் கட்சி வேலைகளைத் தடுக்க வேண்டும் என்ற முடிவில் செயல்படுகிறார். போனில் மிரட்டல்கள் வருகின்றன. இங்கு நடந்த சம்பவங்களைத் தலைமைக்கு தெரியப்படுத்திவிட்டோம். கட்சிக் கட்டடம் உள்ள இடத்தின் மதிப்பு 2 கோடி ரூபாயைத் தாண்டும். அந்த இடத்தின்மீது நீண்டநாள்களாகக் கண்வைத்திருக்கிறார் தனசேகரன். அதற்காகத்தான் இவ்வளவு தொல்லைகளைக் கொடுக்கிறார்" என்றனர் ஆதங்கத்துடன்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

`கட்சிக் கட்டடத்துக்குப் பூட்டு போட்டது சரியா?’ என்று தனசேகரனிடம் கேட்டோம். "அது கட்சிக்குச் சொந்தமான கட்டடம். அதற்கான வாடகைப் பணத்துக்குச் சரியாகக் கணக்கு காட்டவில்லை. எனவே, இரண்டு வாடகையையும் ஜாயின்ட் அக்கவுன்ட்டில் போட வேண்டும் என முடிவு செய்து, தீர்மானம் போட்டோம். ஆனாலும், அவர் ஜாயின்ட் அக்கவுன்ட் போடவில்லை. கடந்த வாரம், இது தொடர்பாக, வட்டச் செயலாளர் கையொப்பம் வாங்கி அமைப்புச் செயலாளரிடம் கடிதம் கொடுத்தோம். `இந்த விவகாரத்தில் மாவட்டச் செயலாளர் விசாரணை நடத்த வேண்டும்’ என வலியுறுத்தினோம். இந்த நேரத்தில் கட்டடத்தில் செயல்பட்டுவந்த கடையின் உரிமையாளர், வாடகைப் பணத்தை பகுதிச் செயலாளரிடம் கொடுக்கப் போனார். அதை நாங்கள் சென்று எதிர்த்தோம். அந்தக் கடைக்குப் பூட்டுப் போட்டோம். சாவியை எடுத்துக் கொண்டு போனது மாவட்டச் செயலாளருக்குத் தெரியாது. மறுநாள் சாவியை ஒப்படைத்துவிட்டோம். இதில் வேறு எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை.

வேலூர்: `செய்ததை பட்டியலிடும் நிலையில் நான் இல்லை!’ - எம்.பி ஆன ஓராண்டு குறித்து கதிர் ஆனந்த்

என் பெயரைக் கெடுக்கும் நோக்கில் சிலர் செயல்படுகிறார்கள். நான், நான்கு முறை பகுதிச் செயலாளராக இருந்திருக்கிறேன். அந்தக் கட்டடத்தின் வாடகையில் ஒரு ரூபாயைக்கூட நான் வாங்கியதில்லை. தேர்தல் நெருங்குவதால் எனக்கு எதிராகப் புகார் சொல்கிறார்கள். இது தொடர்பாக தலைமையிலும் பேச்சுவார்த்தை நடந்தது. கட்சிக்குச் சேர வேண்டிய 40,000 ரூபாய் வாடகைப் பணம், ஒரு நபரிடம் மட்டுமே போவதை ஏற்க முடியவில்லை. `டீக்கணக்கு எழுதுவதெல்லாம் அரசியலுக்கு சரிவராது’ என அந்தத் தம்பியிடமும் சொன்னேன். இந்தப் பகுதியில் ஜம்புலிங்கம் உட்பட பலர் வளர்ந்தார்கள். எனக்கு எப்போதும் கட்சி மட்டும்தான். எனக்குத் தலைவர், இரண்டு முறைசீட் கொடுத்தார். என்மீது தவறு இருந்தால் தலைமை நடவடிக்கை எடுக்கட்டும்" என்றார் கொதிப்புடன்.

ஜூம் மீட்டிங்
ஜூம் மீட்டிங்

ஜூம் மீட்டிங் கடுப்பு!

சென்னையிலுள்ள கட்சி நிர்வாகிகளிடம் கடந்த 13-ம் தேதி மாலை ஜூம் மீட்டிங்கில் பேசினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அப்போது பேசிய தனசேகரன், `ராமநாதபுரத்தில் உங்கள்மீது அதிருப்தியில் உள்ளனர். `நீங்கள் மாவட்டச் செயலாளர் சொல்வதைத்தான் கேட்கிறீர்கள்’ எனச் சொல்கிறார்கள்' என்றார். இதை எதிர்பார்க்காத ஸ்டாலின், `என்ன புகார் தனசேகரன்...' என்று இயல்பாகக் கேட்டார். `மாவட்டச் செயலாளருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்’ என 13 பேர் சொன்னார்கள்' என்றார். `அவர்களில் இரண்டு பேர் பெயரை மட்டும் சொல்லுங்கள்' என்று ஸ்டாலின் கேட்டதும், தனசேகரனால் பதில் சொல்ல முடியவில்லை.

இதையடுத்து கோபத்துடன் பேசிய ஸ்டாலின், "உங்கள் பகுதியிலேயே ஆயிரம் கம்ப்ளெயின்ட் இருக்கிறது. என்னன்னு சொல்லவா... தேவையில்லாமல் மற்ற மாவட்டங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். இங்கு களையெடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய இருக்கிறார்கள். எதனால் விட்டேன்னு சொல்லவா?" என ஆவேசத்தை வெளிப்படுத்த, தனசேகரனால் எதுவும் பேச முடியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு