Published:Updated:

`கருத்தறியச் சென்றவர்கள் மீது வழக்குப்போடுவதா?'- விகடன் நிருபர்கள் மீதான வழக்குக்கு ஸ்டாலின் கண்டனம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமுக்குச் சென்ற ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்படக் கலைஞர் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

`இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்' என்பது தொடர்பாகச் செய்தி சேகரித்த விகடன் பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் மூன்று வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். நாட்டின் நான்காவது தூணைக் காப்பாற்றுங்கள் என்றும் இருவர் மீதும் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர் மன்றத்தினர் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமுக்குச் சென்ற ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்படக் கலைஞர் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூனியர் விகடன்
ஜூனியர் விகடன்

மார்த்தாண்டம், களியக்காவிளை காவல் நிலையங்களில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அவர்களிடம் கருத்து கேட்க அந்தப் பத்திரிகையாளர்கள் இருவரும் சென்றுள்ளனர். இலங்கைத் தமிழர்களின் கருத்தை அறிவதற்காகத்தான் அவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் மீது வழக்கு என்றால், எடப்பாடி ஆட்சியில் எந்த அளவுக்கு ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது என்பதை விளக்கத் தேவையில்லை.

இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்பது தவறு என்றால், இந்த அரசாங்கம் அந்த அகதிகள் முகாமுக்குச் சென்று கருத்து கேட்டதா? 'இலங்கைத் தமிழர்க்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருகிறேன்' என்று சொல்லும் முதலமைச்சர், அரைமணி நேரமாவது அம்மக்களின் உணர்வை அறிய, கருத்தை அறிய நேரத்தைச் செலவு செய்தாரா?

இலங்கை அகதிகளிடம் ஜூனியர் விகடன் கருத்துக் கேட்பு... விகடன் நிருபர்கள் மீது வழக்கு!

இலங்கைத் தமிழர்க்குக் குடியுரிமை வழங்க வாதாடி வருகிறோம் என்று மாறி மாறிப் பொய் சொல்லி வருகிறாரே தவிர, எங்கே வாதாடினார்கள்? குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களவையில் தாக்கல் ஆனபோது அ.தி.மு.க-வின் ஒரு உறுப்பினர் ஆதரித்து வாக்களித்தார். மாநிலங்களவையில் தாக்கல் ஆனபோது அதிமுகவின் 11 உறுப்பினர்களும் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க-வின் ஒரு உறுப்பினரும் ஆதரித்து வாக்களித்தார்கள்.

இலங்கைத் தமிழர்க்கு துரோகம் இழைத்த அரசுதான், அகதி முகாமுக்குச் சென்று கருத்தறிய முயன்ற ஜூனியர் விகடன் பத்திரிகையாளர்கள் இருவர் மீது வழக்கு போட்டுள்ளது. இது ஒருவிதமான பாசிசத் தன்மையுடன் ஆட்சியை நடத்த முயல்வதன் அடையாளம்.

விகடன்
விகடன்

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க சார்பில் பேரணி நடத்துகிறார்கள். இப்படி ஆதரிப்பவர்கள் செய்வது ஜனநாயக உரிமை என்றால், எதிர்த்துப் பேரணி நடத்துவதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், கோலம் போடுவதும், ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் தானே? இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை,கருத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவை அனைவருக்கும் சமமாக உண்டு.

அந்த உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோத காரியங்களைத்தான் இன்றைய எடப்பாடி அரசு தாராளமாகச் செய்து வருகிறது. தங்களது ஜனநாயக உரிமைகளை அமைதி வழியில் பயன்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த மாணவ மாணவியர் கோலம் போட்டுள்ளனர். அவர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள்; அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக வேன்களில் ஏற்றப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

`விகடன் நிருபர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெறுங்கள்!‍' -கொந்தளிக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள்

கோலம் போடுவது சமூகக் குற்றமா? தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த, அடுத்தவருக்கு எந்தத் தொல்லையும் இல்லாமல் கோலம் இட்டுள்ளனர். அவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதா? இல்லை.

இந்தத் தகவல் கிடைத்ததும் அதைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். அதன்பிறகுதான் அவர்களைக் காவல்துறை விடுவித்துள்ளது. 'கோலம் போடுவது தவறு இல்லை. ஆனால், அனுமதி வாங்க வேண்டும்' என்று தமிழக அமைச்சர் ஒருவர் பேட்டி அளிக்கிறார். 'கோலம் போடலாம். ஆனால் அது அலங்கோலமாக இருக்கக் கூடாது' என்று இன்னொரு அமைச்சர் சொல்கிறார்.

இந்த நாட்டில் கோலம் போடுவதற்கு அனுமதி வாங்க வேண்டுமானால், என்ன என்ன விஷயங்களுக்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துவிட்டால் நல்லது! தங்களது அரசியலுக்கு எதிர்க் கருத்து கொண்டவர்களை மிரட்டி, அச்சுறுத்தி, தொடர் பழிகளைப் போடுவதன் மூலமாக அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத் துடிக்கிறார்கள்.

`கருத்துரிமையை வாழவிடுங்கள்!'- விகடன் நிருபர்கள் மீதான வழக்குப்பதிவுக்குத் தலைவர்கள் கண்டனம்
கனிமொழி வீட்டு வாசலில் கோலம்
கனிமொழி வீட்டு வாசலில் கோலம்
twitter

இது அல்ல, உண்மையான, நேர்மையான அரசியல். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அதன் மூலமாக மக்கள் மனங்களை வெல்வதும்தான் உண்மையான வெற்றி; நிலைக்கும் வெற்றி. அதை உணராமல் அச்சுறுத்தலின் மூலமாக மத்திய மாநில அரசுகளும் அதன் அரசியல் சக்திகளும் செயல்படுவார்களேயானால், மக்கள் மன்றத்தில் அவர்கள் வெகுசீக்கிரத்தில் அந்நியப்பட்டுப் போவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடி வரும் அனைவர் மீதும் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!" என்று கூறியதுடன், ட்விட்டரிலும் இதுதொடர்பாகப் பதிவிட்டுள்ளார். அதில், ``CAA வை நிறைவேற்றச் செய்து இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.க அரசு, அகதிகள் முகாமுக்குக் கருத்தறியச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்போடுவதா? புதிய எஜமானர்களைத் திருப்திப் படுத்த, ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசியாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் எடப்பாடி" என்று கூறியுள்ளார்.

`முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்!' -விகடன் நிருபர்கள் மீதான வழக்கு குறித்து கடம்பூர் ராஜு
அடுத்த கட்டுரைக்கு