Published:Updated:

`கலைஞரின் மகன்' தொடங்கி `மு.க.ஸ்டாலின் எனும் நான்' வரை - ஸ்டாலினின் அரசியல் பாதை எப்படியிருந்தது?

மு.க.ஸ்டாலின்

எம்.எல்.ஏ., மேயர், அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளை வகித்த ஸ்டாலின் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். முதல்வர் அரியணையில் அமரவிருக்கும் மு.க.ஸ்டாலினின் முழு வரலாறு குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை!

`கலைஞரின் மகன்' தொடங்கி `மு.க.ஸ்டாலின் எனும் நான்' வரை - ஸ்டாலினின் அரசியல் பாதை எப்படியிருந்தது?

எம்.எல்.ஏ., மேயர், அமைச்சர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளை வகித்த ஸ்டாலின் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். முதல்வர் அரியணையில் அமரவிருக்கும் மு.க.ஸ்டாலினின் முழு வரலாறு குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை!

Published:Updated:
மு.க.ஸ்டாலின்

14 வயதில் அரசியல் களம் கண்ட ஸ்டாலின், தனது 68-வது வயதில் முதலமைச்சர் பதவியை அடைந்திருக்கிறார். நீண்ட நெடிய வரலாறுகொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை, தனது தந்தை கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும் கட்டிக் காத்து வெற்றிபெறச் செய்திருக்கிறார் ஸ்டாலின்!

அண்ணா, கலைஞர் என இரு பெரும் திராவிடத் தலைவர்களுக்குப் பின்னர், தி.மு.க சார்பில் முதல்வர் அரியணையில் அமரவிருக்கும் ஸ்டாலினின் அரசியல் பயணத்தை இங்கே காணலாம்!

தி.மு.க இளைஞர் குழு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1953-ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் மறைந்த வாரத்தில் கருணாநிதிக்கு மகனாகப் பிறந்தார் ஸ்டாலின். அதன் காரணமாகத்தான் தன் மகனுக்கு `ஸ்டாலின்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார் கருணாநிதி. பிறந்தநாள் தொட்டே அரசியல் தலைவர்கள் பலராலும் தூக்கி வளர்க்கப்பட்ட காரணத்தால் சிறுவனாக இருக்கும்போதே ஸ்டாலினைத் தொற்றிக்கொண்டது அரசியல் ஆர்வம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

1966-ம் ஆண்டு, தனது 14-வது வயதில் `கோபாலபுரம் தி.மு.க இளைஞர் குழு' என்ற சிறு குழுவை கோபாலபுரத்தில் தொடங்கினார் ஸ்டாலின். இந்தக் குழு மூலம் இளைஞர்களை ஒன்று திரட்டி திராவிடக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்தார். சமூகப் பணிகளையும் இந்தக் குழு செய்துவந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்காக முதன்முறையாகப் பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு வயது 18 மட்டுமே.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நடிகர் ஸ்டாலின்!

இளைஞராக இருந்தபோது `முரசே முழங்கு', `நீதி தேவன் மயங்குகிறான்', `நாளை நமதே' உள்ளிட்ட சில மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார் ஸ்டாலின். திராவிடக் கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் கொள்கை விளக்க நாடகங்கள்தாம் இவை. அதேபோல சமூக கருத்துகள் நிறைந்த `ஒரே ரத்தம்', `மக்கள் ஆணையிட்டால்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சிறை சென்ற ஸ்டாலின்

1974-ம் ஆண்டு தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1976-ல் எமெர்ஜென்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, சிறை சென்றார். `கைதாகிறார் ஸ்டாலின்' என்ற செய்தி தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பரவியதால் கோபாலபுரத்தில் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலினைக் கைதுசெய்து அழைத்துச் சென்றது காவல்துறை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் தி.மு.க-வினர் மனதில் ஸ்டாலினுக்கு, `கலைஞரின் மகன்' என்பதைத் தாண்டி ஒரு தனி இடம் கிடைத்தது.

தி.க., தி.மு.க., சி.பி.எம் ஆகிய கட்சிகளின் முன்னணித் தலைவர்களுடன் சென்னை மத்தியச் சிறையில் ஓராண்டு காலத்தைக் கழித்தார் ஸ்டாலின். சிறையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த ஸ்டாலின், மூத்த அரசியல் தலைவர்களின் நெருக்கத்தையும் பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் தேர்தல்!

1980, ஜூன் 26-ம் தேதி மதுரை ஜான்ஸி பூங்காவில் தி.மு.க இளைஞர் அணியைத் தொடங்கிவைத்தார் கருணாநிதி. இரண்டு ஆண்டு காலம் நிர்வாகிகள் இல்லாமல் செயல்பட்ட இளைஞரணியின் அமைப்பாளராக, 1982-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். 1984 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1989-ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மீண்டும் 1991 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 1991 தேர்தலுக்குப் பிறகு, இவர் போட்டியிட்ட ஆறு தேர்தல்களிலும் வெற்றிபெற்றிருக்கிறார். இதில் கடைசி மூன்று முறை கொளத்தூரில் போட்டியிட்டிருக்கிறார் ஸ்டாலின். மற்ற தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் அவர்.

மு.க்.ஸ்டாலின்
மு.க்.ஸ்டாலின்

வாரிசு அரசியல்!

1994-ம் ஆண்டு தி.மு.க-விலிருந்து பிரிந்து ம.தி.மு.க-வைத் தொடங்கினார் வைகோ. ஸ்டாலின் முன்னிறுத்தப்படுவதைக் காரணம் காட்டித்தான் தி.மு.க-விலிருந்து விலகினார் வைகோ. இன்று உதயநிதி சந்திக்கும் `வாரிசு அரசியல்' விமர்சனங்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு விமர்சனங்களைச் சந்தித்தவர் ஸ்டாலின். இருந்தும் அந்த விமர்சனங்களையெல்லாம் தனது உழைப்பின் மூலம் வென்றெடுத்திருக்கிறார் அவர்.

அன்று ஸ்டாலினைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து விலகிய வைகோவை, இன்று தன்னுடன் இணக்கமாக வைத்திருப்பதன் மூலம் தனது தலைமைப் பண்பை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

சென்னை மேயர்!

1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்த கையோடு, சென்னை மாநகராட்சியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் அவர்தான். 2001-ம் ஆண்டு மீண்டும் சென்னையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ம் ஆண்டு இரட்டைப் பதவிக்கு எதிராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டுவர, மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏவாகப் பணியைத் தொடர்ந்தார்.

ஸ்டாலின் சென்னையின் மேயராக இருந்த சமயத்தில் சென்னை மாநகரில் சாலை, மேம்பாலத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தினார். மாநகர் முழுவதிலும் பூங்காக்கள் அமைக்க வழிசெய்தார். துப்புரவுப் பணிகளை நவீனமயமாக்கினார். இந்திய மாநகராட்சிகளில் குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த மாநகராட்சியாக விளங்கியது சென்னை. இவர் மேயராக இருந்த காலகட்டத்தில்தான் சென்னையை, `சிங்கார சென்னை' என்று அழைக்கத் தொடங்கினர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

துணை முதல்வர்!

தொடர்ந்து 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றதை அடுத்து முதன்முறையாக அமைச்சர் பொறுப்பேற்றார் ஸ்டாலின். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்துவந்தவர், 2009-ம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார். 2011, 2016 தேர்தல்களில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார்.

இதற்கிடையில், 2003-ம் ஆண்டு தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும், 2008-ம் ஆண்டு தி.மு.க பொருளாளராகவும் பதவிப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

கருணாநிதி, அன்பழகனுடன் ஸ்டாலின்
கருணாநிதி, அன்பழகனுடன் ஸ்டாலின்

2016 முதல் தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சித் தலைவராகச் செயலாற்றிவந்தார் ஸ்டாலின். கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக 2017-ல் தி.மு.க-வின் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். 2018-ம் ஆண்டு கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு தி.மு.க-வின் தலைவரானார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி, தமிழகத்தில் ஓர் இடத்தைத் தவிர்த்து மற்ற 38 இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது.

அமோக வெற்றி!

தொடர்ந்து 2021-ல் கழக ஆட்சி அமைய வேண்டும் என்ற குறிக்கோளோடு தமிழகத்தில் சுற்றுப்பயணங்கள் சென்று தீவிர பிரசாரங்கள் மேற்கொண்டார். அந்த பிரசாரங்களின் பலனாக இன்று 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது தி.மு.க கூட்டணி!

`கருணாநிதியின் மகன் என்பதால்தான் இன்று இந்த இடத்தை அடைந்திருக்கிறார் ஸ்டாலின்' என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் நின்று பல போராட்டங்களைச் சந்தித்து, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாகத் திகழ்கிறார் ஸ்டாலின். இன்று தி.மு.க கூட்டணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று தி.மு.க-வின் தலைவராகவும் ஜெயித்துக் காட்டியிருக்கிறார்.
ஸ்டாலின்
ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்!

மே 7-ம் தேதி முதல்வர் பதவியேற்கவிருக்கும் ஸ்டாலினுக்கு முதல் சவாலாக நிற்கிறது கொரோனா பெருந்தொற்று. பேரிடர் சூழலில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கும் நிலையில் முதல்வர் பதவி ஏற்கவிருப்பதால், அவர்மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

ஸ்டாலினுக்கு மற்றொரு சவாலாக அரசியல் விமர்சகர்கள், ``2006-11 ஆட்சிக்காலத்தில் நில அபகரிப்பு உள்ளிட்ட அராஜக செயல்களில் தி.மு.க நிர்வாகிகள் சிலர் ஈடுபட்டதால்தான், 10 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் தி.மு.க அமர முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. இது ஸ்டாலினுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால்.

`இனிமேல் அப்படியொரு குற்றச்சாட்டு நம் கட்சிமீது வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஸ்டாலின்' என்று அவருக்கு நெருங்கிய வட்டங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கட்சி நிர்வாகிகளிடம் இது போன்ற விஷயங்களில் கண்டிப்பான முறையில் ஸ்டாலின் நடந்துகொள்வார் என்று நம்பலாம்'' என்கின்றனர்.

அரவணைப்பும் நம்பிக்கையும்..!

தி.மு.க வெற்றிபெற்றதை அடுத்து முன்னாள் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னதும், அதற்கு ஸ்டாலின், ``மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை!'' என்று பதில் பதிவிட்டதும், தமிழக அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறித்து வைக்கப்பட வேண்டிய விஷயம்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தனக்கு வாழ்த்து பதிவிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரிடம் நன்றி தெரிவித்ததோடு நில்லாமல், `உங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் வேண்டும்' என்று பதிவிட்டிருக்கிறார் ஸ்டாலின். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஸ்டாலினின் இந்தப் போக்கு அவர்மீது அதீத நம்பிக்கையை உண்டாக்குகிறது. பல்வேறு சவால்களுக்கிடையே தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் ஸ்டாலின், தமிழகத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி எடுத்துச் செல்வார் என நம்புவோம்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism