Published:Updated:

எழுத்தாளர் ஆன ஸ்டாலின்!

ஸ்டாலின், கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், கருணாநிதி

கருணாநிதியின் புத்தகங்களை வெளியிடும் பூம்புகார் பதிப்பகமே ஸ்டாலினின் சுயசரிதையையும் வெளியிடவிருக்கிறது.

எழுத்தாளர் ஆன ஸ்டாலின்!

கருணாநிதியின் புத்தகங்களை வெளியிடும் பூம்புகார் பதிப்பகமே ஸ்டாலினின் சுயசரிதையையும் வெளியிடவிருக்கிறது.

Published:Updated:
ஸ்டாலின், கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், கருணாநிதி

உலக வரலாற்றில் சுயசரிதைகளுக்கு என்று தனியிடம் உண்டு. குறிப்பாக அரசியல் தலைவர்களின் சுயசரிதை ஆர்வத்தைத் தூண்டுவதுண்டு. தமிழகத்தில் முக்கியமான அரசியல் தலைவர்களான பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி என பலர் சுயசரிதை எழுதவில்லை. ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்று எம்.ஜி.ஆர் எழுதியிருக்கிறார் என்றாலும், அது முழுமையான சுயசரிதையில்லை. கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ பலராலும் வாசிக்கப்பட்டது. உதயநிதி இப்போது நடிக்கும் படத்தின் பெயரும் ‘நெஞ்சுக்கு நீதி’தான். கருணாநிதியின் வாழ்க்கையை மட்டுமல்லாது இந்திய அரசியல் நிகழ்வுகளையும் அந்தக் காலகட்டத்து உலக அரசியல் நிகழ்வுகளையும் ‘நெஞ்சுக்கு நீதி’யில் சுவைபட விளக்கியிருப்பார். ஸ்டாலினும் தன் சுயசரிதையை வெளியிடவிருப்பது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐம்பது வயதைக் கடந்த நிலையில் ‘நெஞ்சுக்கு நீதி’யை எழுதினார் கருணாநிதி என்றால், எழுபதைத் தொட்ட நிலையில் தன் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ முதல்பாகத்தை முடித்திருக்கிறார் ஸ்டாலின். முதல்வர் பதவியிலிருந்து ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்தநாள், வரும் மார்ச் 1-ம் தேதி வருகிறது. அதற்கு முதல் நாள் பிப்ரவரி 28-ம் தேதி ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியிடப்படுகிறது.

எழுத்தாளர் ஆன ஸ்டாலின்!

‘உடன்பிறப்பே’ என்பது கருணாநிதியின் மந்திரச்சொல். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே’ என்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது கூட்டத்தில் ஆரவாரம் அள்ளும். கடிதம் எழுதும்போதும் ‘உடன்பிறப்பே’ என்று விளித்துத்தான் அவர் கடிதம் எழுதுவார். உடல்நிலை குன்றிய நிலையில் கருணாநிதியால் உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுத முடியாத நிலையில் 2017-ம் ஆண்டு ‘உங்களில் ஒருவன்’ என்று தொண்டர்களுக்கு தி.மு.க-வின் செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் கடிதம் எழுதத் தொடங்கினார். அந்த உங்களில் ஒருவனையே தனது சுயசரிதைக்கும் தலைப்பாக வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

‘ஏற்கெனவே ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் மூன்று பாகங்கள் அடங்கிய நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூல் தயாரிப்புக்கான வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சுயசரிதை நூலுக்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன’ என்கிறார்கள் தி.மு.க-வினர். ஸ்டாலின் சொல்லியதுபோல முதல் பாகத்தில், அவர் பிறந்த 1953-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரையான நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெரியார் - அண்ணா நினைவாக அய்யாதுரை என்கிற பெயர் வைக்கப்பட்டு பிறகு ஸ்டாலினாக மாறியது, ஆரம்பக்கல்வி பயின்ற காலம், 13 வயதில் கோபாலபுரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இளைஞர் தி.மு.க என்கிற அமைப்பை உருவாக்கியது சிறுவயதில் இருந்தே தன் தந்தையைத் தலைவர் என்றே அழைத்துப் பழகியது, கோபாலபுரத்தில் கட்சித் தொண்டர்களின் வருகை, அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் இருந்த உறவு, தான் பெரியப்பா என்று அழைத்த எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இருந்த நட்பு, சிறுவயதில் தன் அண்ணன் அழகிரியுடனான உறவு, சின்னச்சின்ன சண்டைகள், துர்காவைப் பெண் பார்க்கச் சென்றது எனப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இந்தப் புத்தகத்தில் உண்டாம்.

எழுத்தாளர் ஆன ஸ்டாலின்!

ஸ்டாலின் என்றாலே மிசாவும் சிறைக்கொடுமைகளும் சிட்டிபாபுவின் மரணமும் அனைவருக்கும் நினைவு வரும். ஆனால் ஸ்டாலின் மிசாவில் கைதாவது வரை மட்டும்தான் முதல் பாகத்தில் உள்ளது, சிறை அனுபவங்கள் எல்லாம் அடுத்த பாகத்தில்தானாம்.

கருணாநிதியின் புத்தகங்களை வெளியிடும் பூம்புகார் பதிப்பகமே ஸ்டாலினின் சுயசரிதையையும் வெளியிடவிருக்கிறது. பிப்ரவரி 28-ம் தேதி அன்று ராகுல் காந்தி ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிடுகிறார். காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்களும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளார்கள்.

ஒருபுறம் ஸ்டாலினின் சுயசரிதை தூண்டும் ஆர்வம். இன்னொருபுறம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டாண்டுகளே இருக்கும் நிலையில் தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கும் மேடை என்ற பரபரப்பு. பிப்ரவரியின் இறுதிநாளைத் தமிழக அரசியல் களம் ஆவலுடன் எதிர்நோக்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism