Published:Updated:

`எங்க டார்கெட் 2021 தேர்தல்தான்!' - கமல்ஹாசன்

`உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என ஒருபோதும் வருந்தியதில்லை. ஆனால், எங்கள் இலக்கு 2021தேர்தல்தான்' என்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். சென்னை ஆழ்வார்பேட்டை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து கட்சியின் 3வது தலைமை அலுவலகத்தை அவர் திருச்சியில் தொடங்கிவைத்தார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

திருவெறும்பூா் பெல், கணேசபுரம் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தைக் கொடியேற்றி தொடங்கிவைத்தார். முன்னதாக கிராம சபை விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கமல், தங்கள் கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

`தனக்கு உதவிய தமிழகத்துக்கு நண்பர் ரஜினி உதவ வேண்டும்!' - கமல்ஹாசன்

தொடர்ந்து திருவெறும்பூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், ``வரும் 2021ம் ஆண்டு தேர்தல்தான் எங்களது இலக்கு. அதற்காகத்தான் மக்களைத் தேடி வந்துகொண்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான், தலைமை அலுவலகம் திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது. பராசக்தி எடுத்த காலத்திலிருந்தே கருத்துரிமை பிரச்னை உள்ளது.

கட்சி நிர்வாகிகள்
கட்சி நிர்வாகிகள்

அதேபோல், தர்பார் திரைப்படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங்தான். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது தவிர்த்ததால் எவ்வித வருத்தமும் இல்லை. பணம் கொடுக்காமல் ஓட்டு வாங்குவது எளிதென்று கருதவில்லை. ஆனால், பணம் வாங்காமல்தான் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அது சாத்தியம்தான். நேர்மையை நோக்கிச் செல்ல நாங்கள், நீங்கள் உள்ளிட்ட அனைவரும் பழக வேண்டும். தமிழக அரசியலில் வெற்றிடம் என்று ஒன்று இல்லை. மக்கள் மனதில் இடம் உள்ளது. தகுதியானவர்கள் அந்த இடத்துக்கு வரவேண்டும். அதைப் பிடிப்பது யார் என்பதே இங்கு கேள்வி. தமிழகத்துக்குத் தேவையான திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

சரியான திசையில் செல்ல ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். அதற்காக அனைவரும் பங்களிக்க வேண்டும். யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.