Election bannerElection banner
Published:Updated:

தஞ்சை: `ஓட்டை, காசு கொடுத்து வாங்கவே மக்களை ஏழையாக வைத்திருக்கிறார்கள்!’ - கமல்ஹாசன் பேச்சு

கமல்ஹாசன்
கமல்ஹாசன் ( ம.அரவிந்த் )

``மக்கள் குறைகளைச் சொல்ல கிராமசபைக் கூட்டத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. அது ஒரு நல்வழி எனக் காட்டினோம். இப்போது மற்றவர்கள், அதை போட்டி போட்டுக்கொண்டு செய்துவருகிறார்கள்’’ என கமல்ஹாசன் தெரிவித்தார்.

``தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகள், ஏழ்மையை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்துவைத்திருக்கிறார்கள். ஏழ்மை நீங்கிவிட்டால், மக்கள் சுயமாக ஓட்டுப்போடத் தொடங்கிவிடுவார்கள். ஏழ்மையைவைத்துத்தான், ஓட்டை, காசு கொடுத்து வாங்குகின்றனர்’’ என்று தஞ்சாவூர் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

பிரசாரத்தில் பேசும் கமல்ஹாசன்
பிரசாரத்தில் பேசும் கமல்ஹாசன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மூன்றாம்கட்டத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும், தனியார் மண்டபம் ஒன்றில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

கமல்ஹாசன் பேசுகையில், ``நேர்மையானவர்கள் மத்தியில் நின்று பேசுகிறேன் என்பது பெருமையாக இருக்கிறது. புதிய மாற்றத்துக்குத் தமிழகம் தயாராகிவிட்டது. மாற்றத்தைக் கொண்டுவரும் உரிமையும் கடமையும் மக்களாகிய உங்களிடம் இருக்கிறது. இதனால் தமிழகம் புதிய மாற்றத்தை நோக்கி நகரும்.

தஞ்சாவூரில் கமல்ஹாசன்
தஞ்சாவூரில் கமல்ஹாசன்

எம்.ஜி.ஆர் தொடங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடக்கின்றன. அது மீட்டெடுக்கப்பட வேண்டும். முறைகேடுகளையும் களைய வேண்டும். இது போன்ற பல பிரச்னைகளை மக்கள் நீதி மய்யம் பட்டியிலிட்டு வைத்திருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் அதைச் சரிசெய்யும்.

தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகள் ஏழ்மையை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்துவைத்திருக்கிறார்கள். காரணம், ஏழ்மையை வைத்துததான், ஓட்டை, காசு கொடுத்து வாங்க முடியும். ஏழ்மை நீங்கிவிட்டால், மக்கள் சுயமாக ஓட்டுப் போட்டுவிடுவார்கள்.

திருச்சி: `பிரசாரம் தொடங்கும் முன்பே உடைந்த கண்ணாடி!’-தொண்டர்கள் மனநிலையை மாற்றிய கமல்

எம்.ஜி.ஆரை நான் கையில் எடுக்கவில்லை. அவர்தான் என்னை முதலில் கையில் எடுத்து தோளில் சுமந்தார். ஏதோ நான் அரசியலுக்காக எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்துகிறேன் எனப் பேசுகிறார்கள். நான் எம்.ஜி.ஆர் குறித்துப் பேசிய பல வீடியோக்கள் இருக்கின்றன. சிலர் தேர்தல் நேரத்தில் மட்டுமே எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசுவார்கள். எலெக்‌ஷன் முடிந்தவுடன் கலெக்‌ஷனில்தான் கவனமாக இருப்பார்கள். அது நிச்சயம் நடக்காது.

ஒருகாலத்தில் சரித்திரத்தில் தலைநகராக விளங்கிய தஞ்சை இன்று திறந்தவெளிச் சாக்கடை ஓடும் நகராக இருக்கிறது. தஞ்சையிலுள்ள 51 வார்டுகளில் சாக்கடை என்பது தீர்க்கப்படாத பிரச்னை. நாங்கள் சோழர்கள் காலத்து ஏரிகளைச் சீரமைக்க வந்திருக்கிறோம். அதற்கு எங்கள் கரத்துக்கு நீங்கள் வலு சேர்க்க வேண்டும்.

பிரசாரத்தில் கமல்ஹாசன்
பிரசாரத்தில் கமல்ஹாசன்

பல நல்ல நேர்மையான திட்டங்களுடன் வந்திருக்கிறோம். வெறும் அடுக்கு மொழிச் பேச்சு அல்ல, அலங்காரச் பேச்சல்ல, உங்களைக் கொஞ்ச நேரம் சந்தோஷப்படுத்திவிட்டு, அடுத்த தேர்தலில் மட்டும் தலையைக் காட்டும் ஆட்கள் அல்ல நாங்கள். வேலை செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் மும்முரமான திறமையாளர்கள் பலரும் கூடி இதற்காக முன்வந்திருக்கிறார்கள்.

அவர்கள் செய்ய வேண்டிய கடமையை இத்தனை நாள் மறுக்கப்பட்ட உரிமையை பெற்றுத் தருவார்கள். என்னுடன் அரசியலுக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் தங்களுக்கென்று தொழில் உள்ளவர்கள். தங்களுக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டும். அப்படியிருக்கும்போது அரசியலில் சம்பாதிக்க மாட்டார்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ஆண்ட, ஆளும் கட்சியினர், `நாங்கள் நேர்மையானவர்கள்’ என சொல்லிக்கொள்ள தைரியமோ, தகுதியோ கிடையாது. நாங்கள் பேசி, நீங்கள் கேட்பவை அல்ல எங்கள் அரசியல். நீங்கள் பேச, நாங்கள் செவி சாய்ப்பதுதான் எங்கள் அரசியல். மக்கள் குறைகளைச் சொல்ல கிராமசபைக் கூட்டத்தை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. அது ஒரு நல்வழி எனக் காட்டினோம். இப்போது மற்றவர்கள் அதைப் போட்டி போட்டுக்கொண்டு செய்துவருகிறார்கள். நாங்கள் பழி வாங்கும்,பழி போடும் அரசியலைச் செய்ய மாட்டோம். வழிகாட்டும் அரசியலைச் செய்ய வந்திருக்கிறோம்.

``ரஜினி-கமல், அ.தி.மு.க-வுக்கு வாக்கு சேகரிக்கிறார்கள்!''- சீமான் சொல்லும் ரகசியம் என்ன?

விளைநிலங்களை அழிக்கும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதற்காக மக்கள் நீதி மய்யம் குரல் கொடுக்கும். விவசாயிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மானியங்கள் வழங்க வேண்டும். அரசு நினைக்கும் மானியத்தை வழங்கக் கூடாது. வரலாற்றுச் சிறப்பு மிக்க சரஸ்வதி மகால் நூலகம் மொத்தமாகக் களவுபோகும் முன்பாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தச் சமூகத்தில் நானும் நீங்களும் பங்காளிகள். `கொரோனா நேரத்தில் பிரசாரத்துக்குச் செல்கிறீர்களே?’ எனக் கேட்டார்கள். பிரசாரத்தை நான் கூட்டத்தின் நடுவே செய்யவில்லை. குடும்பத்தின் நடுவே செய்கிறேன். எனக்கு ஒன்று என்றால், அவர்கள் என்னை பார்த்துக்கொள்வார்கள். நான் அதற்கு நன்றியாக அவர்களைப் பாதுகாப்பேன்’’ என்றார்.

“விஜயகாந்த் மனிதர்... ரஜினி வியாபாரி... கமல் மனசாட்சியற்றவர்!”

பின்னர், இளம்பெண் ஒருவர், `அரசியலில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதனால்தான் பெண்கள் அரசியலுக்கு வர தயக்கம் காட்டிவருகிறார்கள். உங்களுடையை கட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்குமா?’ எனக் கேட்டார். அதற்கு, ``பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் மக்கள் நீதி மய்யம்தான்’’ என கமல்ஹாசன் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு