Published:Updated:

`எந்தக் கட்சிக்கும் கொடிக்கம்பம் வைக்க அனுமதியில்லை!' -கமிஷனர் அதிரடியால் முடிவை மாற்றிய ம.நீ.ம

ம.நீ.ம கொடிக்கம்பம்
ம.நீ.ம கொடிக்கம்பம்

மறைந்த முதல்வர்கள், தலைவர்கள் ஏற்றி வைத்த கொடிக்கம்பங்களை அகற்றி வரலாற்று நிகழ்வுகளை அழிக்கக்கூடாது என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் கொடிக்கம்பம், அறிவிப்புப் பலகை, ஃபிளக்ஸ் போர்டுகள் அமைக்கக்கூடாது என மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் நின்ற கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. கொடிக்கம்பங்கள் மட்டுமல்ல அதன் பீடங்களும் மொத்தமாகப் பெயர்த்து அகற்றப்பட்டன. மறைந்த முதல்வர்கள், தலைவர்கள் ஏற்றி வைத்த கொடிக்கம்பங்களை அகற்றி வரலாற்று நிகழ்வுகளை அழிக்கக்கூடாது என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால், நீதிமன்ற உத்தரவுப்படி கொடிக்கம்பங்கள் அகற்றப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

ஆணையர் சரவணகுமார்
ஆணையர் சரவணகுமார்

இதன்பின்னர், அனைத்து அரசியல் கட்சியினரிடம் சுமுகமாகப் பேசி இனி சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் கொடிக்கம்பங்கள் அமைக்கக்கூடாது என கமிஷனர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து எந்த அரசியல் கட்சியினரும் கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி கேட்பதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் நாகர்கோவில் இளங்கடைப் பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் சென்றது.

`ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறது; பேனர்கள் வேண்டாம்!’ - ரசிகர்களுக்கு விஜய், சூர்யா அறிவுறுத்தல்

உடனே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். அப்போது அந்தக் கொடிக்கம்பம் தனியார் பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். சாலை ஓரங்களிலும் பொது இடங்களிலும் கொடிக்கம்பங்கள் அமைக்கக்கூடாது என்பதால் தனியார் நிலத்தில் கொடிக்கம்பம் அமைத்திருப்பதாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கமல்ஹாசனுடன் ராஜசேகர்
கமல்ஹாசனுடன் ராஜசேகர்

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த ராஜசேகர் கூறுகையில், ``உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து நாகர்கோவில் மாநகராட்சியில் கொடிக்கம்பங்கள் அமைக்கக்கூடாது என கமிஷனர் சரவணகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்விதமாக எந்த நிகழ்ச்சியும் செய்யக்கூடாது என கமல்ஹாசன் கூறியுள்ளதால் நாங்கள் எங்கள் கட்சி நிர்வாகியின் பட்டா நிலத்தில் கொடிக்கம்பம் அமைத்துள்ளோம். அடுத்ததாக பீச் ரோடு பகுதியிலும் பட்டா நிலத்தில் கொடி ஏற்ற உள்ளோம். மற்ற கட்சிகளுக்கு முன் உதாரணமாக நாங்கள் இவ்வாறு அமைத்துள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு