Published:Updated:

`தேர்தல் வித்தகர் பிரசாந்தை ஏன் நீக்கினார் கமல்?!'- மக்கள் நீதி மய்யம் சொல்லும் அதிர்ச்சிக் கணக்கு

வருகின்ற 50 வாரங்களில் கடுமையாக உழைக்க இருக்கிறோம். கிளைக் கழகத்தை வலுவாகக் கட்டமைக்க இருக்கிறோம். எங்களுடைய நோக்கமெல்லாம் வருகிற சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தித்தான்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ரஜினியின் மக்கள் மன்றமும் கமலின் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடப் போவதில்லை; யாருக்கும் ஆதரவளிக்கப் போவதுமில்லை எனத் திட்டவட்டமான தகவல் வெளியாகிவிட்டது.

கமலின் மக்கள் நீதி மய்யம்
கமலின் மக்கள் நீதி மய்யம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. இந்தத் தேர்தலுக்கான 'சீட்' பங்கீடு குறித்து அ.தி.மு.க. - தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அண்மையில், 'திரைத்துறையில் கமலின் 60 ஆண்டுகள்' தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினி, "தமிழகத்தில் நேற்று நடந்த அற்புதமும் அதிசயமும் நாளையும் நடக்கும். அவற்றைப் பொதுமக்கள் நிகழ்த்திக் காட்டுவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதோடு, ரஜினி மக்கள் மன்றம் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. சில அரசியல் கட்சிகளும், `அவரின் ஆதரவைப் பெறலாமா?' என்ற ஆலோசனையில் இருந்தன.

ரஜினி -கமல்
ரஜினி -கமல்

இந்தநிலையில், `உள்ளாட்சித்தேர்தலில் நாங்கள் போட்டியிடப்போவதில்லை' என்ற அறிவிப்பை கமல் வெளியிட்டார். ரஜினி தரப்பிலிருந்தும் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தினாலும், `இருவருமே ராஜதந்திரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்' என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம், ``ஐம்பது ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தைப் பந்தாடிவிட்டன. ஆட்சியை மாற்ற வேண்டும், அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் அரசியலில் கமல் குதித்தார். அவருக்குப் பெயர் எடுக்கவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

அவர் எல்லாவற்றையும் திரைப்படத்திலேயே சம்பாதித்துவிட்டார். நாங்கள் ஒன்றும் ஆட்சியாளர்களின் குறைகளைப் புதிதாகச் சொல்லவில்லை. படத்தில் கமல் நடித்துக் கொண்டிருக்கும்போது ஆட்சியாளர்களின் குறைகளை தைரியமாக சுட்டிக்காட்டிப் பேசியவர். இப்படி இருக்கும் சூழலில் ஏன் உள்ளாட்சியில் போட்டியிடவில்லை என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு சதவிகிதம் வாக்குகளைப் பெற்றோம். குறிப்பாக நகரப்பகுதிகளில் சொல்லிக்கொள்ளும் அளவில் வாக்குகளை வாங்கினோம்.

ஆனால், கிராமப் புறங்களில்தான் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றோம். காரணம் எங்களுடைய கட்சிக் கட்டமைப்பு அங்கு சரியாக அமைக்கப்படவில்லை. அதைச் சரிப்படுத்தவேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் திட்டமிட்டுச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். வருகின்ற 50 வாரங்களில் கடுமையாக உழைக்க இருக்கிறோம். கிளைக் கழகத்தை வலுவாகக் கட்டமைக்க இருக்கிறோம். எங்களுடைய நோக்கமெல்லாம் வருகிற சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தித்தான். அதை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். கமல், ரஜினி இருவருக்குமே தமிழகத்தில் மாற்றத்தைக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

கமல், ரஜினி
கமல், ரஜினி

அ.தி.மு.க, தி.மு.க இரு கட்சிகளையும் அப்புறப்படுத்த வேண்டுமென்றால் இரு கட்சிகளும் தேவைப்பட்டால் இணைவோம் என்ற வார்த்தையைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் இணைவதில் எந்தத் தயக்கமும் இல்லை. அப்படி இணைந்தால் மிகப்பெரிய அளவில் மாற்றத்தையும் கொடுக்கமுடியும்" என்றவரிடம்,

`தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் ஏன் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் பணிகளில் இருந்து விலகினார்?' என்றோம். ``அவர் எங்களிடம் இருந்துகொண்டே நான்கைந்து கட்சிகளிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட நபரால் எங்களுக்குப் பெரிதாக மாற்றத்தைத் தரமுடியாது என்பதுதான் காரணம்" என்றதோடு முடித்துக்கொண்டார்.