Published:Updated:

`அவங்ககிட்ட பி.கே-வைவிட பெரிய ஆட்கள் இருக்கிறார்கள்!’ - ம.நீ.ம நிர்வாகிகள் சொல்லும் காரணம்

பிரேம் குமார் எஸ்.கே.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மண்டலத்துக்கு இரண்டு மாநிலச் செயலாளர்கள் வீதம் 16 மாநிலச் செயலாளர்கள் பொறுப்பில் இருப்பார்கள்.

கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன்
கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சிகள் காத்துக்கிடக்கின்றன. அதேநேரம், 2021-ல் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதன் காரணமாகத்தான் தேர்தல் வித்தகரான பிரஷாந்த் கிஷோரை (பி.கே) தங்கள் கட்சிக்காகப் பணியாற்ற வருமாறு தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் கோரிக்கை வைத்தன.

கமல் - பிரஷாந்த் கிஷோர்
கமல் - பிரஷாந்த் கிஷோர்

அ.தி.மு.க தரப்பிலிருந்தும் தி.மு.க தரப்பிலிருந்தும் ஐபேக் நிறுவனத்துடன் தொடர்ச்சியாகப் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கைகோத்தார் பிரசாந்த் கிஷோர். `பிரதான கட்சிகளையும் தாண்டி எங்களோடு பி.கே-வை ஒப்பந்தம்போட வைத்ததே மிகப் பெரிய வெற்றி' என ம.நீ.ம தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில் நடைபெற்ற வேலூர் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. `எங்களின் கவனம் 2021 சட்டப் பேரவை தேர்தலில்தான் உள்ளது' என்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தை 8 மண்டலங்களாகப் பிரித்து, ஒரு மண்டலத்துக்கு 2 மாநிலச் செயலாளர்கள், கிராமம், ஊராட்சி, நகராட்சி, சட்டப்பேரவை, நாடாளுமன்றம் எனப் பிரித்து அவற்றுக்குத் தனித் தனியாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தற்போது வரை மாவட்டப் பொறுப்பாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இனி, மாவட்டத் தலைவர், செயல் தலைவர், இணை, துணைச் செயலர் எனப் பல பொறுப்புகளைப் புதிதாக உருவாக்கியுள்ளனர்.

இதற்கான விளக்கக் கூட்டம் இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. `2021 நமக்கான ஆட்சி’ என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் 16 -ம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் கமல் கலந்துகொள்ள இருக்கிறார். வழக்கமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் பாணியில் இல்லாமல், வேறு மாதிரியான அமைப்பில் இது இருக்கும் என்பதால் நிர்வாகிகளுக்குத் தங்களின் பணிகளை தெளிவுபடுத்தவே இந்த விளக்க கூட்டங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம். ``மண்டலத்துக்கு இரண்டு மாநிலச் செயலாளர்கள் வீதம் 16 மாநிலச் செயலாளர்கள் பொறுப்பில் இருப்பார்கள். இந்தப் பொறுப்பாளர்கள் இப்போதிலிருந்தே தேர்தலுக்கான பணிகளை கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள். இதுதவிர 6 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். 6 பேரும் ஆறுவிதமான துறைகளில் கவனம் செலுத்துவார்கள்.

கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் நோக்கம். ஒவ்வொரு வாக்காளரும் ஒரு நிர்வாகியைத் தொடர்புகொள்ளும் நிலையில் இந்த விரிவாக்கப் பணிகள் நடைபெறும்” என்றவர்,

``தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். 12,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், அதில் பல்லாயிரக்கனக்கான கிராமங்கள் உள்ளன.

பழனிசாமி - பிரஷாந்த் கிஷோர்
பழனிசாமி - பிரஷாந்த் கிஷோர்

இதுபோக, வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பொறுப்புகள் மாநிலப் பொறுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு நிர்வாகியும் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். சேர்த்த உறுப்பினர்களின் பட்டியலும் ஒவ்வொரு உறுப்பினரிடமும் இருக்க வேண்டும். இந்தப் பணிகளில் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் பங்களிப்பும் இருக்கிறது” என்றார்.

பிரஷாந்த் கிஷோர், ஒரே நேரத்தில் அ.தி.மு.க-வுக்கும் ம.நீ.ம கட்சிக்கும் பணியாற்றுவதாகச் சொல்லப்படுகிறதே என்று கேட்டோம், ``அ.தி.மு.க தரப்பில் இருந்துதான் இதுபோன்ற தகவல்களைப் பரப்பிவிடுகின்றனர்.

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

இவர்களுக்கு ஐடியா கொடுக்க பிரஷாந்த் கிஷோரைவிட பெரிய ஆட்கள் இருக்கிறார்கள். பொதுவான ஆள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இது போன்று கருத்துகளைப் பேசி வருகிறார்கள்.

`அன்பே சிவம்’ படத்துல கமல் போட்டிருந்த கண்ணாடிக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு! - #60YearsOfKamal

பிரஷாந்த் கிஷோருக்குப் பணம்தான் குறிக்கோள் என்றால் அவர் எங்களைத் தேடி வந்திருக்கவே மட்டார். நாங்கள் சிறிய கட்சி. எவ்வளவு பணத்தை எங்களால் கொடுத்துவிட முடியும். ஆனால், அவருக்கு தமிழகத்தில் எங்கள் கட்சியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. விருப்பம் இருக்கிறது.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

ஒரே மாநிலத்தில் ஒரே நிறுவனம் எப்படி இரு கட்சிகளுக்கு பணியாற்ற முடியும். அப்படிப் பணியாற்றினால் அவர்களை இனி யார் நாடுவார்கள்?” என்றார் இயல்பாக.