Published:Updated:

`மோடியும் ரஜினியும் எனது இரு கண்கள்!’ - அர்ஜுனமூர்த்தி

அர்ஜுனமூர்த்தி
அர்ஜுனமூர்த்தி

ரஜினிகாந்த் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜுனமூர்த்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில், கட்சி நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைத்தார். அதில் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும், அர்ஜுனமூர்த்தியைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்தார். பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தவர் அர்ஜுனமூர்த்தி. ரஜினி புதிதாகத் தொடங்கவிருந்த கட்சியில் சேர்வதற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

ரஜினியுடன் அர்ஜுனமூர்த்தி
ரஜினியுடன் அர்ஜுனமூர்த்தி

வரும் டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகவும், ஜனவரியில் கட்சி தொடக்கம் என்றும் கூறியிருந்த ரஜினி, உடல்நிலை காரணமாக, தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். ரஜினி அறிவிப்பால், தான் அரசியலிலிருந்து முற்றிலும் விலகுவதாக தமிழருவி மணியன் இன்று காலை அறிவித்திருந்தார்.

``நான் செய்த ஒரே குற்றம்’ ; போகிறேன், வர மாட்டேன்!’ - தமிழருவி மணியன் உருக்கம்

இதைத் தொடர்ந்து, ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜுனமூர்த்தி இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையில்,``தலைவரும் அண்ணனுமான ரஜினிகாந்த் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். அவர் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடனும் ஆசையுடனும் இருந்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவரின் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதை நாம் அனைவரும், நமது வீட்டில் ஒருவருக்கு ஒன்றென்றால் எப்படிப் பார்ப்போமோ, அப்படிப் பார்க்க வேண்டும். மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். ரஜினியின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசியவர் ``மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடப்பது எவ்வளவு நல்லது என்பதை நம்மால் உணர முடியும். தயவுகூர்ந்து அனைவருமே அவருடைய முடிவை, அவரின் உடல்நலம் கருதியே எடுத்திருக்கும் முடிவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அவரின் இந்த முடிவை எதிர்த்தோ, மாற்றுக் கருத்தோ அல்லது விமர்சனமோ செய்யக் கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

அர்ஜுனமூர்த்தி
அர்ஜுனமூர்த்தி

என்னுடைய ஒரு கண் மோடி, இன்னொரு கண் ரஜினிகாந்த். இவர்கள் இரண்டு பேருமே இந்திய மக்களுக்கும் தமிழகத்துக்கும் ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்கள். அந்த ஆர்வத்தால்தான் ஏதாவது மாற்றத்தை தலைவர் செய்வர் என்ற அதீத நம்பிக்கை எனக்கு இருந்தது. அவர் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் அன்பும்தான் அவரோடு சேர்ந்து பணியாற்றக் காரணமாக இருந்தன.

அவரின் எண்ணத்தில் தமிழக மக்கள் அனைவருமே நலமுடன் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் என்றுமே குறைந்ததே கிடையாது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் அவருடன் இணைந்து, அவருக்குத் தேவையான உதவிகளையும் ஆதரவையும் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய முக்கியமான வேண்டுகோள்.

அர்ஜுனமூர்த்தி
அர்ஜுனமூர்த்தி

என்னுடைய நிலைப்பாடு என்பது அவருடன் இருப்பதுதான். அவர் மக்களுக்குச் சேவை செய்வேன் என்று கூறியிருக்கிறார். அதற்குத் துணை நிற்பேன். அவர் ஒரு மிகப்பெரிய தலைவர். பேராற்றால் கொண்ட மனிதர். ஓர் ஆன்மிகத் தேடல் கொண்ட மிகச்சிறந்த மனிதர். அவருடன் இருப்பதில் என்ன சங்கடம்... அவருடன்தான் இருக்க வேண்டும். அவருடனேயே பயணிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்தக் காரணத்துக்காகத்தான் அவருடன் இணைந்தேன்.

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் - யார் இந்த அர்ஜுனமூர்த்தி?

பா.ஜ.க-வுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். பா.ஜ.க-வில் எனக்கு எப்போதுமே ஒரு நன்மதிப்பு உண்டு. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. அந்த மாற்றத்துக்குத் தலைசிறந்த தலைவராக ரஜினி இருந்ததால் அவருடன் சேர்ந்து பயணிக்க ஆசைப்பட்டேன்’’ என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு