Published:Updated:

`வீட்டுக்கு வரமாட்டீங்களா?' - ஜி.கே.வாசனை ஆச்சர்யப்படுத்திய மோடி!

ஜி.கே.வாசன் அணிவித்த சால்வையைக் கழற்றவந்த மோடி, என்ன நினைத்தாரோ? அதைக் கழற்றாமல் கழுத்திலேயே அணிந்துகொண்டு நடந்தார்.

ஜி.கே.வாசன்- மோடி
ஜி.கே.வாசன்- மோடி

இந்திய - சீன நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தனி விமானத்தில் இன்று காலை 11 மணிக்குச் சென்னை வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மொத்த அமைச்சரவையும் வரவேற்றது. பி.ஜே.பி. கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், பா.ம.க., புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளும் பிரதமரை வரவேற்றன.

மோடியுடன் கை குலுக்கும் எடப்பாடி
மோடியுடன் கை குலுக்கும் எடப்பாடி
மோடிக்குச் சால்வை அணிவிக்கும் ஓ.பி.எஸ்.
மோடிக்குச் சால்வை அணிவிக்கும் ஓ.பி.எஸ்.

பிரதமருக்கு, புத்தகம் ஒன்றைப் பரிசாக அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியா - சீனா இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தைச் சந்திப்பு இடமாகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். ``தமிழ் கலாசாரப் புகழும், வரலாறும் சீனா வரைக்கும் பரவியிருக்குறதாலதான், மாமல்லபுரத்தைத் தேர்ந்தெடுத்தோம்” எனப் பிரதமர் கூற, எடப்பாடியார் முகமெல்லாம் மத்தாப்பு. துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி, மற்ற அமைச்சர்களின் வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனைக் கண்டவுடன் குஷியான பிரதமர், ``ஹலோ... மிஸ்டர் வாசன். என்ன டெல்லி பக்கமே வர மாட்டேங்கறீங்க? நான் கூப்பிட்டாத்தான் வீட்டுக்கு வந்து பார்ப்பீங்களா?” என்று கேட்க, வெட்கத்தில் முகம்சிவந்த ஜி.கே.வாசன், ``வர்றேன் ஜி. கண்டிப்பா வீட்டுக்கு வந்து பார்க்குறேன்” என்று உறுதியளித்தார். ``சும்மா சொல்லிட்டு அப்படியே போய்விடக் கூடாது. உங்க வரவைக் கண்டிப்பா எதிர்பார்ப்பேன்” என பிரதமர் கலகலக்க, அந்த இடமெல்லாம் சிரிப்பொலி பூத்தது.

மோடியுடன் பேசிய ஜி.கே.வாசன்
மோடியுடன் பேசிய ஜி.கே.வாசன்
மோடியுடன் கைகுலுக்கும் ஜி.கே.வாசன்
மோடியுடன் கைகுலுக்கும் ஜி.கே.வாசன்

அருகிலிருந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவிடம், ``விஜயகாந்த் எப்படியிருக்கார்?” என்று அக்கறையுடன் பிரதமர் கேட்க, ``அவர், நலம் ஜி. சீக்கிரமே உங்களை வந்து சந்திப்பார்” என்று கூறியுள்ளார். ஜி.கே.வாசன் அணிவித்த சால்வையைக் கழற்ற வந்த மோடி, என்ன நினைத்தாரோ? அதைக் கழற்றாமல் கழுத்திலேயே அணிந்துகொண்டு நடந்தார்.

இந்த முறை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை மோடி தோளில் தட்டவில்லை. விஜயபாஸ்கரிடம் நலம் விசாரித்துவிட்டு நகர்ந்துவிட்டார். அருகிலிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பிரதமர் நலம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட அமைச்சர் விஜயபாஸ்கரிடம், “அப்பறம் பேசிக்கலாம்” என்று ஒற்றைவார்த்தையில் ஓரங்கட்டிவிட்டார். பிரதமரின் ரியாக்‌ஷனைப் பார்த்து விஜயபாஸ்கரின் முகம் சுருங்கிவிட்டது. மருத்துவர் ராமதாஸின் சார்பாக ஜி.கே.மணி வாழ்த்து தெரிவிக்க, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இணைந்து கொண்டார்.

`யாருக்காகவும் என் புரோகிராமை மாத்த முடியாது!'- எம்.எல்.ஏ பேச்சால் சீறிய அமைச்சர் விஜயபாஸ்கர்

இன்றைய வரவேற்பில் அமைச்சர்கள் பலரது புருவத்தையும் உயர்த்தியது, ஜி.கே.வாசனுடன் பிரதமர் காட்டிய நெருக்கம்தான். வாசனை பி.ஜே.பி-க்குள் இழுக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை நடத்துவதாகச் செய்திகள் கசியும் நிலையில், வாசனுக்கு மோடி முக்கியத்துவம் அளித்திருப்பது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.