Published:Updated:

18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை... பிரதமரின் அறிவிப்பு சாத்தியமா?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்றால், கடந்த எட்டு ஆண்டுகளில் 16 கோடிப் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.

18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை... பிரதமரின் அறிவிப்பு சாத்தியமா?

ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்றால், கடந்த எட்டு ஆண்டுகளில் 16 கோடிப் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

மத்திய அரசின் துறைகளிலும் அமைச்சகங்களிலும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கும் பிரதமர் மோடி, ‘வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துங்கள்’ என்றும் அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறார். அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை என்பதை இலக்காகவைத்துச் செயல்படப்போவதாகவும் கூறியிருக்கிறார். வேலைவாய்ப்பு குறித்து கடந்த எட்டு ஆண்டுகளாக அதிகம் அலட்டிக்கொள்ளாத பிரதமருக்கு, ஏன் இந்த திடீர் அக்கறை?

வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்னை இந்தியாவுக்குப் புதிது கிடையாது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் வேலையின்மை பிரச்னை தீவிரமாகவே இருந்தது. அந்தப் பிரச்னையைக் கையிலெடுத்த நரேந்திர மோடி, ‘ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை’ என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அதை, ஒவ்வொரு மேடையிலும் அவர் முழங்கினார். அது இளைஞர்கள் மத்தியில் எடுபட்டது. பா.ஜ.க-வின் வெற்றிக்கும் கைகொடுத்தது. ஆனால், பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடன், அந்த வாக்குறுதியை மோடி அடியோடு மறந்துவிட்டார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல், 2019-ல் வந்தது. அப்போது, ‘இரண்டு கோடிப் பேருக்கு வேலை’ என்று முந்தைய தேர்தலில் தாம் அளித்த வாக்குறுதி பற்றி மோடி மூச்சுவிடவே இல்லை. அந்த நேரத்தில், இந்தியாவில் வேலையின்மைப் பிரச்னை தீவிரமடைந்திருந்தாலும், பா.ஜ.க வெற்றிபெற்றது. அதன் பிறகும், வேலைவாய்ப்புகளில் மோடி அரசு கவனம் செலுத்தவில்லை. ஆனால், இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதாலேயே வேலைவாய்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் பிரதமருக்கு வந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை... பிரதமரின் அறிவிப்பு சாத்தியமா?

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் இதுவரை இல்லாத அளவுக்குத் தலைவிரித்தாடுவதாக எதிர்க்கட்சியினரும் பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். இன்னொரு புறம், வேலையில்லா திண்டாட்டத்தின் தீவிரம் குறித்து புள்ளிவிவரங்களுடன் பத்திரிகைகளில் ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகிவருகின்றன. தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் பெரிய அளவுக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை என்பதுடன், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்ற பா.ஜ.க அரசின் நடவடிக்கைளால் ஏராளமானோர் வேலையிழந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 லட்சம் பேர் வேலை இழந்ததாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ‘நீடித்த வேலைவாய்ப்புக்கான மையம்’ மற்றும் ‘ஸ்டேட் ஆஃப் வொர்க்கிங் இந்தியா’ நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2011-ம் ஆண்டுக்கும் 2018-ம் ஆண்டுக்கும் இடையே வேலையின்மை விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்ததாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வேலையின்மையின் தீவிரம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, உண்மையான புள்ளிவிவரங்களை மறைப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்ததாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை கிளம்பியது. இப்போது, மத்திய அரசின் தொழிலாளர் துறையே ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. ‘இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்திருக்கிறது’ என்பதுதான் அந்தத் தகவல். மேலும், நகர்ப்புறத்தில் 7.8 சதவிகிதம், கிராமப்புறத்தில் 5.3 சதவிகிதம் என இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும் தொழிலாளர்துறையின் புள்ளிவிவரம் கூறுகிறது.

ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்றால், கடந்த எட்டு ஆண்டுகளில் 16 கோடிப் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது இருந்ததைவிட, தொழிலாளர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2016-17-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட், கட்டுமானம், சுரங்கம், பொது நிர்வாகம், பாதுகாப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் ஒட்டுமொத்தமாக 40.7 கோடிப் பேர் பணியில் இருந்திருக்கிறார்கள். 2020-21-ம் ஆண்டில், அது 37.8 கோடியாகக் குறைந்திருக்கிறது. அதாவது, வேலையில் இருந்த 2.9 கோடிப் பேருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இதுபோக, ஒவ்வோர் ஆண்டும், சுமார் 1.25 கோடிப் பேர் படிப்பை முடித்துவிட்டு புதிதாக வேலை தேட ஆரம்பிக்கிறார்கள். ‘ஏற்கெனவே இருக்கிறவர்களுக்கே வேலைகள் பறிபோகும் நிலையில், 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை என்பதெல்லாம் சாத்தியமேயில்லை’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

குமரகுரு
குமரகுரு

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான குமரகுருவிடம் பேசினோம். “ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்று வாக்குறுதி அளித்ததைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு பேசுகிறார்கள். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்அப் இந்தியா, முத்ரா கடன் போன்ற திட்டங்கள் மூலமாக வங்கிகளில் கடன் கொடுக்கப்பட்டு, ஏராளமானோர் தொழில்முனைவோர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் கோடிக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கிறார்கள். ‘வேலை தேடுபவராக இல்லாமல்... வேலை கொடுப்பவர்களாக மாறுங்கள்’ என்று மோடி சொன்னார். அப்போதுதான், ‘பக்கோடா கடை போட்டால்கூட இரண்டு பேருக்கு வேலை கொடுக்கலாம்’ என்று அவர் சொன்னார். அதைப் பிடித்துக்கொண்டு பிரதமர் பக்கோடா விற்கச் சொல்கிறார் என்று கிண்டல் செய்தார்கள். மத்திய அரசு கொடுத்த பல்வேறு கடன் மற்றும் தொழில் திட்டங்கள் மூலமாக அமைப்புசாரா தொழில்களில் கோடிக்கணக்கானோருக்கு வேலை கிடைத்திருக்கிறது. அமைப்புசாரா துறை என்பதால், அது பற்றிய புள்ளிவிவரங்கள் இல்லை” என்றார் குமரகுரு.

சொன்னதைச் செய்வதுதான் ஆள்வோருக்கு அழகு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism