Published:Updated:

மோடி vs எடப்பாடி... கோஷ்டிகளால் திணறும் திருப்பூர் அ.தி.மு.க! - கழுகார் அப்டேட்ஸ்

புயல் நிலவரத்தைப் பார்வையிடுவதற்காக தென் மாவட்டங்களுக்கு விசிட் சென்றிருந்த கழுகார், அங்கிருந்தே மெயிலில் தகவல்களை அனுப்பியிருந்தார்...

``தண்ணியைத் திறக்காம போக மாட்டேன்!’’
அடம்பிடித்த திருவள்ளூர் தி.மு.க எம்.எல்.ஏ

நிவர் புயலால் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பூண்டி நீர்தேக்கத்திலிருந்து நவம்பர் 27-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக இருந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனைவரும் இவர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். முதல் ஆளாக வந்து சேர்ந்தார் திருவள்ளூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான வி.ஜி.ராஜேந்திரன்.

அமைச்சர் பெஞ்சமின்
அமைச்சர் பெஞ்சமின்

அனைவரும், அமைச்சரும் ஆட்சியரும் வரட்டும் என்று காத்திருந்தனர். ஆனால், தி.மு.க எம்.எல்.ஏ வந்த தகவலைக் கேள்விப்பட்ட அமைச்சரும் ஆட்சியரும் கடைசிவரை வரவேயில்லை. ``அவங்க வரலைன்னா எனக்கு என்னாய்யா... தண்ணியைத் திறக்காம போக மாட்டேன்’’ என்று அடம்பிடித்து ராஜேந்திரன் அங்கேயே அமர்ந்துவிட, வேறு வழியில்லாமல் பொதுப்பணித்துறையினரே தண்ணீரைத் திறந்துவிட்டிருக்கின்றனர்.

ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு... பார்க்குறவன் கண்ணுலதான் மண்ணு!

எழுவர் விடுதலை விவகாரம்...
மோடியுடன் போட்டி போடுவாரா எடப்பாடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரின் விடுதலை குறித்து சமீபத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆளுநரைச் சந்தித்து மனு அளித்திருந்தார். இது குறித்து மத்திய அரசின் கருத்தை மீண்டும் கேட்டிருக்கிறாராம் ஆளுநர். மத்திய அரசு தரப்பில், `ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதில் சட்டச்சிக்கல் ஏதும் வருமா?’ என்று சட்டத்துறையிடம் ஆலோசனை கேட்டிருக்கிறது என்கிறார்கள். சட்டத்துறையிடமிருந்து ரெட் சிக்னல் வராதபட்சத்தில், விடுதலையை அறிவிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக டெல்லியிலிருந்து தகவல் கசிந்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி
எடப்பாடி பழனிசாமி - நரேந்திர மோடி

இதன் மூலம் தேர்தல் நெருக்கத்தில், எழுவர் விடுதலையை அறிவித்து ஸ்கோர் செய்துகொள்ள பா.ஜ.க திட்டமிடுகிறதாம். இன்னொரு பக்கம், `மாநில அரசே முடிவெடுக்கலாம்’ என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறியிருப்பதால், இந்த விவகாரத்தில் மோடியை ஸ்கோர் செய்யவிடுவாரா அல்லது தானே தடாலடியாக முடிவெடுத்து ஸ்கோர் செய்வாரா எடப்பாடி... என்றெல்லாம் அரசியல் களத்தில் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

உங்களுக்கு அரசியல்... அவங்களுக்கு வாழ்க்கை!

புதுக்கட்சி... தொகுதிக்கு 15 கோடி!

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமியின் தூரத்து உறவு என்று கூறிக்கொண்டு சமீபத்தில் ஏ.எஸ்.ரமேஷ் என்பவர் காரைக்காலுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். என்.ஆர்.காங்கிரஸ்போல `ஏ.எஸ்.ஆர்.காங்கிரஸ்’ என்ற புதியக் கட்சியைத் தொடங்கப்போவதாகச் சொன்னவர், காரைக்காலிலிருக்கும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 15 கோடி ரூபாய் வரை செலவு செய்வதாகவும், மாவட்டச் செயலாளர் அலுவலகம் அமைத்து அதன் செலவுகளுக்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும் அறிவித்தாராம். இதனால், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் சீட்டு கிடைக்காதவர்கள், அதிருப்தியாளர்கள் எல்லாரும் அவரை ஆவலுடன் சந்தித்தனர். நல்ல பதவியைப் பெற்றுவிடலாம் என்று சொந்தப் பணத்தில் தடபுடலாக விளம்பரங்களையும் செய்தனர். இந்தநிலையில்தான், கடந்த ஓரிரு வாரங்களாக அவரை யாருமே தொடர்புகொள்ள முடியவில்லையாம். எப்போது போன் செய்தாலும், `அண்ணன் பிசியா இருக்கிறார்... அமித் ஷாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று தட்டிக்கழிக்கிறதாம் ரமேஷ் தரப்பு. `வடை போச்சே...’ கணக்காக புலம்பிக்கொண்டிருக்கிறது பணம் செலவழித்த குரூப்.

வடை போனாலும் கடை தப்பிச்சுதேனு சந்தோஷப்பட்டுக்கோங்க...

சிவகங்கைக்கு வரும் எடப்பாடி...
காத்திருக்கும் பரிசு என்ன?

சிவகங்கை மாவட்டத்தில் 16 மாவட்ட கவுன்சிலர் பதவியில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் தலா எட்டு இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றன. இதனால், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இதற்கான தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க-வினர் தொடர்ந்து தள்ளிப்போட்டனர். இந்தநிலையில், நீதிமன்ற உத்தரவால் வரும் டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம், கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கைக்கு வருவதால், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை பிடித்துவிட அ.தி.மு.க பகீரதப் பிரயத்தனம் செய்கிறது.

அமைச்சர் ஜி.பாஸ்கரன்
அமைச்சர் ஜி.பாஸ்கரன்

கட்சி நிர்வாகிகளை அழைத்த மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனும், அமைச்சர் ஜி.பாஸ்கரனும், `முதல்வர் வருகிறார்... ஒழுங்கா எல்லாரும் ஜெயிக்கவெச்சுருங்க. இல்லைன்னா ஒருத்தரும் பதவியில இருக்க மாட்டீங்க...’ என்று மிரட்டியிருப்பதால், அரண்டுபோயிருக்கிறது ஆளுந்தரப்பு வட்டாரம். ஆனால், உள்ளாட்சித் தொடர்பான செயற்பாட்டாளர்களோ, ``ஒண்ணு, ஓட்டை மாத்திப்போட்டாதான் ஏதாவது ஒரு கட்சி ஜெயிக்க முடியும்... இல்லைன்னா குலுக்கல் முறையில்தான் மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்வு செய்யணும்” என்கிறார்கள்.

`கறுப்பாட்டு’ கறி... பிரியாணி ரெடின்னு சொல்லுங்க!

அஞ்சு ப்ளஸ் ஆறு!
இது திருப்பூர் அ.தி.மு.க ஜோரு...

திருப்பூர் இலைத் தரப்பின் கோஷ்டி அரசியலுக்கு முன்பாக, கதர்களின் கோஷ்டி அரசியலெல்லாம் எம்மாத்திரம் என்று வியக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஒரு மாவட்டத்தில் இரண்டு கோஷ்டிகள், மூன்று கோஷ்டிகளைப் பார்த்திருப்போம். ஆனால், திருப்பூர் அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பழனிச்சாமி, என்.எஸ்.நடராஜன், முன்னாள் மாவட்டச் செயலாளர் சிவசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் என்று ஐந்து கோஷ்டிகள், ஐந்து திசைகளில் முட்டி மோதுவதால் சின்னாபின்னமாகித் தவிக்கிறது கட்சி.

மோடி vs எடப்பாடி... கோஷ்டிகளால் திணறும் திருப்பூர் அ.தி.மு.க! - கழுகார் அப்டேட்ஸ்

இப்போதிருக்கும் கோஷ்டிகளெல்லாம் போதாது என்று திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் புதிதாக கோஷ்டி ஃபார்ம் ஆகியிருக்கிறது. தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு இவர்களுக்குள் நடக்கும் உள்ளடி வேலைகளைப் பார்த்து, இப்போதே கதிகலங்கிப்போயிருக்கிறது கட்சித் தலைமை.

ஒரு சாமி... ரெண்டு சாமி... மூணு சாமி... இப்போ ஆறு சாமி! சமாளிப்பாரா மிஸ்டர் பழனிசாமி?

வினாத்தாள் லீக் அவுட்!
விவகாரமாகும் தேர்வு

நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக இருக்கும் 30 உதவியாளர்கள், எழுத்தர்கள் பணியிடங்களை நிரப்ப, நவம்பர் 21, 22-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், குறிப்பிட்ட சிலருக்கு முதல் நாளே வினாத்தாள்களை கொடுத்துவிட்டதாகச் சர்ச்சை வெடித்திருக்கிறது.

எம்.எல்.ஏ கணேஷ்
எம்.எல்.ஏ கணேஷ்
அருண்

ஆளுங்கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரின் ஏற்பாட்டில், ஒரு வினாத்தாளுக்கு ஐந்து முதல் ஏழு லட்சம் வரை வாங்கிக்கொண்டு அதிகாரிகள் சிலரே வினாத்தாள்களை லீக் அவுட் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை மோப்பம் பிடித்த ஊட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ கணேஷ், விரைவில் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறாராம்.

கதருக்கு இருக்குற கடமையுணர்ச்சி... கூடவே சுத்துற உடன்பிறப்புகளுக்கு இல்லாம போச்சே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆலங்குளத்தில் சரத்குமார்!

சமீபத்தில் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து, ஜிம் பாடியை ஏற்றிக்காட்டி போஸ் கொடுத்த சரத்குமாரின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இப்போது சரத்குமாரைப் பற்றிக் கூடுதலாக ஒரு தகவல்... தீவிர அரசியலிலிருந்து ஓரளவு விலகியிருந்த சரத், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தன் மனைவி ராதிகா உள்ளிட்ட தனது நலம்விரும்பிகளிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாராம்.

சரத்குமார்
சரத்குமார்

விரைவில், தொகுதிக்குள் விசிட் அடித்து கள நிலவரத்தை நேரடியாக ஆய்வு செய்யவும் முடிவெடுத்திருக்கிறார். தற்போது அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க-வின் பூங்கோதை ஆலடி அருணா இருக்கிறார். ஏற்கெனவே, அவர் கட்சி கோஷ்டிப் பூசல் தொடர்பான அதிருப்தியால் தற்கொலைக்கு முயன்றநிலையில், சரத் அங்கு போட்டியிட்டால், அது தி.மு.க முகாமைக் கலகலக்கச் செய்துவிடுமே என்று அஞ்சுகிறதாம் ஸ்டாலின் தரப்பு.

முறுக்கு கம்பியா முறுக்கிட்டு நிப்பாரோ சரத்!

ரணகளமாகும் மதுரை தி.மு.க!

மதுரை மாநகர் மாவட்டத்தை அமைப்புரீதியாக இரண்டாகப் பிரித்து, மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்துக்கு பொன்.முத்துராமலிங்கத்தை பொறுப்பாளராக நியமித்தது தி.மு.க. இப்போது, 11 பேர் கொண்ட பொறுப்புக்குழுவை பொன்.முத்துராமலிங்கம் நியமித்திருக்கிறார். இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் மூன்று பேர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களாம். இதை முன்வைத்து, ``ரெளடிப் பசங்களைவெச்சுக்கிட்டு ஓட்டுக் கேட்டுப் போனா மக்கள் மதிப்பாங்களா?” என்று குமுறுகிறது மதுரை தி.மு.க வட்டாரம். பொறுப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கும் பொன்.முத்துராமலிங்கத்தின் மகன் சேதுராமலிங்கம்தான் மறைமுக மாவட்டச் செயலாளராக வலம்வருகிறாராம். இருக்கும் கோஷ்டிகள் போதாதென்று, புதிது புதிதாக கோஷ்டிகள் உதயமாவதால், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் ரணகளமாகிறது.

அட்டாக் பாண்டியில ஆரம்பிச்சு... எஸ்ஸார் வரைக்கும் மதுரை தி.மு.க வரலாறுல இதெல்லாம் ஒண்ணும் புதுசு இல்லையே!

கடை வாடகை போச்சே!
புலம்பும் ரஜினி மன்ற நிர்வாகி...

டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர், தன்னுடைய நிலத்தை டாஸ்மாக் பார்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இதன் மூலமாக மாதம்தோறும் கணிசமான தொகை வாடகையாகக் கிடைத்திருக்கிறது. அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி அறிவித்தவுடன், `இனி நாமதான் எல்லாம்...’ என்கிற மிதப்பில், லோக்கல் அ.தி.மு.க புள்ளிகளிடம் பகையை வளர்த்துக்கொண்டாராம்.

`காங்கிரஸூக்கு ஐ-பேக்கின் செக்... தென்னந்தோப்பில் அமைச்சரின் மூட்டை!'- கழுகார் அப்டேட்ஸ்

கடுப்பான ஆளுங்கட்சிப் புள்ளிகள், மன்ற நிர்வாகியின் நிலத்திலிருந்த டாஸ்மாக் பார்களை வேறோர் இடத்துக்கு மாற்றிவிட்டார்கள். வருமானம் பறிபோன பதைபதைப்பில் இருந்தாலும், `ரஜினி ஆட்சிக்கு வந்தா விட்டதைப் பிடிச்சுடலாம்’ என்கிற நம்பிக்கையில் அந்த நிர்வாகி இருந்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், அரசியலுக்கு முழுக்குப் போடுவதைப்போல ரஜினி பேசியதும், அந்த நிர்வாகிக்கு புஸ்ஸென ஆகிவிட்டதாம். `உள்ளதும் போச்சுடா...’ என்று புலம்பித் தீர்க்கிறார் அவர்.

கடை வாடகையோட போச்சேன்னு சந்தோஷப்படுங்க... அவர் வந்திருந்தா ஹெலிகாப்டர் வாடகையையெல்லாம் இழுத்துவிட்டிருப்பாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு