Published:Updated:

`பிரதமர் மோடி மேசையைத் தட்டி வரவேற்றது நெகிழ்ச்சியைத் தந்தது!' - வைகோ

வைகோ
வைகோ

மாநிலங்களவையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தான் பேசியபோது, பிரதமர் மோடி மேசையைத் தட்டி வரவேற்றது நெகிழ்ச்சியைத் தந்ததாக ம.தி.மு.க பொதுச்செயலாளரும் எம்.பியுமான வைகோ கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் இருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர், கடந்த 25ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். தி.மு.க கூட்டணியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற வைகோவும் அன்று பதவியேற்றார். 23 ஆண்டுகளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்த வைகோ, அந்த வளாகத்தில் இருந்த தமிழகத் தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பதவியேற்றுக்கொண்ட பின்னர், ஜவுளித்துறை தொடர்பாக அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

வைகோ பதவியேற்பு
வைகோ பதவியேற்பு
Rajya Sabha TV

வைகோ பேசத்தொடங்கும்போது, 23 ஆண்டுகளுக்குப் பின்னர் எம்.பியாகியுள்ள தனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி என சபாநாயகருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அப்போது, அவையில் இருந்த பிரதமர் மோடி மேசையைத் தட்டி வரவேற்றார். மாநிலங்களவையில் பதவியேற்ற முதல்நாளில் தமிழக நூற்பாலைகள் குறித்து பேசிய வைகோ, இரண்டாவது நாளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது மத்திய அரசை எச்சரிப்பதாகப் பேசிய வைகோவுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய நாயுடு, எச்சரிக்கை விடுக்கிறேன் என்று பேசவேண்டாம் என அறிவுறுத்தினார்.

இந்தநிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் வைகோ இன்று சென்னை வந்தார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நாடாளுமன்றத்தில் நடந்தவைகள் குறித்து பேசினார். அவர் கூறுகையில், ``நான் எம்.பியாகப் பதவிப்பிரமாணம் எடுத்தபிறகு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், பா.ஜ.கவில் இருக்கக் கூடிய சுரேஷ் பிரபு போன்ற என்னுடைய நண்பர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள், தெலுங்குதேசம், பிஜூஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் என எல்லோரும் வந்து வாழ்த்தினார்கள். கேரள எம்.பிக்கள் மிகுந்த பாசத்தோடு என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். அதேபோல், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள், குறிப்பாக ஆம் ஆத்மி எம்.பிக்கள், என்னை வரவேற்றனர். அதேபோல், தி.மு.க எம்.பிக்களும் ஏன் அ.தி.மு.க எம்.பிக்களும் கூட என்னை அன்புடன் வரவேற்றார்கள்.

மாநிலங்களவையில் வைகோ
மாநிலங்களவையில் வைகோ
Rajya Sabha TV

முதல்நாள் கேள்விநேரத்தின்போது நான் துணைக்கேள்வி எழுப்பபோகிற சமயத்தில், பிரதமர் மோடி, அவைக்குள் நுழைந்தார். நூற்பாலைகள் மூடப்படுவதும் அதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்விழப்பது குறித்தும் பேசினேன். தேசிய அளவில் 40 சதவிகித நூற்பாலைகள் தமிழகத்தில்தான் இருக்கின்றன. சீனாவை சேர்ந்த ஆயத்த ஆடைகள் வங்கதேச முத்திரையுடன் நமது நாட்டுக்குள் வருவதுபற்றி நான் கேள்விஎழுப்பியதும் அதற்கு அமைச்சரால் பதிலளிக்க முடியவில்லை.

ஆனால், என் கேள்வியைத் தொடங்குகிறபோது,`23 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய முதல் கன்னி துணைக் கேள்வியைக் கேட்பதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி' என்றவுடன் பிரதமர் மோடி மேசையைத் தட்டி வரவேற்றார். அது எனக்கு மனதிலே ஒரு நெகிழ்ச்சியைத் தந்தது. நான் மோடியைக் கடுமையாக விமர்சிப்பவன். ஆனால், அவர் மேசையைத்தட்டி வரவேற்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கேள்வி முடிந்து சிறிதுநேரத்திலேயே அவர் எழுந்து சென்றுவிட்டார். ஒருவேளை நான் பதவிப்பிரமாணம் எடுக்கும் நாளில் அவைக்கு வரவேண்டும் என்று நினைத்து வந்தாரா என எனக்குத் தெரியாது.

வைகோ
வைகோ

அதன்பிறகு நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதில், தேர்வுக்குழுவுக்குத்தான் மசோதாவை அனுப்ப வேண்டும், `We want select committe' என்று முதன்முதலில் நான்தான் குரல் கொடுத்தேன். அதன்பின்னர் காங்கிரஸ் எம்.பிக்களும் சேர்ந்து முழக்கம் எழுப்பி, நாங்கள் ஒருமணி நேரம் அவையை நடத்தவிடவில்லை. அப்போது, `நீங்கள் இப்படித்தான் ஒருகாலத்தில் போராடுவீர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், இன்றுதான் நேரடியாகப் பார்க்கிறோம்' என்று கூறி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்.பி கட்டித் தழுவிக் கொண்டார். அகமது படேல், குலாம் நபி ஆசாத், மோதிலால் வோரா, திக்விஜய் சிங், நண்பர் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் என எல்லோருமே வந்து வாழ்த்தி மகிழ்ச்சியைத் தந்தார்கள்.

நான் நேற்று ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பேசினேன். 2.30 நிமிடத்தில் முடிக்க வேண்டும் என்பதால், விரைவாகப் பேசினேன். மின்னல் வேகத்தில் பேசுகிறீர்கள் என்றுகூட சொன்னார்கள். நான் பேசும்போது `I warn you' என்று பேசினேன். அப்போது, `எச்சரிக்கை செய்ய வேண்டாம்' என்று அவைத்தலைவர் வெங்கய நாயுடு சொன்னார். இரண்டு நாள்களிலும் நேரமில்லா நேரத்தின்போதும் கேள்வி நேரத்தின்போது துணைக்கேள்வி எழுப்பும் வாய்ப்பு கிடைத்தது; பயன்படுத்திக் கொண்டேன். மீண்டும் நாளை மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறேன்.

என் கேள்வியைத் தொடங்குகிறபோது, `23 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய முதல் கன்னி துணைக் கேள்வியைக் கேட்பதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி' என்றவுடன் பிரதமர் மோடி மேசையைத் தட்டி வரவேற்றார். அது எனக்கு மனதிலே ஒரு நெகிழ்ச்சியைத் தந்தது.
வைகோ

அவையை 3 நாள்கள் நீட்டித்திருக்கிறார்கள். ஆனால், கேள்வி நேரம் இருக்காது. மூன்று நாள்களிலும் மிகமுக்கிய மசோதாக்களை நிறைவேற்ற இருக்கிறார்கள். முத்தலாக் மசோதா, அணைபாதுகாப்பு மசோதா, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் திருத்த மசோதா உள்ளிட்டவைகளைக் கொண்டுவர இருக்கிறார்கள். எவ்வளவு நேரம் பேச வாய்ப்புக் கிடைக்கும் என்று தெரியவில்லை. அதேபோல், நான் நூலகத்துக்குச் சென்றேன். எல்லாவற்றையும் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் குறிப்புகளைக் கேட்டிருக்கிறேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் சென்றாலும் ஒரு கவலையோடுதான் சென்றேன். நமக்குக் குறைந்த நேரம்தானே கிடைக்கும் என்று எண்ணி சென்றேன். ஆனால், அத்துணை எம்.பிக்களும் எனக்கு ஊக்கமளித்தார்கள்'' என்று மகிழ்ச்சியோடு பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு