Published:Updated:

`யோகிக்கு செக் வைக்கும் மோடி' - உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் மோடியின் தளபதி!

மோடி
மோடி

`தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் நிலையே வரும் தேர்தலில் பாஜக-வுக்கு வந்தாலும், யோகி முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதில் பல சிக்கல்கள் எழும்’ என்கிறார்கள் டெல்லி தலைமையின் மனநிலையை அறிந்தவர்கள். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“மோடியின் பார்வை இப்போது உத்தரப்பிரதேசம் பக்கம் திரும்பியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போதே தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் மோடி” என்கிறார்கள் பா.ஜ.க- வின் தேசிய அரசியலை நன்கு அறிந்தவர்கள்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று பா.ஜ.க-வினர் பெரிதும் நம்பியிருந்த நிலையில், இரட்டை இலக்கத்திலான தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைச் சந்தித்தது பா.ஜ.க. இந்தநிலையில், தற்போது பா.ஜ.க டெல்லி மேலிடத்தின் பார்வை உத்தரப்பிரதேசத்தை நோக்கித் திரும்பியுள்ளது.

2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அந்தத் தேர்தல் வெற்றியைவைத்தே பா.ஜ.க-வின் அகில இந்திய செல்வாக்கும் மதிப்பிடப்படும் என்பதை பா.ஜ.க உணர்ந்துள்ளது. இதனால், உ.பி தேர்தலுக்கு அடுத்த மாதம் முதலே பா.ஜ.க பணிகளைத் தொடங்கவிருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்ற உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரைச் சந்தித்தார். அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றியும், பா.ஜ.க-வின் தேர்தல் வியூகங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அமித் ஷா- யோகி - மோடி
அமித் ஷா- யோகி - மோடி

இந்தநிலையில், உத்தரப்பிரதேசத் தேர்தலை வைத்து பா.ஜ.க-வுக்குள்ளும் அதிகாரப் போட்டி அதிகமாகிவிட்டது என்கிற புதுத் தகவலும் டெல்லி பா.ஜ.க-வுக்குள் பலமாக ஒலிக்கிறது. இது குறித்து டெல்லி பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசியபோது, சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள். “சமீபத்தில் பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏ.கே.சர்மா என்பவர், ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உத்தரப்பிரதேச பா.ஜ.க-வுக்குள் கால் பதித்துள்ளார். இவரின் வருகையே இப்போது யோகிக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்மாவின் சொந்த மாநிலம் உத்தரப்பிரதேசமாக இருந்தாலும், அவர் குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது, மோடிக்கு நம்பிக்கைக்குரியவராக சர்மா இருந்துள்ளார். இதனால் பிரதமராக மோடி பதவியேற்றதும், பிரதமர் அலுவலகத்திலும் முக்கியப் பொறுப்பில் சர்மாவை அமரவைத்தார். இப்போது அதே சர்மாவை தனது தளபதியாக உத்தரப்பிரதேச பா.ஜ.க-வுக்குள் நுழைத்திருக்கிறார் மோடி. இது தனக்கு செக் வைக்கும் அரசியல் என்பதை யோகியும் புரிந்துவைத்திருக்கிறார். சர்மா சமீபத்தில் பா.ஜ.க-வின் எம்.எல்.சி-யாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஏ.கே.சர்மா
ஏ.கே.சர்மா

பா.ஜ.க-வில் மோடிக்கு அடுத்த பிரதமர் ரேஸில் இப்போது இருப்பவர் யோகிதான். ஆனால், மோடி தனக்குப் பிறகு அமித் ஷாவை முன்மொழியும் நிலையில் இருக்கிறார். வரும் உத்தரப்பிரதேசத் தேர்தலில் மீண்டும் யோகி வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றால், அகில இந்திய அளவில் யோகி முக்கியத் தலைவராக மாறிவிடுவார் என்கிற அச்சம் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு உள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்தியக் கூட்டத்திலும் இந்துத்துவா அஜெண்டாக்களைத் தொடர்ந்து அமல்படுத்த மோடிக்கு அடுத்த சாய்ஸாக யோகியைப் பார்ப்பதாக அந்த அமைப்பு புகழ்பாடியுள்ளது.

இந்தநிலையில்தான் உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க-வுக்கு சமீபத்தில் ஓர் உத்தரவு சென்றுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மோடியை முன்னிறுத்தியே பா.ஜ.க-வின் பிரசார வியூகம் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது யோகியை அதிர்சியடையச் செய்துள்ளது. ’தனது மாநிலத்தில் தன்னைத் தவிர வேறு யாரும் முன்னிலையில் இருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் முதல்வர் வேட்பாளரைவைத்தே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அதை எதற்காகத் தலைமை மாற்றுகிறது?’ என்கிற கடுப்பில் இருந்தார். அதைத் தொடர்ந்து யோகிக்கு அடுத்த அதிர்சியைக் கொடுத்தது டெல்லி தலைமை. அதாவது, மோடியின் நம்பிக்கைக்குரிய நபரான சர்மாவுக்கு துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைதான் அது.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

இதனால், எதிர்காலத்தில் தனது அரசியல் வளர்ச்சிக்கு சர்மா மூலம் மோடி தரப்பு செக் வைக்கப் பார்க்கிறது என்கிற அச்சம் யோகிக்கு உருவானது. இதனால் “எனது மாநிலத்தில் நடக்கும் அரசியல் முடிவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று தடாலடியாக தலைமைக்கு பதில் அளித்திருக்கிறார் யோகி. அதன் பிறகு டெல்லி தலைமையும் அடுத்தடுத்த காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

தொடர்ந்து டெல்லி தலைமை, உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொடர் ஆலோசனையில் இறங்கியது. மற்றொருபுறம், யோகியைப் பணியவைக்கும் வேலையிலும் இறங்கினார்கள். இதன் தொடர்ச்சியாகவே டெல்லிக்கு வந்த யோகி, உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு யோகியின் சீற்றம் குறைந்துள்ளது என்கிறார்கள். அதேபோல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் யோகியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதாக அறிவித்தது. இதனால் யோகி சமாதானம் அடைந்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இந்தநிலையில், உ.பி-யில் பா.ஜ.க-வுக்கு அச்சுறுத்தலாக சமாஜ்வாடி கட்சி இருக்கும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, இந்தமுறை எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற உறுதியிலுள்ள அகிலேஷ் யாதவ், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உதவியை நாடியிருக்கிறார். நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு பணியாற்றப்போவதில்லை என கிஷோர் சொல்லியிருந்தாலும், அகிலேஷ் யாதவுக்கு மறைமுகமாகக்கூட கிஷோர் உதவினால் அது தங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க தலைமையும் அஞ்சுகிறது. இதனால் முன்கூட்டியே தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க அந்த மாநில பா.ஜ.க-வுக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. `தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் நிலையே வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வந்தாலும், யோகி முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதில் பல சிக்கல்கள் எழும்’ என்கிறார்கள் டெல்லி தலைமையின் மனநிலையை அறிந்தவர்கள். குறிப்பாக, யோகிமீது கடந்த காலத்தில் எழுந்த புகார்களைவைத்தே அவருக்கு நெருக்கடி கொடுக்க மோடி தரப்பு மும்முரமாக இருக்கிறது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு