அரசியல்
அலசல்
Published:Updated:

துப்பாக்கிமுனையில் அமைதி நிறுவப்பட்டிருக்கிறது! - முகமது யூசுப் தாரிகாமி நேர்காணல்

முகமது யூசுப் தாரிகாமி
பிரீமியம் ஸ்டோரி
News
முகமது யூசுப் தாரிகாமி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பலர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை முதன் முறையாக மத்திய அரசு பேச அழைத்திருக்கிறது. ஜூன் 24-ம் தேதி மதியம் 3 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள ஸ்ரீநகரிலிருந்து, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தலைமையிலான குப்கார் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் டெல்லிக்கு வந்திருந்தனர். சந்திப்புக்கு சில மணிநேரங்கள் முன்பு, குப்கார் கூட்டணியின் தலைமை செய்தித்தொடர்பாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநிலச் செயலாளருமான முகமது யூசுப் தாரிகாமியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் வலியுறுத்தவிருக்கும் முக்கியக் கோரிக்கைகள் என்ன?”

“ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தும் மீண்டும் வழங்கப்பட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பலர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய கொரோனா சூழலில் உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவிருக்கிறோம்.”

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டபோது, ‘நாங்கள் மெதுவாக மரணித்துக்கொண்டிருக்கிறோம்; எங்கள் மூச்சு அடக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டீர்கள். தற்போது காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டதா?”

“இல்லவே இல்லை... ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்படாத அவசரநிலை நீடித்துவருகிறது. பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அமைதி என்பது துப்பாக்கிமுனையில் மட்டுமே நிறுவப்பட்டிருக்கிறது. இதை இயல்புநிலை என்று எப்படிச் சொல்ல முடியும்? மக்களிடமிருந்து கருத்துரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்களின் கருத்துரிமையை நசுக்கும் முயற்சிகள் தீவிரமாகியிருக்கின்றன. ‘ஜம்மு காஷ்மீர் மீடியா பாலிசி 2020’ என்பதை உருவாக்கி, இப்படித்தான் செய்திகளை வெளியிட வேண்டும் என்று ஊடகங்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது.”

துப்பாக்கிமுனையில் அமைதி நிறுவப்பட்டிருக்கிறது! - முகமது யூசுப் தாரிகாமி நேர்காணல்

“ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு, பிரிவு 370 இடையூறாக இருப்பதாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க கூறிவந்தன. 370-ஐ நீக்கிய பிறகு, காஷ்மீரில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா?”

“வளர்ச்சியா? பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ‘காஷ்மீர் தொழில் மற்றும் வர்த்தக சபை’யின் கடந்த ஆண்டு மதிப்பீட்டின்படி, 2019 ஆகஸ்ட் முதல் 2020 வரை ஜம்மு காஷ்மீரில் 40,000 கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தனியார்துறையில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 2020 ஜூலை புள்ளிவிவரப்படி, தேசிய வேலையின்மை 9.5 சதவிகிதத்தைக் காட்டிலும் ஜம்மு காஷ்மீரின் வேலையின்மை விகிதம் 17.9 சதவிகிதமாக, இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. சுற்றுலா, போக்குவரத்து, கைவினைத் தொழில்கள், விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட துறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். ஆனால், இவை பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்து ராஷ்டிரத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற முயற்சிகளில் முனைப்புடன் இருக்கிறது பா.ஜ.க அரசு.”

“அதேசமயம், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பிரிவு 370 நீக்க நடவடிக்கை உதவியிருப்பதாக பா.ஜ.க தரப்பில் கூறுகிறார்களே..?”

“இல்லை. காஷ்மீரில் வன்முறைகள் தொடர்கின்றன. பயங்கரவாதிகள், பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் என நூற்றுக்கணக்கானோர் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 2019 ஆகஸ்ட்டுக்குப் பிறகு, 10-க்கும் மேற்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைவதாகச் செய்திகள் வருகின்றன. கிட்டத்தட்ட இதேநிலைதான், சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பாகவும் இருந்தது.”

“ `மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிரிவு 370 நீக்கப்பட்ட முடிவு மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் சமீபத்தில் கூறியது சர்ச்சையானது. இதில் உங்கள் கருத்து என்ன?”

‘‘அப்படிச் செய்தால் நல்லது, வரவேற்கிறோம். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதும், ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதும் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை; யதேச்சதிகாரம்கொண்டவை. இதுவே என் கருத்து மற்றும் சி.பி.எம் நிலைப்பாடும்கூட.”

“காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏழு கட்சிகள் அடங்கிய குப்கார் கூட்டணியை உருவாக்கினீர்கள். ஆனால், இதிலிருந்து இரண்டு கட்சிகள் வெளியேறிவிட்டன. இது உங்கள் முயற்சிக்குப் பின்னடைவு இல்லையா?”

“கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம்தான் குப்கார் கூட்டணி உருவாக்கப்பட்டது. அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு, மாவட்ட வளர்ச்சி கவுன்சில்களுக்கான தேர்தல் நவம்பரில் அறிவிக்கப்பட்டது. கடுமையான சூழல் என்றபோதிலும், அந்தத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதென்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால், எங்கள் கூட்டணிக்கு எதிராக அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டார்கள். லஞ்ச ஒழிப்புப் பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவு மூலமாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால், அதையும் தாண்டி மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் கணிசமான இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றது. கூட்டணியிலிருந்து சில தலைவர்கள் சொந்த முடிவின் அடிப்படையில் வெளியே சென்றுவிட்டார்கள். அவ்வளவுதான். இதனால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.”