Published:Updated:

அனல் பறக்கும் நாடாளுமன்றம்... அமளி துமளிக்கு யார் காரணம்?

நாடாளுமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
நாடாளுமன்றம்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்புவதை மிகப் பெரிய குற்றமாக ஆளும் தரப்பு பார்க்கிறது

அனல் பறக்கும் நாடாளுமன்றம்... அமளி துமளிக்கு யார் காரணம்?

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்புவதை மிகப் பெரிய குற்றமாக ஆளும் தரப்பு பார்க்கிறது

Published:Updated:
நாடாளுமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து டெல்லி அரசியலில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாள்தோறும் இடைநீக்கம், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இடையே கடும் வாக்குவாதம் என நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் அனல் பறக்கிறது.

எம்.பி-க்கள் இடைநீக்கம்

குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல், சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை, காங்கிரஸார் போராட்டம் என டெல்லி அரசியல் பரபரத்த சூழலில்தான், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீது ஜி.எஸ்.டி வரி விதிப்பு, அக்னிபத் திட்டம் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கோரிக்கையை ஆளும் தரப்பு ஏற்கவில்லை.

அனல் பறக்கும் நாடாளுமன்றம்... அமளி துமளிக்கு யார் காரணம்?

விலைவாசி உயர்வு பற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் வந்த பிறகு விவாதம் நடத்தலாம் என்பது ஆளும் தரப்பின் நிலைப்பாடு. அது எதிர்க்கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. விவாதம் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய தால், எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். முதலில் காங்கிரஸ், பிறகு தி.மு.க., அதன் பின்னர், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என்று அடுத்தடுத்த நாள்களில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வரிசையாக இடைநீக்க நடவடிக் கைக்கு ஆளானார்கள். அந்த எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்திசிலை முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

இத்தகைய பிரச்னைகள் எழுவதற்கான சில காரணங் களை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அவை நிகழ்ச்சி நிரலை ஆளும் தரப்பும், எதிர்த் தரப்பும் கலந்தாலோ சித்து முடிவுசெய்தால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் காக்கப்படும். ஆனால், இரு தரப்பும் கலந்து பேசி நிகழ்ச்சி நிரலை முடிவுசெய்யும் நடைமுறை நீண்டகாலமாக இருந்துவந்த நிலையில், அதை பா.ஜ.க அரசு தன்னிச்சையாக முடிவுசெய்கிறது என்பது ஒரு காரணம்.

பா.ஜ.க எம்.பி-க்கள் போராடியதில்லையா?

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்புவதை மிகப் பெரிய குற்றமாக ஆளும் தரப்பு பார்க்கிறது. எனவே அவையின் மையப் பகுதிக்குச் சென்று பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

“அவையின் மையப்பகுதிக்குச் சென்று எதிர்க்கட்சியினர் முழக்கமிடுவது ஒன்றும் புதிது கிடையாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பா.ஜ.க உள்ளிட்ட அப்போதைய எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று எத்தனையோ முறை போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். 2ஜி விவகாரத்தில் அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா விலக வேண்டும், நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பல நாள்கள் பா.ஜ.க எம்.பி-க்கள் அமளி துமளியில் ஈடுபட்டனர். அதன் காரணமாக, எத்தனையோ நாள்கள் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டனவே’’ என்று எதிர்க்கட்சியினர் இப்போது திருப்பிக் கேட்கிறார்கள்.

ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள், எதிர்க்கட்சியினரின் கேள்விகளை எதிர்கொள்வதற்கு என்ன தயக்கம்... நிதியமைச்சர் இல்லாவிட்டால், மற்ற அமைச்சர்கள் பதில் சொல்லலாமே... பிரதமரே பதில் சொன்னால், இன்னும் சிறப்பு. 2014-ம் ஆண்டு மிகப்பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்த பிறகு, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய முதல் உரையில், “தேசத்தின் நலன் கருதி எதிர்க்கட்சி உட்பட அனைவருடனும் இணைந்து பணி யாற்றுவோம்…” என்று கூறினார். அதற்கு மாறாக, விலைவாசி உயர்வு பற்றிக்கூட விவாதம் செய்ய அரசு முன்வராதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

அனல் பறக்கும் நாடாளுமன்றம்... அமளி துமளிக்கு யார் காரணம்?

விசாரணைக்கு எதிரான போராட்டம்...

ஒரு பக்கம் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் போராடுகின்றன என்றால், இன்னொரு பக்கம் விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டித்தும் போராட்டங்கள் நடக்கின்றன. இந்தப் போராட்டத்தின்போது ஜோதிமணி எம்.பி-ஐ கைதுசெய்த போலீஸார் அவரது ஆடையைக் கிழித்துவிட்டதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.

அதேபோல, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அவமதிக்கும் வகையில் காங்கிரஸின் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர்ரஞ்சன் செளத்ரி பேசியதாகவும் சர்ச்சை ஏற்பட்டது; இந்தச் சர்ச்சை நாடாளுமன்றத்திலும் எதிரொலித் தது. ஆதிர்ரஞ்சன் செளத்ரியின் அந்தக் கருத்துக்காக சோனியா காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று பா.ஜ.க -வினர் கொந்தளித்தார்கள். இதில், அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் சோனியா காந்திக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மழைக்காலக் கூட்டத்தொடரில் 24 மசோதாக்கள் கொண்டுவரப்போவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் நடக்கும் களேபரங்களால், அந்த மசோதாக்களின் கதி என்ன என்பதே தெரியவில்லை.

“சட்ட மசோதா பற்றிய புரிதலை ஏற்படுத்தாமல், நிறைவேற்றுவது சரியல்ல. சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்களைப் போன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அவற்றுக்கு எதிராக மக்கள் போராடக் கிளம்பினால், அதற்கு யார் பொறுப்பு?” என்று கேட்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!