Published:Updated:

மோட்டார் பந்தயம்; சமூக ஆர்வலர்; விவசாயி!- மநீம மகளிர் மற்றும் குழந்தைகள் அணி செயலாளரானார் மூகாம்பிகா

மூகாம்பிகா
மூகாம்பிகா

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் அணியின் செயலாளராக மூகாம்பிகா ரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் மற்றும் நீதி என் கொள்கையை மையமாக வைத்து நடிகர் கமல்ஹாசனால் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம். கட்சி தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் சட்டப்பேரவை பணிகளுக்காக விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறார்கள். இதற்காகக் கட்சியில் உள்ள பொறுப்புகளை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் செயலாளராகப் பொள்ளாச்சியைச் சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூகாம்பிகா
மூகாம்பிகா

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகத்தை மேம்படுத்த பல்வேறு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அதற்கான நியமனங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மகளிருக்கான பொறுப்புகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. அதன் தொடக்கமாக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநிலச் செயலாளராக மூகாம்பிகா ரத்தினத்தை நியமிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் மூகாம்பிகா ரத்தினம், பொறியியல் முடித்துள்ள இவர் தன் `ரத்தினம் ஞாபகார்த்தா’ என்ற அறக்கட்டளை மூலம் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி, திறன் மேம்பாடு போன்ற பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் சமூக சேவகராகவும் விவசாயியாகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டுள்ளார். இருசக்கர வாகனம், கார் போன்றவற்றில் பல கிலோமீட்டர்கள் பயணிக்கும் திறமை பெற்றவர். மோட்டார் பந்தய வீரரான இவர் காரில் இந்தியா முழுவதையும் சுற்றிவந்து சாதனை படைத்துள்ளார். காடுகள் வளர்ப்பு, புற்றுநோயாளிகளின் நலன், இடர்ப்பாடு மீட்பு போன்ற பல பணிகளைச் செய்து வரும் இவர் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் நீதி மய்யத்திலிருந்து மக்களுக்கான அரசியல் பணிகளையும் செய்து வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் பொள்ளாட்சி தொகுதியில் போட்டியிட்டார்.

மூகாம்பிகா
மூகாம்பிகா

அவரைத் தொடர்புகொண்டு பேசினோம், ``நானும் எல்லா மனிதர்களைப் போலவும் சமூகத்துக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கான வாய்ப்பு என் கை தேடி வந்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். அப்படிதான் அரசியலில் கால் வைத்தேன். தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகள் மீதும் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால் அவர்களை எதிர்த்து நடுநிலையாக உள்ள மக்கள் நீதி மய்யத்தை நான் தேர்ந்தெடுத்தேன்.

`பேப்பர் கட்டிங் சொல்லும் செய்தி; ப்ரைம் டார்கெட் யார்?!'- மநீம அலுவலகத்தில் ஒரு `ஸ்பாட் விசிட்'

மற்ற அனைத்துக் கட்சிகளிலும் மகளிர் அணி மட்டும் இருக்கும் ஆனால், மக்கள் நீதி மய்யத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் அணி எனக் கொண்டுவந்துள்ளோம். அரசியலையும் தாண்டி குழந்தைகள் நலன், மேம்பாடு, அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் ஆகியவற்றை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். பெண்களைவிடக் குழந்தைகளுக்கு ஆதரவாக வேறு யாராலும் குரல் கொடுக்க முடியாது அதனால்தான் இதைக் கொண்டுவந்துள்ளோம். இதில் உள்ள குழந்தைகளும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மூகாம்பிகா
மூகாம்பிகா

எங்கள் கட்சி தற்போது தவழும் குழந்தைபோல உள்ளது. முதலில் நாங்கள் எங்கள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எனக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலில் நிறைய பெண்களை எங்கள் கட்சிக்குக் கொண்டு வர வேண்டும். அரசியலில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இருக்க வேண்டும். இவை இரண்டுமே தற்போது என்னுடைய இலக்கு. அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று நம்பிக்கையுடன் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு