Published:Updated:

`சம்ஸ்கிருத வளர்ச்சிக்குப் பல கோடிகள்; தமிழ் வளர்ச்சிக்குச் சில லட்சங்கள்?!'-கோவையில் கொதித்த ஆ.ராசா

ஆ.ராசா
ஆ.ராசா

சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு பி.ஜே.பி அரசு பல கோடிகளை ஒதுக்குகிறது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்குச் சில லட்சங்களை மட்டுமே ஒதுக்கி வஞ்சகம் செய்கின்றனர்.

தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகள், வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காந்திபுரம், ராம்நகரில் நடைபெற்றது. இதில், தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும் நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா கலந்துகொண்டார்.

ஆ.ராசா
ஆ.ராசா

அப்போது அவர் பேசுகையில், ``தி.மு.க ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கநாள் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. அதேபோல, அ.தி.மு.க-வும் இந்தக் கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்தி எதிர்ப்புக்காக அ.தி.மு.க என்ன செய்தது?

1960 –ம் ஆண்டு, தி.மு.க-வில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களே இருந்தனர். அப்போதே, நாங்கள் இந்தியை எதிர்த்துப் போராடினோம். ஆனால், இந்த ஆளும் எடப்பாடி ஆட்சியில் என்ன செய்ய முடிந்தது? இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். இந்தி படித்தவர்கள் இங்கு என்ன செய்கின்றனர்? கொத்தனாராகவும் பானி பூரியும் விற்கின்றனர்.

ஆ.ராசா
ஆ.ராசா

எனக்கு இந்தி தெரியாது. நான் மத்திய அமைச்சராக இருந்துள்ளேன். நாடாளுமன்றத்தில் பதில் கூற மறுத்துள்ளேனா? அதனால்தான், நாங்கள் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்கிறோம்.

சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு பி.ஜே.பி அரசு பல கோடிகளை ஒதுக்குகிறது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்குச் சில லட்சங்களை மட்டுமே ஒதுக்கி வஞ்சகம் செய்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தி ஒழிப்புப் போராட்டம் நடத்தி சிறை சென்றார் கலைஞர்.

ஆ.ராசா
ஆ.ராசா

அப்போது அவருக்குக் கைதி உடை வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் இந்தி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற கலைஞருக்குக் கைதி உடை வழங்கப்பட்டது. அப்போது உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதி, `உடன்பிறப்பே இதை ஏற்றுக்கொள்கிறேன்' என்றார் கலைஞர்.

கப்பலோட்டிய தமிழன் சிறையில் அடைத்தபோது கூட அவருக்குப் பிடித்த உடையை அணியட்டும் என வெள்ளைக்காரன் கூறினான். வீர வணக்க நாள் கொண்டாட எம்.ஜி.ஆருக்குக் கூட அருகதையில்லை. சட்டமன்றத்தில் 234 சட்டமன்ற உறுப்பினர்களும் நீட் வேண்டாம் என கையொப்பமிட்டு கொடுத்தோம். அது எங்கே என்றால், ஜனாதிபதி மாளிகையில் உள்ளது என்று பொறுப்பில்லாமல் கூறுகிறார் எடப்பாடி.

ஆ.ராசா
ஆ.ராசா

விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வருகிறது பிஜே.பி அரசு. புயலால் பாதிக்கப்பட்டபோது தேவையான நிதியை பி.ஜே.பி-யிடம் பெற திராணியற்ற அரசாக எடப்பாடி அரசு உள்ளது.

பொருளாதாரம் கெட்டுப்போய் உள்ளது. இந்த மோடி அரசு இன்னும் ஐந்து ஆண்டுகள் நீடித்தால் பொருளாதார வீழ்ச்சி தலைவிரித்தாடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏழு மாநில முதல்வர்கள் இதை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறியுள்ளனர்.

கூட்டம்
கூட்டம்

ஆனால், மத்திய பி.ஜே.பி அரசு என்ன திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதைச் செயல்படுத்த துடிக்கிறது எடப்பாடி அரசு. இதன் மூலம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளையடிக்கும் அரசாக உள்ளது" என்றார் ஆவேசமாக.

அடுத்த கட்டுரைக்கு