Published:Updated:

கரூர்: 'பெட்ரோல், டீசல் விற்பனையில் ரூ.20 லட்சம் கோடி முறைகேடு!' பா.ஜ.க-வைச் சாடும் ஜோதிமணி எம்.பி!

 ஜோதிமணி
ஜோதிமணி

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் ரூ.20 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளது. பிரிட்டிஷ் அரசைவிட கொடுங்கோலான வரிவிதிக்கும் அரசாக பா.ஜ.க அரசு உள்ளது.

`ஒரு உயிரைக்கூட இழக்கக் கூடாது!' - கரூருக்காக இணையத்தில் நிதி திரட்டும் ஜோதிமணி எம்.பி

"கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனையில் மத்திய பா.ஜ.க அரசு ரூ.20 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளது" என்று கரூர் எம்.பி ஜோதிமணி அதிரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஜோதிமணி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

 ஜோதிமணி
ஜோதிமணி

"காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக இருந்தநிலையில், தற்போது 60 டாலராகவும், அதற்கு முன்பு 2014 முதல் 2018-ம் ஆண்டு காலகட்டத்தில் 15 டாலராகவும் இருந்தது. மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் ரூ.20 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளது. பிரிட்டிஷ் அரசைவிட கொடுங்கோலான வரிவிதிக்கும் அரசாக பா.ஜ.க அரசு உள்ளது. கடந்த, மே 21-ம் தேதி முதல் 10 நாள்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டுவருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களைப் புதைக்க மயானத்தில் இடம்கூட இல்லாத அவலம் நிலவுகிறது. இந்தநிலையில்தான், பா.ஜ.க அரசு ஈவு இரக்கமற்ற முறையில் பெட்ரோல், டீசல் நிலையை 21 முறை உயர்த்தியுள்ளது. உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வளவு வரி வசூலிக்கப்படுவதில்லை. இந்தியாவிடமிருந்து பெட்ரோல், டீசல் வாங்கி விற்கும் நேபாள அரசுகூட இவ்வளவு வரியை மக்கள் மீது சுமத்தியது இல்லை. ஆனால், பா.ஜ.க அரசு வரியைச் சுமத்தி, மக்களை வஞ்சிக்கிறது. அதனால், இந்த ஆட்சி விரைவில் துடைத்தெறியப்பட வேண்டும். மக்களுக்காக காங்கிரஸ் கட்சி என்றைக்கும் துணை நிற்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு