Published:Updated:

``குஷ்பு மாதிரியானவங்களுக்கு பா.ஜ.க ஏற்றதில்லை!" - ஜோதிமணி

ஜோதிமணி
ஜோதிமணி ( நா.ராஜமுருகன் )

``தனிநபர் போவதால், காங்கிரஸ் கட்சிக்கு இழப்பில்லை. ஆனா, குஷ்பு எங்களோடு இருந்திருக்காங்க, தொடர்ந்து இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. மேலும், அவங்க இப்போ போய் சேர்ந்திருக்கிற இடம்தான் உறுத்தலா இருக்கு." - ஜோதிமணி எம்.பி

காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, அந்தப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தொடர்ந்து இன்று பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார். இது சமூக வலைதளங்களில் பெரிய கருத்து விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, குஷ்பு ஒரு நடிகை மற்றும் பெண் என்பதால், கட்சித் தாவலுக்கு வழக்கத்தைவிட அதிகமான, நாகரிகமற்ற தாக்குதல்களையும் பார்க்க முடிகிறது. இந்த நிலையில், குஷ்பு காங்கிரஸ் கட்சியைவிட்டுச் சென்றது பற்றி, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணியிடம் பேசினோம்.

`` `மக்களுக்கு நெருக்கமில்லாத, மக்களைவிட்டு தூரமான தலைவர்கள் தன்னையும் கட்சியையும் ஆட்டுவித்ததால்தான் கட்சியைவிட்டுப் போகிறேன்' என்று குஷ்பு சொல்லியிருக்கிறாரே? காங்கிரஸில் அப்படி என்ன நெருக்கடி இருந்தது குஷ்புவுக்கு?"

``அப்படி அவங்களுக்கு எந்த மோசமான சூழலும் இங்கு இல்லை. பொதுவா, எல்லா கட்சிகளிலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி நாமதான் ஸ்டாண்ட் பண்ணணும். எல்லாவற்றையும்விட கொள்கை முக்கியமில்லையா? ஒரு பெண்ணா, வெளிப்படையா, எதையும் தைரியமா எதிர்கொண்டு, அதற்குக் கருத்து சொல்லக்கூடியவங்களாக இருந்து, என்கூட சேர்ந்து வேலை செஞ்சவங்க என்ற முறையில் குஷ்பு மீது எனக்கு நிறைய மதிப்பிருக்கு. அன்பிருக்கு.

குஷ்பு
குஷ்பு

ஆனா, அவங்க இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா, பா.ஜ.க குஷ்பு மாதிரி லிபரலா இருக்கக்கூடியவங்களுக்கான கட்சி கிடையாது. குறிப்பா, இந்தக் காலகட்டங்களில் தொடர்ச்சியா பாலியல் குற்றங்கள் நடக்குறப்போ, அந்தப் பாலியல் குற்றவாளிகளை வெளிப்படையா ஆதரிக்கிற ஒரு கட்சியா பா.ஜ.க இருக்கு. இந்த மாதிரியான சூழல்ல, அவங்க இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காங்க என்பது வருத்தமா இருக்கு. இதுல நான் வேற என்ன சொல்றது? எங்கிருந்தாலும் குஷ்பு வாழ்க."

``குஷ்பு ராஜினாமா கடிதம் கொடுக்கும் முன்பே, காங்கிரஸ் தலைமை அவர் வகித்த பதவியில் இருந்து அவரை நீக்கியதாகச் சொல்கிறார்கள். குஷ்பு மீது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே அதிருப்தி இருந்ததா?"

``இல்லையே. குஷ்பு ராஜினாமா கடிதம் அனுப்பிய பிறகுதான், காங்கிரஸ் கட்சி அவர்மீது நடவடிக்கை எடுத்தது. தனிப்பட்ட முறையில் அவர்மீது காங்கிரஸ் கட்சிக்கு எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. புகார்களும் இல்லை. அவங்க மேல எந்தக் கோபமும் இல்லை. காங்கிரஸ் கட்சி அவருக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தே வெச்சுருந்தது. இப்படி ஒரு சூழல்ல, அவர் ஏன் காங்கிரஸ் கட்சியைவிட்டு, பா.ஜ.க-வில் இணையுறார்னு தெரியலை. அதைப் பத்தி நீங்க குஷ்புகிட்டதான் கேட்கணும்."

பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு
பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு

``தி.மு.க-வில் இருந்து காங்கிரஸுக்கு வந்த பிறகு, தனக்குக் கட்சியில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்று குஷ்பு நினைப்பதாகச் சொல்கிறார்கள். தமிழகக் காங்கிரஸில் குஷ்புக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லையா?''

``இது தவறான கருத்து. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்துல அவருக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி கொடுத்தது, காங்கிரஸ் தலைமை. இந்த நிலையில, அவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லைனு எப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குக்கிராமத்தில் பிறந்து, எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாம இருந்த என்னை, அகில இந்திய அளவில் பதவிகள், இப்போ எம்.பி பதவி என்று பல வாய்ப்புகள் கொடுத்து உயர்த்தி அழகு பார்ப்பது இதே காங்கிரஸ் கட்சிதான். அதனால், குஷ்புக்கு காங்கிரஸ் கட்சி உரிய முக்கியத்துவம் தரலைனு சொல்றது தவறான கருத்து."

``பெண்கள் மத்தியில் செல்வாக்குள்ள, பலரும் அறிந்த முகமான குஷ்பு கட்சி மாறியிருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு இழப்பு என்று ஒரு தரப்பு சொல்கிறார்களே?"

``யார் கட்சியை விட்டுப் போனாலும், கட்சி தொடர்ந்து சர்வைவல் ஆகும். தனிநபரை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை. 125 வருட காங்கிரஸ் கட்சி வரலாற்றில், எத்தனையோ மிகப்பெரிய மக்கள் தலைவர்கள் கட்சியைவிட்டுப் போயிருக்காங்க. ஆனால், அப்போவெல்லாம் காங்கிரஸ் கட்சி தேங்கி நின்னுடலை. தொடர்ந்து ஆட்சியமைச்சிருக்கு. அதனால், தனிநபர் போவதால், காங்கிரஸ் கட்சிக்கு இழப்பில்லை. ஆனா, குஷ்பு எங்களோடு இருந்திருக்காங்க, தொடர்ந்து இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. மேலும், அவங்க இப்போ போய் சேர்ந்திருக்கிற இடம்தான் உறுத்தலா இருக்கு."

குஷ்பு
குஷ்பு

``பா.ஜ.க தனக்கு முக்கியத்துவம் தரும் கட்சி என்று அவர் நினைத்துப் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?"

``பெண்களை மதிக்கிற கட்சி காங்கிரஸ். ஆனா, பெண்களை ரொம்ப கேவலமாகப் பேசுற கட்சிகள்ல இந்தியாவுல முதன்மையில உள்ள கட்சி எதுன்னா, அது பா.ஜ.க-தான். இதே குஷ்புவை அவங்க ரொம்ப மோசமா பேசியிருக்காங்க. என்னையும் பேசியிருக்காங்க. பெண்களுக்கு எந்தவிதமான மதிப்பும் அளிக்காத, `பெண்கள்னா மதிப்பளிக்கப்பட வேண்டியவங்க இல்லை. வீட்டுக்குள்ளேயே அவங்க சோறாக்கிக்கிட்டு இருந்தா போதும்'ங்கிறதுதான் பா.ஜ.க-வோட சித்தாந்தம். பெண்களை இப்படி அவமதிக்கிற கட்சியாதான் பா.ஜ.க இருக்கு. பெண்களை அவமதிக்கிற, விவசாயிகளை ஒடுக்குகிற, சிறுபான்மையினர்களைப் பயமுறுத்துகிற, இந்திய மக்களோட மொத்த உரிமைகளையும் பறிக்கிற கட்சியா பா.ஜ.க இருக்கு. அந்த மாதிரியான கொள்கைகளையுடைய கட்சியோடு, குஷ்பு மாதிரி ஒருவர் எப்படி உடன்பட முடியும்னு தெரியலை. அதனால, அவருக்கு அங்க மதிப்பு, மரியாதை எல்லாம் கிடைக்காது. இருந்தாலும், அங்கே போவது அவரோட தனிப்பட்ட விஷயம்."

``ஆண் அரசியல்வாதிகள் கட்சி மாறினால், கொள்கை ரீதியாகத்தான் அவர்களை விமர்சிக்கிறார்கள். ஆனால், குஷ்பு மாதிரி பெண்கள் கட்சி மாறினால், அவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு பெண் அரசியல்வாதியாக நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``இன்னும் பெண்ணை ஒரு போகப்பொருளா பார்க்கும் போக்காதான் இதைப் பார்க்க வேண்டியிருக்கு. குஷ்பு சேரவிருக்கும் கட்சி சரியில்லை என்று கருத்து சொல்லலாம். ஆனா, அவரை பெண், நடிகை என்பதாலேயே கீழ்த்தரமாக விமர்சிப்பது தவறு. பெண்களை பொதுவா ஓர் உடலா, ஒரு போகப்பொருளா பார்க்கிற பார்வை இன்னமும் இருக்கு. பொதுவா, எல்லா மட்டத்திலும் இந்தத் தவறான பார்வை இருக்கு. ஒரு பெண் கட்சி மாறினால், கொள்கை ரீதியாகத்தான் அவரை விமர்சிக்கணும்."

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

பெண் என்பதால், அவளை அநாகரிகமா விமர்சிக்கக் கூடாது. பெண்ணை வெறும் போகப்பொருளா பார்க்கும் சித்தாந்தத்தை, பா.ஜ.க கடந்த ஆறு வருஷமா கடுமையா தீனிபோட்டு வளர்த்திருக்கு. 16 வயசு சிறுவன், கிரிக்கெட் வீரர் தோனியின் 5 வயசுக் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடக்கூடிய அளவுக்கான சூழல்ல, இன்னைக்கு இந்தியாவை பா.ஜ.க அரசு கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. அப்படிப்பட்ட கட்சிக்கு குஷ்பு செல்வதைத்தான் என்னால ஏத்துக்க முடியலை. அதே நேரம், பெண் என்பதால் அதை முன்னுறுத்தி அவரை கிரிட்டிசைஸ் பண்றதை ஏத்துக்க முடியாது."

அடுத்த கட்டுரைக்கு