Published:Updated:

Corona: கடுமையான நிமோனியா! - வசந்தகுமார் எம்.பி உடல்நிலை கவலைக்கிடம்

ஹெச்.வசந்தகுமார்
ஹெச்.வசந்தகுமார்

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான ஹெச்.வசந்தகுமார் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் எம்.பி-யும், தமிழக காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி செயல் தலைவருமான ஹெச்.வசந்தகுமார் (70) ஊரடங்கு காலகட்டத்தில், சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஹெச்.வசந்தகுமார்
ஹெச்.வசந்தகுமார்

சில நாள்கள் சென்னையில் தங்கியிருந்த அவர். லேசான கொரோனா அறிகுறிகளுடன் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கும், அவர் மனைவிக்கும் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

`பந்தியில உட்கார்ந்து சாப்பிட்டது குத்தமாய்யா?!' -கட்சிக் கூட்டத்தில் கவலைப்பட்ட வசந்தகுமார் எம்.பி

தொடர்ந்து சிகிச்சையிலிருந்த அவர், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். மேலும், அவரின் உடல்நிலையைக் கேட்டறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வென்டிலேட்டரில் இருந்தாலும், அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் செய்திக் குறிப்பு
மருத்துவமனை நிர்வாகத்தின் செய்திக் குறிப்பு

இந்நிலையில், அவரின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும், உடலின் ஆக்சிஜன் அளவு அதிகமாகக் குறைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையான COVID நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள் கூறுகையில், ``வசந்தகுமார் எம்.பி உடல்நிலை குறித்து வெளியான தகவல் உண்மைதான். இது குறித்த விரிவான மருத்துவ அறிக்கையை விரைவில் வெளியிடவிருக்கிறோம்'' என்று நம்மிடம் தெரிவித்தனர்.

இந்தச் செய்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு