Published:Updated:

துரைமுருகனின் கேரண்ட்டி.. சீமானின் புதுக்கணக்கு... கண்டுகொள்ளாத எடப்பாடி..! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``காரோட்டிக்கொண்டிருப்பதால், வாட்ஸ்அப்பில் `வாய்ஸ் நோட்’ அனுப்பியிருக்கிறேன். டைப் அடித்துக்கொள்ளும்” என்று சொல்லிவிட்டு, போனை கட் செய்தார் கழுகார்! `வாய்ஸ் நோட்’ வரிகளாக இங்கே...

புறக்கணிக்கப்பட்ட குமரி நிர்வாகிகள்
கேரன்டி கொடுத்த துரைமுருகன்!

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க கிளைக்கழகச் செயலாளர்களின் நிர்வாகிகள் பட்டியல், செப்டம்பர் 19-ம் தேதியிட்ட ‘முரசொலி’ பத்திரிகையில் வெளியானது. அதைப் பார்த்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துபோனார்கள். கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள் பலருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், சீனியர்களைப் புறக்கணித்துவிட்டதாகவும் சலசலப்பு எழுந்தது. தொடர்ந்து நகர, ஒன்றியச் செயலாளர்கள் பலரும் மேற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தை முற்றுகையிட்டு பிரச்னை செய்தார்கள்.

துரைமுருகன்
துரைமுருகன்

பலன் இல்லை. உடனடியாக, மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் தலைமையில் வண்டி ஏறியவர்கள், நேராக சென்னையிலிருக்கும் துரைமுருகனின் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். பொதுச்செயலாளரான பிறகு வந்த முதல் பஞ்சாயத்து என்பதால், அவரும் `அடடே...’ என்று அமர்ந்து பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்டாராம். முடிவில், “நாம சொன்னா தம்பி கேட்காமலா போயிடுவாரு... உங்களுக்கெல்லாம் போஸ்ட்டிங் கேரன்டி” என்று நம்பிக்கையூட்டி அனுப்பியிருக்கிறாராம்.

யாருகிட்ட கேட்குறீங்க... அண்ணன்கிட்டதானே... கேளுங்கப்பா, கேளுங்க!

கட்டுக்கட்டாக கரன்ஸி
காலியான கன்டெய்னர்!

சமீபத்தில், சென்னை எண்ணூர் பகுதியிலிருக்கும் தனியார் குடோனிலிருந்து நான்கு காலி கன்டெய்னர் லாரிகள் ஈரோடு நோக்கிப் பறந்தன. அங்கு அமைச்சர் ஒருவரின் ரத்த உறவுக்குச் சொந்தமான தென்னந்தோப்பிலிருந்து கட்டுக்கட்டாக வைட்டமின் ‘ப’வை ஏற்றிக்கொண்டு நான்கு திசைகளிலும் பயணித்தன. அதில் ஒன்று, மதுரை-விருதுநகர் பைபாஸ் சாலையில் பயணிப்பதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்குத் தகவல் கிடைக்கவும், அவர் லோக்கல் பிரமுகருக்குத் தகவலை பாஸ் செய்திருக்கிறார். அந்தப் பிரமுகரும் லாரியை அடையாளம் கண்டுபிடித்து தனது ஆட்களுடன் பின்தொடர்ந்திருக்கிறார்.

ஊழல்
ஊழல்

இதைத் தெரிந்துகொண்ட கன்டெய்னர் தரப்பு விருதுநகரைத் தாண்டியதும், ஒரு பழைய தீப்பெட்டித் தொழிற்சாலைக்குள் லாரியை வேகமாக விட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் பண்டல்கள் அனைத்தும் பத்திரமாக வெவ்வேறு இடங்களுக்கு சிட்டாகப் பறந்தனவாம். திரும்பவும் காலி கன்டெய்னருடன் வெளியே வந்திருக்கிறது லாரி. கிளம்பும்போது மதுரையிலிருக்கும் வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவித்திருந்த எதிர்க்கட்சி பிரமுகர்... திரும்பவும் போனைப் போட்டு ‘அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க’ என்று சொல்லிவிட்டாராம்.

கட்டுக்கட்டாக நோட்டு... அது ஒண்ணொண்ணும் ஓட்டு!

கூடங்குளம் மக்களுக்கு வேலைவாய்ப்பு...
ஒன்றுகூடிய அரசியல் கட்சிகள்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரைப் போராட்டம் 2012, 2013-ம் ஆண்டுகளில் நடந்தபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள்மீது 245 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றில் 213 வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், 32 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகள் காரணமாக இடிந்தகரை, கூடங்குளம், ராதாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களால் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடியவில்லை. தனியார் நிறுவனங்களும் அவர்களுக்கு வேலை கொடுக்கத் தயங்குகின்றன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த வேலைக்குச் செல்வதற்கும் உள்ளூர் போலீஸாரின் அனுமதிக் கடிதம் தேவை என்பதால், அங்கும் வேலைக்குச் செல்ல முடியவில்லை.

கூடங்குளம்
கூடங்குளம்

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு, ‘அணுமின் நிலையத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார். நெல்லை தொகுதி தி.மு.க எம்.பி-யான ஞானதிரவியமும் இந்தக் கோரிக்கையை அணுமின் நிலைய நிர்வாகத்திடம் எடுத்துவைத்திருக்கிறார். அ.தி.மு.க-வின் ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை சார்பிலும் நெல்லை மாவட்ட எஸ்.பி-யிடம் வழக்குகளை வாபஸ் வாங்கும்படி மனு அளிக்கப்பட்டிருக்கிறது. கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசியல் பிரமுகர்கள் குரல் கொடுத்திருப்பதால், தங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள் கூடங்குளம் மக்கள்.

நல்லது நடக்கட்டும்!

டெல்டாவில் பத்து ஆண்டுகள்...
பசையாக ஒட்டிக்கொண்ட இன்ஸ்பெக்டர்!

டெல்டா மாவட்டம் ஒன்றில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவரைப் பற்றி காக்கிகள் மிரட்சியாகப் பேசிக்கொள்கிறார்கள். சுமார் பத்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் அந்தப் பெண் ஆய்வாளர், சொந்த ஊரில் பிரமாண்டமான பங்களாவைக் கட்டிவருகிறாராம். டெல்டா அமைச்சர் ஒருவரின் வலதுகரமாக விளங்கும் ஆளும்கட்சிப் பிரமுகரின் அரவணைப்பு ஆய்வாளருக்கு இருப்பதால், மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்குக் கட்டுப்படுவதில்லையாம். சில நேரம் இவரிடமிருந்து மேலதிகாரிகளுக்குச் செல்லும் உத்தரவைப் பார்த்து சக காக்கிகளே மிரள்கிறார்கள்.

காவல் துறை
காவல் துறை

இவரைப் பற்றிப் புகார்கள் சரமாரியாக காக்கி தலைமையிடத்துக்குச் செல்லவே... சமீபத்தில் இவரை மாற்றச்சொல்லி துறை மேலிடத்திலிருந்து மாவட்டத் தலைமைக்கு ஓலை சென்றதாம். உற்சாகமாக உயரதிகாரி கையெழுத்துப் போடும் கடைசி நிமிடத்தில் வந்தது ஓர் அலைபேசி அழைப்பு... தகவலை உள்வாங்கியவர், பேனாவை அப்படியே மூடிவைத்துவிட்டாராம். இவருக்கெப்படி இவ்வளவு செல்வாக்கு என்று அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையாம் அந்த மேலதிகாரி!

அதுக்கப்புறம் பேனாமுனையை அப்படியே முறிச்சி வெச்சிருப்பரோ!

காட்சிப்பொருளான பாலம்
புதுச்சேரியின் புதுப் பஞ்சாயத்து!

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஏழே மாதங்களில் மேம்பாலத்தைக் கட்டி முடித்தது மத்திய அரசு. ஆனால், அதே பாலத்தின் இணைப்புப் பாலத்தை, 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்க வேண்டிய புதுச்சேரி அரசு, ஏழு வருடங்களாக இழுவையாக இழுத்து, சமீபத்தில்தான் பணியை முடித்தது. `சரி... இப்போதாவது வேலையை முடித்தார்களே... ஏழு கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் கொடுமை முடிவுக்கு வந்ததே...’ என்று பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

துரைமுருகனின் கேரண்ட்டி.. சீமானின் புதுக்கணக்கு... கண்டுகொள்ளாத எடப்பாடி..!  கழுகார் அப்டேட்ஸ்

திறப்புவிழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தபோது, ‘மத்திய அமைச்சர் பாலத்தைத் திறந்தால் நமக்கு நல்லது’ என்று டெல்லியிலிருந்து வந்த உத்தரவால் கட்டையைப் போட்டார் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி. இப்போது மத்திய அரசின் தேதிக்காகக் காத்து நிற்கிறது புதுச்சேரி அரசு. ‘இவங்க பஞ்சாயத்துல ஏழு கிலோமீட்டர் சுத்த விடுறாங்களே...’ என நொந்துகொள்கிறார்கள் புதுச்சேரி மக்கள்.

ஏழு கிலோமீட்டர் பஞ்சாயத்து `ஏழரை'யில்தான் முடியும்போலிருக்கிறது!

கீழடியைக் கண்டுகொள்ளாத எடப்பாடி!

கொரோனா காலகட்டத்திலும் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்வதில் பிஸியாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விமானம் மூலம் மதுரை சென்றடைந்த முதல்வர், அங்கிருந்து சாலைமார்க்கமாக ராமநாதபுரம் சென்றார். அவருக்கு, கீழடி அருகில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வரவேற்பளித்தார். அதை ஏற்றுக்கொண்ட முதல்வர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ‘‘கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்துவரும் நிலையில், இதுவரை ஒருமுறைகூட முதல்வர் அங்கு சென்று பார்வையிட்டதில்லை.

துரைமுருகனின் கேரண்ட்டி.. சீமானின் புதுக்கணக்கு... கண்டுகொள்ளாத எடப்பாடி..!  கழுகார் அப்டேட்ஸ்

முதல்வர் அந்த வழியாக வந்த சமயத்திலாவது கீழடிப் பணிகளைப் பார்வையிட்டிருக்கலாம் அல்லது அதிகாரிகளோ அ.தி.மு.க நிர்வாகிகளோ நினைவூட்டி, கீழடியைப் பார்வையிட அழைத்துச் சென்றிருக்கலாம்’’ என்று முணுமுணுக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

சேக்கிழார் எழுதுன கம்பராமாயணம்போல கீழடியை எழுதுனது திருவள்ளுவருனு நெனைச்சிருப்பாரோ!

``இருபத்தொண்ணுலயும் இறங்கி அடிக்கணும்!’’
வேலுமணி டார்கெட்

2021 சட்டமன்றத் தேர்தல் பணிகளை கவனித்துக்கொள்வதற்காக திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் அமைச்சர் வேலுமணிக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றனவாம். இந்த மூன்று மாவட்டங்களிலுள்ள 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வை வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்று தீர்மானமாகக் களமிறங்கிவிட்டாராம் வேலுமணி.

துரைமுருகனின் கேரண்ட்டி.. சீமானின் புதுக்கணக்கு... கண்டுகொள்ளாத எடப்பாடி..!  கழுகார் அப்டேட்ஸ்

அதற்காக சாதி, மத, இனவாரியாக வாக்காளர்களைக் கணக்கெடுத்து, அவர்கள் அனைவரையும் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வைப்பதற்கான திட்டங்களைத் தீட்டிவருகிறாராம். இன்னொரு பக்கம், எதிர்க்கட்சி நிர்வாகிகளை வளைக்கும் வேலையும் ஜோராக நடக்கிறது. தேர்தலின்போது பட்டுவாடாக்களுக்குக் கெடுபிடி இருக்கும் என்பதால் வட்ட, கிளை நிர்வாகிகள் மூலம் கோயில், கும்பாபிஷேகம், கல்யாணம், காதுகுத்து, கடா வெட்டு என ‘மைக்ரோ’ லெவல் கோரிக்கைகளுக்கு இப்போதே வெயிட்டாக செட்டில்மென்ட் செய்யப்பட்டுவருகிறதாம்.

பார்க்கத்தானே போறீங்க இந்த வேலுமணியோட ஆட்டத்தை!

`234 லட்சியம்; 40 நிச்சயம்!’
இது சீமான் புதுக்கணக்கு!

‘234 லட்சியம்; 40 நிச்சயம்’ என்ற அறிவிக்கப்படாத கோஷத்தோடு, சட்டமன்றத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி தயாராகிவிட்டது. அதற்காக 40 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு வேட்பாளர்களையும் அடையாளம்காட்டி, தேர்தல் பணிகளை ஆரம்பிக்கும்படி சீமான் சொல்லிவிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னைத் தொகுதியில் போட்டியிட்டு கவனம் ஈர்த்த காளியம்மாள், இந்தமுறை நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறாராம்.

சீமான்
சீமான்

கோபிசெட்டிப்பாளையத்தில் சீதாலட்சுமி என்பவர் களமிறங்கவிருக்கிறாராம். பெண் வேட்பாளர்கள்தான் அனைவரையும் முந்திக்கொண்டு களத்தில் இறங்கி சுறுசுறுப்பாகப் பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

காலியாகும் பதவிகள்...
அறிவாலயத்தில் போட்டா போட்டி!

தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஆ.ராசா, துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுவிட்டார். இன்னொரு கொள்கைபரப்புச் செயலாளரான தங்க.தமிழ்ச்செல்வனை மாவட்டச் செயலாளராக்க தி.மு.க தலைமை முடிவுசெய்திருக்கிறதாம். தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, அதில் ஒரு மாவட்டத்துக்கு தங்க.தமிழ்ச்செல்வனை நியமிக்கவிருப்பதாகத் தகவல். பெரியகுளம், ஆண்டிப்பட்டி தொகுதிகள் அடங்கிய பகுதி அவருக்கு ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். கம்பம், போடி தொகுதிகள் தற்போதைய மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்படுமாம்.

தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்ச்செல்வன்

இந்த நியமனம் அறிவிக்கப்பட்டால், கழகத்தின் ஒரே கொள்கைபரப்புச் செயலாளராக திருச்சி சிவா மட்டுமே இருப்பார். ஆ.ராசா, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரால் காலியாகும் கொள்கைபரப்புச் செயலாளர் பதவிகளைப் பிடிக்க, அறிவாலயத்தில் இப்போதே போட்டா போட்டி ஆரம்பித்துவிட்டது.

அண்ணன் எப்போ கிளம்புவாரு... திண்ணை எப்போ காலியாகும் கதையால்ல இருக்கு!

``ஆஸ்பத்திரிக்கு வர்றியா...’’
அழைப்பு விடுத்த பாரதி!

சென்னை ஆதம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தொற்றுக்காக சிகிச்சை எடுத்துவருகிறார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. தினமும் அறிவாலயத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர், மருத்துவமனை அறைக்குள் முடங்கிக்கிடக்க முடியாமல் தவிக்கிறாராம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அறிவாலய நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேசுபவர், “அறிவாலயத்துக்கு யார் வந்தார்கள்... விஜயகாந்த் எப்படியிருக்கிறார்?” என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறாராம்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி
தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

இப்படி அடிக்கடி போன் அடிக்கவே, ‘‘எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணே... நீங்க செய்தி சேனல்களைப் பார்க்காம இருங்க. தேவையில்லாத டென்ஷன் குறையும்’’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள். ‘பொழுதுபோகாம இருக்கிறாரே... நாம அவர்கிட்ட பேசிவெப்போம்’ என்று நினைத்த இன்னோர் உடன்பிறப்பு, போன் போட்டு உடல்நலனை விசாரிக்க, ‘பக்கத்துல ரெண்டு பெட் காலியா இருக்கு. வர்றியா...’ என்று கேட்டு கலாய்த்திருக்கிறார் ஆர்.எஸ்பாரதி.

எப்படியோ பொழுது நல்லபடியா கழிஞ்சா சரி!

அடுத்த கட்டுரைக்கு