Published:Updated:

இந்தி ஆதரவு ஆளுநர்; மழுப்பிய அமைச்சர், ஐபேக் `ஏழரை' ரிப்போர்ட்..! டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

`சொயிங்ங்ங்...’ என உற்சாகமாக லேண்ட் ஆனார் கழுகார். ``சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்போகிறது... சட்டமன்றம் கிளம்புகிறேன், இதோ பிடியுங்கள்...’’ என்று சில குறிப்பெடுத்த பேப்பர்களைக் கொடுத்துவிட்டுப் பறந்தார் கழுகார்.

``இந்தி கத்துகோங்க!’’

செப்டம்பர் 7-ம் தேதி உயர்கல்வித்துறையில் புதிய கல்வி கொள்கைத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் நடந்தது. டெல்லியிலிருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மாநிலங்களின் கவர்னர்கள், உயர்கல்வித்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னை கிண்டி ராஜ்பவனுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா உள்ளிட்டோர் சென்றனர்.

பன்வாரிலால் புரோஹித்
பன்வாரிலால் புரோஹித்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காணொலிக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ரிலாக்ஸாக அவர்களிடம் பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ``நீங்கள் ஏன் இந்தி மொழியை ஆதரிக்கக் கூடாது... காஷ்மீரில் ஐந்து மொழிகளைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்வதால் என்ன பிரச்னை?” என்று தூண்டில் போட்டாராம். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மென்று விழுங்கிய அமைச்சர் அன்பழகன், ``அது வந்து சார்... அதாவது... ங்ங்க் அது எங்க கொள்கை’’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவைத்தாராம். பதிலுக்கு கவர்னரும், ``என்னவோ போங்க... உங்கள் கொள்கையில் நான் தலையிடவில்லை’’ என்று உரையாடலை முடித்துக்கொண்டாராம்.

முதல்ல கவர்னரை தமிழ் கத்துக்கச் சொல்லியிருக்கலாமில்லை!

அடுத்தடுத்த அட்டாக்...
அப்செட்டில் பெரியகருப்பன்!

சிவகங்கையில் தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன்மீது அடுத்த அட்டாக்கைத் தொடுத்திருக்கிறார்கள் அவருடைய எதிர் கோஷ்டியினர். ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பழைய வீடியோ பஞ்சாயத்து ஒன்றைக் கிளப்பினார்கள். இப்போது, `மணல் கொள்ளைக்கு ஆளும்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.க-வும் கூட்டணிதான்’ என்று பெரியகருப்பனின் புகைப்படத்துடன் அச்சிட்டு போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

பெரியகருப்பன்
பெரியகருப்பன்

இவையெல்லாம் கருப்பனை கடும் அப்செட்டில் தள்ளியிருக்கின்றனவாம். இதற்கிடையே சிவகங்கை மாவட்ட தி.மு.க-வில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சண்முக வடிவேல் மரம் வெட்டியது, மணல் பதுக்கியது எனப் பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கிறார். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து மேலிடத்துக்குத் தகவலாகச் செல்ல... கட்சித் தலைமை கடுகடுத்திருக்கிறது!

முன்னே வீடியோ... பின்னே போஸ்டர்... அடுத்து என்னவோ?!

`மிட்நைட்’ மசாலா...
களைகட்டும் ஆம்பூர்!

ஆம்பூர் பிரியாணி ஆளை அசத்தும் என்பது தெரிந்த விஷயம். மசாலா கலவை அப்படி. இப்போது அதே ஆம்பூரில் `மிட்நைட் மசாலா’வும் களைகட்டுகிறது என்று புகார் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஆம்பூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பல விடுதிகளில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறதாம். கொரோனாவுக்கு முன்பிருந்தே இந்தத் தொழிலை சிலர் செய்துவந்தாலும், ரகசிய கோட்வேர்டு, ஒன்டைம் பாஸ்வேர்டு என்று பக்காவாக மெயின்டெயின் செய்வதால், விஷயம் அவ்வளவாக வெளியே தெரியவில்லை. சமீபகாலமாக தொழிலில் போட்டி அதிகமானதால், பேருந்து நிலையம் பக்கம் சும்மா ஒதுங்கினோலே, ``உள்ளே வாங்க சார்... ரொம்ப ரொம்ப சீப் ரேட்...’’ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக உபசரிக்கிறார்களாம். அப்படித்தான் சமீபத்தில், ஓர் இளம் தம்பதியர் சென்னை செல்லும் வழியில் இரவு நேரமானதால் ஓய்வெடுக்க ஒரு விடுதியில் அறை கேட்டிருக்கிறார்கள். அப்போது, `ஒரு மணி நேரமா, ரெண்டு மணி நேரமா..?’ என்று கேட்டிருக்கிறது விடுதித் தரப்பு. அதிர்ச்சியடைந்த அந்தத் தம்பதியர் விட்டால் போதும் என்று இடத்தை காலி செய்திருக்கிறார்கள்.

ஆம்பூர்
ஆம்பூர்

நேர்மையான பல விடுதிகளின் உரிமையாளர்களோ, ``கொரோனா ஊரடங்கால் தங்கும் விடுதித் தொழில் சுத்தமாகப் படுத்துவிட்டது. கட்டடங்களையும் விடுதி அறைகளையும்கூட பராமரிக்கப் பணம் இல்லை. தண்ணீர், மின்சாரக் கட்டணம்கூட கட்ட முடியவில்லை. அதனால்தான் சிலர் இப்படிச் சட்டவிரோத தொழிலில் இறங்கிவிட்டார்கள். அவர்களைவைத்து ஆம்பூரின் ஒட்டுமொத்த விடுதிகளையும் மதிப்பிடக் கூடாது” என்கிறார்கள் மனம் நொந்தபடி.

பிரியாணி மயக்கத்தில் ஆம்பூர் காக்கிகள் உறங்குகிறார்களோ!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
களத்தில் `எம்.ஆர்.வி பாய்ஸ்’
உற்சாகத்தில் கரூர்வாசிகள்!

நடிகர் கார்த்திக் நடித்த `சகுனி’ படத்தில், ராதிகாவைத் தேர்தலில் ஜெயிக்கவைப்பதற்கு, அவரின் ஆதரவாளர்கள் சமூக சேவையில் களமிறங்குவார்கள். ரேஷன் கடைக்குச் செல்வது தொடங்கி கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து தண்ணீர் குடத்தை வாங்கிச் சுமப்பதுவரை அதகளப்படுத்துவார்கள். இப்போது அதே ஃபார்முலாவை கையிலெடுத்திருக்கிறார் கரூர் மாவட்ட அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அதன்படி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை நியமித்து, `எம்.ஆர்.வி பாய்ஸ்’ என்ற படையை உருவாக்கியிருக்கிறார். `தண்ணி வரலை’, `சாக்கடை அடைச்சுருச்சு...’ என்று கரூர் தொகுதிவாசிகள் போனில் குறைகளைச் சொன்னால், பத்தாவது நிமிடம் ஸ்பாட்டில் ஆஜராகிறதாம் இளைஞர் படை. இதைப் பார்த்துவிட்டு செந்தில் பாலாஜியும் ஒரு படையைத் திரட்ட ஆரம்பித்திருக்கிறாராம்!

கரூரில் களைகட்டுது தேர்தல் ஜரூர்!

`பாசிட்டிவ்’ என்றாலும் நெகட்டிவ்!
சேலம் மருத்துவர்கள் அதிர்ச்சி!

சேலம் மாவட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், தனியார் மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார். அதில், `கோவிட்-19 பரிசோதனையில் `பாசிட்டிவ்’ உறுதி செய்யப்பட்டாலும், வைரஸின் தாக்கம் அதிகமிருந்தால் மட்டுமே `பாசிட்டிவ்’ என்று பதிவுசெய்ய வேண்டும். தாக்கம் குறைவாக இருந்தால், `நெகட்டிவ்’ என்று பதிவுசெய்து அனுப்பிவிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறாராம். இதனால் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறாகள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

``எங்களிடம் வேறு சிகிச்சைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்று தெரியாமல் எப்படிச் சிகிச்சையளிப்பது... எங்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு பலருக்கும் பரவாதா?” என்று புலம்புகிறார்கள்.

வேண்டாமே உயிர் விளையாட்டு!

சர்ச்சை மனிதருக்குப் பதவி?!

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்புப் பிரிவில் பணிபுரிந்த செவிலியர்கள், ஆரம்பத்தில் தனியார் தங்கும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். பிறகு, வசதி குறைந்த செவிலியர் பயிற்சிப்பள்ளி விடுதிக்கு அனுப்பப்பட்டனர். படிப்படியாக வசதிகள் குறைந்தன. `கொரோனா தடுப்பு சாதனங்கள் முறையாக வழங்கப்படவில்லை’, `கொரோனா நோயாளிகளுக்கும் சரியான உணவு வழங்குவதில்லை’ போன்ற புகார்கள் எழுந்தன. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம், நிலைய மருத்துவ அலுவலர்தான் காரணம் என்று போராட்டம்கூட நடைபெற்றது. போராட்டத்துக்கு பிறகு நிலைமை ஓரளவு பரவாயில்லை. தற்போது, அதே மருத்துவரையே கொரோனா தடுப்புப் பணிக்கான மாவட்ட தொடர்பு அலுவலராக நியமத்திருக்கிறது அரசு. இந்தப் பணியில் என்னென்ன குளறுபடிகள் செய்யப்போகிறாரோ என்று புலம்புகிறார்கள் இதர மருத்துவப் பணியாளர்கள்.

மாவட்டத்துக்கு மாவட்டம் வாசப்படி... ஊர்தோறும் குளறுபடி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏழு முறை நின்றவருக்கு மீண்டும் சீட்டா?
ஏழரையைக் கிளப்பிய ஐபேக் டீம்!

தி.மு.க-வுக்காக வேலை பார்க்கும் ஐபேக் டீம், டெல்டா மாவட்ட அரசியல் நிலவரத்தைக் கணக்கிட்டு, ஒரு ரிப்போர்ட்டை தலைமைக்கு அனுப்பியிருக்கிறதாம். அதில், `திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ-வும், தஞ்சாவூர் தெற்கு தி.மு.க மாவட்டச் செயலாளருமான துரை.சந்திரசேகரனுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறதாம். இதனால், கொதித்துப்போயிருக்கிறது துரை அண்ட் கோ. ஆனால், உள்ளூர்க் கட்சி நிர்வாகிகள் சிலரோ, ``தி.மு.க-வில் தொடர்ச்சியாக ஏழு முறை துரை.

துரை.சந்திரசேகரன்
துரை.சந்திரசேகரன்

சந்திரசேகரன்தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். மீண்டும் அவருக்கே சீட் வழங்கினால், மக்கள் வெறுப்படைந்துவிடுவார்கள். இதையெல்லாம் குறிப்பிட்டுத்தான் ஐபேக் ரிப்போர்ட் அளித்திருக்கிறது” என்கிறார்கள். இதையடுத்து, டி.ஆர்.பாலுவையும், கே.என்.நேருவையும் சுற்றிச்சுற்றி வருகிறாராம் துரை.

சந்திரசேகரன். படையெடுப்பாரா துரை!

``படகைக் கிளப்புங்கள்!’’
கனிமொழியின் திடீர் கடல் பயணம்

செப்டம்பர் 7-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், தண்டுபத்து கிராமத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழி, கூட்டம் முடிந்ததும், ``மணப்பாடு கிராம மீனவர்கள் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை கொடுத்திருந்தார்களே... வண்டியை அங்கு விடுங்கள்’’ என்றாராம். அவருடன் திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வான அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சிலர் சென்றிருக்கிறார்கள். மணப்பாடு கிராமத்தின் கடற்கரையில் கனிமொழியைக் கண்டதும் சூழ்ந்துகொண்ட மீனவர்கள், ``அடிக்கடி ஏற்படும் மண்திட்டுகளால் மீன் பிடிக்க முடியலை. தூண்டில் வளைவு அமைப்பதுதான் நிரந்தரத் தீர்வு மேடம்” என்று கூறியிருக்கிறார்கள்.

கனிமொழியின் திடீர் கடல் பயணம்
கனிமொழியின் திடீர் கடல் பயணம்

உடனே அருகிலிருந்த மீனவர் ஒருவரிடம், ``படகைக் கிளப்புங்கள்” என்று சொல்லியிருக்கிறார் கனிமொழி. இதைச் சற்றும் எதிர்பார்க்காத கட்சி நிர்வாகிகள் மிரண்டுபோக... ``அதெல்லாம் ஒண்ணுமில்லை, வாங்க போகலாம்’’ என்று அனிதா ராதாகிருஷ்ணனையும், மீனவ சங்க நிர்வாகிகள் சிலரையும் அழைத்துக்கொண்டு கடலில் முகத்துவாரம் வரை சென்று மணல் திட்டுகளை ஆய்வுசெய்திருக்கிறார். விரைவில் பிரச்னையைத் தீர்ப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார் கனிமொழி!

கனிமொழி... இனி தனிவழி!

தினகரன் ஆதரவாளர்களுக்கே பதவி...
நீலகிரி அ.தி.மு.க பதவி சர்ச்சை!

நீலகிரி அ.தி.மு.க மாவட்டச் செயலாளரான வினோத் மாவட்ட, ஒன்றியப் பதவிகளுக்கான பொறுப்பாளர்களை சமீபத்தில் அறிவித்தார். அறிவித்த சில மணி நேரத்திலேயே தினகரன் அணியினருக்கே 80 சதவிகிதப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக வினோத்துக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. ``அ.ம.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்குத் திரும்பிய ஊட்டி கோபாலகிருஷ்ணனுக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவி தரப்பட்டிருக்கிறது.

நீலகிரி அ.தி.மு.க
நீலகிரி அ.தி.மு.க

உதகை, கூடலூர், குந்தா ஒன்றியச் செயலாளர் பதவிகளிலும் தினகரன் அணியினருக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. `டிம்பர் மாஃபியா’ பிரமுகர் ஒருவரின் பேச்சைக் கேட்டுத்தான் இதையெல்லாம் வினோத் செய்கிறார்” என்று கொந்தளிக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.

எரியும் பனிமலை!

வசூல்வேட்டையில் இ.எஸ்.ஐ அதிகாரி...
கலங்கும் தென்மண்டலம்!

தென்மண்டலத்தில் இ.எஸ்.ஐ பிரிவிலிருக்கும் உயரதிகாரி ஒருவரின் ஆட்டம் தாங்க முடியவில்லையாம். சுகாதாரத்துறையில் டி.எம்.எஸ்., டி.பி.ஹெச்., இ.எஸ்.ஐ., டி.எம்.இ என்று பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களைத்தான் சுழற்சிமுறையில் கொரோனா டூட்டிக்கு பணியமர்த்துகிறார்கள். பிற மாவட்டங்களிலெல்லாம் சில நாள்களுக்கு முன்னதாகவே இவர்கள் பணிபுரிய வேண்டிய தேதியைச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், தென் மாவட்ட இ.எஸ்.ஐ பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதல்நாள் மாலைதான் மறுநாள் டூட்டி பற்றி அந்த உயரதிகாரி தகவல் சொல்கிறாராம். கேட்டால், சஸ்பென்ஸ் என்கிறாராம்.

இ.எஸ்.ஐ
இ.எஸ்.ஐ

டூட்டிக்குச் செல்லும் மருத்துவர்கள் 15 நாள்களுக்கு வீட்டுக்கு வர முடியாது என்பதால், கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் பரிதவிக்கிறார்கள். யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், `நான் சொன்னா சொன்னதுதான்’ என்று கடுமை காட்டுகிறாராம். இதுபோதாதென்று, கொரோனா நேரத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளுக்கு திடீர் விசிட் அடித்து, ஏதாவது குற்றச்சாட்டைச் சொல்லி, பலத்த வசூல் வேட்டையும் நடத்துகிறாராம். கொந்தளிப்பில் இருக்கிறார்கள் சுகாதாரத்துறையினர்.

ஆடாத ஆட்டமெல்லாம்...

ஐ.ஏ.எஸ் காரில் மது விற்பனை...
அரண்டுபோன காவல்துறை

ஊரடங்கு தளர்த்தப்பட்டு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக நடந்த விவகாரம் ஒன்று இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது. தலைமைச் செயலகத்திலிருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, அலுவல்ரீதியாக டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அவரது கார் இரண்டு நாள்கள் சென்னை விமான நிலைய பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வப்போது வெள்ளைச் சீருடை அணிந்த ஒருவர் கார் டிக்கியை திறப்பதும், அதிலிருந்து சில பார்சல்களை எடுத்துச் செல்வதுமாக இருந்திருக்கிறார். இதைப் பார்த்த போலீஸார், அந்த நபரிடம் விசாரித்திருக்கிறார்கள். அதற்கு, ``ஹலோ நான் யார் தெரியுமா... ஐயாவின் கார் டிரைவர்’’ என்று அவர் கெத்து காட்டியிருக்கிறார். சந்தேகமடைந்த போலீஸார், கார் டிக்கியைத் திறந்து பார்த்திருக்கிறார்கள். உள்ளே இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகள் நிறைய மதுபான பாட்டில்கள் இருந்திருக்கின்றன. அதிர்ச்சியடைந்தவர்கள், டிரைவரை பல்லாவரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.

டாஸ்
டாஸ்

அப்போது, ``கொரோனா ஊரடங்கு காலத்துல ஐயா வெளியூர் போகும்போதெல்லாம் அவருக்குத் தெரியாம காரில் சரக்கோட ஏர்போர்ட் வந்துருவேன். அரசாங்க வண்டிங்கறதால இதுல சரக்குவெச்சு வித்தா யாருக்கும் சந்தேகம் வராது. கடன் தொந்தரவு தாங்கலை. வேற வழியில்லாம இப்படிப் பண்ணிட்டேன்...’’ என்று கதறி அழுதிருக்கிறார் அந்த டிரைவர். மேலிடத்து விவகாரம் என்பதால், தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சொல்லிவிட்டு டிரைவரை எச்சரித்து அனுப்பிவிட்டது போலீஸ். டிரைவர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் என்னென்ன செய்யத் தூண்டுமோ கொரோனா கொடுங்காலம்!