Election bannerElection banner
Published:Updated:

வெலவெலத்த உதயநிதி... பன்னீரை புறக்கணித்த மினிஸ்டர்...! கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

``எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்குச் செல்கிறேன்... வாட்ஸ்அப் பாரும்...’’ - சொல்லிவிட்டு போனை கட் செய்தார் கழுகார். வாட்ஸ்அப்பில் செய்திகள் நிரம்பத் தொடங்கின!

வெளுத்து வாங்கிய உடன்பிறப்பு...
வெலவெலத்த உதயநிதி!

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டபோது கட்சிக்குள் எழுந்த கொதிப்பு இன்னும் அடங்கவில்லை. இப்படி மனம் நொந்திருந்த கட்சி நிர்வாகி ஒருவர், வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல இளைஞரணி மேலிடத்தை ‘வைத்து’ செய்துவிட்டார். கடந்த வாரம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதியிடம் தேதி வாங்கியிருக்கிறார் சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் மதன்மோகன்.

உதயநிதி
உதயநிதி

`நிகழ்ச்சி எங்கே நடக்கிறது?’ என சிற்றரசு தரப்பில் பலமுறை கேட்டும், அவருக்கு சரிவர ரெஸ்பான்ஸ் தரவில்லையாம் மதன் தரப்பினர். கடைசியாக உதயநிதி விழாவுக்கு வந்தபோது `எங்கப்பா ஃபங்ஷன்?’ என்று கேட்க, `இதோ இந்த தெருமுக்குலதான் அண்ணே ஃபங்ஷன்...’ என்று தெருமுனை மேடையைக் காட்டியிருக்கிறார். தடபுடல் வரவேற்பு, பெரிய மண்டபம் என்று நினைத்து வந்த உதயநிதி தரப்பு இதைப் பார்த்து கடும் அப்செட். ஆனாலும், காட்டிக்கொள்ளாதவராக மேடை ஏறியிருக்கிறார். அப்போதும் விடவில்லை மதன்... மேடையிலிருந்த உதயநிதியின் ஆதரவாளரான சீனியர் ஒருவரை, ஒருமையில் `வாங்கு... வாங்கு...’ என்று வாங்கி, உதயநிதியையே வெலவெலக்கவைத்திருக்கிறார்!

உதயத்தோட இதயத்தையே உடைச்சிட்டீங்களேப்பு!

அரசியலில் அதிரடி முடிவு...
பன்னீரின் குலதெய்வ வழிபாடு

செப்டம்பர் 12-ம் தேதி ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்தை முடித்துக்கொண்ட துணை முதல்வர் பன்னீர்செல்வம், கையோடு விருதுநகர் மாவட்டம், செண்பகத்தோப்பு பகுதியிலுள்ள தனது குலதெய்வமான வனபேச்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார். அரசியல்ரீதியாக எந்தவொரு முக்கிய முடிவெடுப்பதாக இருந்தாலும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே முடிவெடுப்பாராம் பன்னீர். கடந்த முறை முதலமைச்சர் பதவியேற்றபோது குலதெய்வக் கோயிலுக்கு வராததால்தான் பாதியில் பதவி பறிபோனதாக நினைக்கிறார்.

வெலவெலத்த உதயநிதி... பன்னீரை புறக்கணித்த மினிஸ்டர்...! கழுகார் அப்டேட்ஸ்

`தற்போது மீண்டும் அரசியல்ரீதியாக சில அதிரடி முடிவுகளை எடுக்கவிருப்பதால் இந்த வழிபாடு’ என்கிறார்கள். கோயிலுக்குச் செல்லும் வழியில் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பன்னீருக்கு தடபுடல் வரவேற்பு அளித்தாலும், உள்ளூரிலிருந்துகொண்டே தலைகாட்டவில்லை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

பாலாஜி... இது சரியா ஜி!

நல்லா இருந்த கட்சியும்
நாலு ஐடி `விங்’குகளும்!

தி.மு.க-வில் கட்சிக்கு ஒன்றும், உதயநிதி, சபரீசன் என்று ஆளுக்கு ஒன்றுமாக ஐடி `விங்’குகள் செயல்படுகின்றன. இந்த அத்தனை `விங்’குகளுக்கும் சுடச்சுட பதிலடி கொடுக்கிறது அ.தி.மு.க-வின் ஒற்றை ஐடி விங். `ஹிந்தி தெரியாது போடா...’ என்று தி.மு.க டிரெண்ட் செய்தபோது `தி.மு.க வேண்டாம் போடா...’ என்று பதிலடி கொடுத்தது அ.தி.மு.க ஐடி விங். சட்டமன்றத் தொடரில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் அச்சிடப்பட்ட `மாஸ்க்’குகளை அணிந்து வந்து எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

வெலவெலத்த உதயநிதி... பன்னீரை புறக்கணித்த மினிஸ்டர்...! கழுகார் அப்டேட்ஸ்

மறுநாள் சட்டசபையிலேயே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்த தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இருக்கும் தொடர்புகளை அம்பலப்படுத்தி, கொந்தளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை, ``நீட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்.

வெலவெலத்த உதயநிதி... பன்னீரை புறக்கணித்த மினிஸ்டர்...! கழுகார் அப்டேட்ஸ்

வரலாற்றை மாற்றாதீர்கள்” என்று கிழித்துத் தொங்கவிட்டார். இவையெல்லாம் அ.தி.மு.க ஐடி விங் எடுத்துக்கொடுத்த டேட்டாதான் என்கிறது ஆளும்கட்சித் தரப்பு. தி.மு.க-வில் ஒரே ஐடி விங்காக இல்லாமல், ஆளுக்கோர் அணியாகச் செயல்படுவதால்தான் இந்தப் பின்னடைவு என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.

கட்சியிலதான் கோஷ்டின்னா... ஐடி விங்குலயும் கோஷ்டியா!

நெல்லை கொடுக்கும் தொல்லை!

நெல்லை அ.தி.மு.க-வில் கோஷ்டி மோதல்கள் உச்சம் அடைந்துள்ளன. ராதாபுரம் தொகுதிக்குள் நடக்கும் கோஷ்டி மோதலைச் சமாளிக்கவே மாவட்ட தலைமைக்கு நேரம் போதவில்லை. இந்த நிலையில் நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளைச் சேர்த்து மாநகர மாவட்டமாகவும், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளைச் சேர்த்து புதிய மாவட்டமாகவும் உருவாக்கி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று ஒரு கோஷ்டி கொடிபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

கோஷ்டி நல்லது... வேஷ்டி வியாபாரத்துக்கு!

ஊட்டியில் சரிந்த மரங்கள்...
கல்லாகட்டிய வனத்துறை!

ஊட்டி, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த பெருமழையில் சாலையோரத்திலும், வனத்துக்குள்ளும் ஏராளமான மரங்கள் பெயர்ந்து விழுந்தன. இதில் சாலையோரங்களில் சரிந்த மரங்களுக்கு மட்டுமே கணக்கு காட்டிய வனத்துறையினர், காட்டுக்குள் விழுந்த மரங்களை மர வியாபாரிகளுக்குத் தள்ளிவிட்டு கல்லாகட்டிவிட்டார்களாம்.

வெலவெலத்த உதயநிதி... பன்னீரை புறக்கணித்த மினிஸ்டர்...! கழுகார் அப்டேட்ஸ்
கே.அருண்

இந்த விவகாரம் வனத்துறை உயரதிகாரிகளுக்குச் செல்ல அதிர்ந்துபோன அவர்கள், `எங்க பங்கு வரலைன்னா பிச்சுப்புடுவேன், பிச்சு...’ என்று கறார் உத்தரவு போட்டிருக்கிறார்களாம். அதானே...

ஆபிஸருங்கிற மருவாதை வேணாம்!?

``ரோடு ரோலர் எங்கய்யா..?’’
கொதித்த ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பழுதடைந்த ரோடு ரோலர் ஒன்று பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஏலம்விட்டு அதை விற்பனை செய்ய வேண்டிய அதிகாரிகள், மெத்தனமாக அப்படியே போட்டுவைத்திருந்திருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக சில நாள்கள் அலுவலகத்துக்கு யாரும் வரவில்லை. திரும்ப வந்து பார்த்தபோது, ரோடு ரோலரைக் காணவில்லை. ஒன்றியத்தின் அரசியல் பிரமுகர் முதல் அலுவலக ஊழியர்கள்வரை விசாரித்தும் பலன் இல்லை. இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குச் சென்றவுடன், ``ரோடு ரோலர் எங்க இருக்குதுன்னு எனக்குத் தெரியும். இன்னும் 24 மணி நேரத்துல ரோடு ரோலர் வரலைன்னா என் நடவடிக்கையே வேற மாதிரி இருக்கும்’’ என்று அவர் கர்ஜிக்க, அன்று இருட்டியதும் சில மணி நேரங்களிலேயே சத்தமில்லாமல் வந்து சேர்ந்ததாம் ரோடு ரோலர்.

டவுசரைக் கிழிச்சாதான் வரும்போல ரோடு ரோலர்!

தி.மு.க பிரமுகருக்கு டெண்டர்...
கொந்தளிக்கும் ஆளுந்தரப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய தி.மு.க பிரமுகர் ஒருவர் மாவட்ட அமைச்சருடன் நெருக்கமாக இருக்கிறாராம். கடந்த சில ஆண்டுகளாக சின்னச் சின்ன ஒப்பந்தப் பணிகளை மட்டுமே எடுத்துவந்த அந்த பிரமுகருக்கு, தற்போது திடீரென 18 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாளச் சாக்கடை ஒப்பந்தம் பரிசாகக் கைமாறியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆளும்கட்சி ஒப்பந்ததாரர்கள் தரப்பினர், ``மேலிடத்தை கவனிக்க வேண்டியவிதத்துல கவனிச்சிட்டாரு... நாங்க கவனிக்கலை. அதான் டெண்டர் எதிர் முகாமுக்கு போயிடுச்சு. இப்படியே போச்சுன்னா, கட்சிக்காரன் ஒருத்தனும் வேலை பார்க்க மாட்டான்’’ என்று புலம்புகிறார்கள்.

கட்சியா... கரன்ஸியா!?

நில மோசடி விவகாரம்
தோப்பு அடித்த அந்தர் பல்டி

அண்மையில் பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், ஈரோடு ஆட்சியரைச் சந்தித்துப் புகார் ஒன்றைத் தந்திருக்கிறார். அதில், `பெருந்துறையில் பட்டியல் சமூகத்தினருக்கு அரசு வழங்கிய பட்டா நிலங்களை சிலர் சட்டத்துக்குப் புறம்பாக வாங்கி மோசடி செய்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இந்த மோசடியில் ஈடுபட்டதே தோப்புக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கூறப்படும் அ.தி.மு.க பிரமுகர்களான சேனாதிபதி, சுப்பிரமணியம் ஆகிய இருவர்தான். கடந்த 2018-ம் ஆண்டில் அம்பலமான இந்த விவகாரத்தில் மேற்கண்ட இருவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது.

`தோப்பு' வெங்கடாச்சலம்
`தோப்பு' வெங்கடாச்சலம்

ஆனால், இதையெல்லாம் புகாரில் மறைத்துவிட்டார் தோப்பு. விசாரித்தால், `எல்லாம் தேர்தல் கணக்குதான்’ என்று கண்சிமிட்டுகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியில் காலில் விழுந்து கோரிக்கைகளை வைத்திருக்கிறார் தோப்பு. இப்படியான சூழலில், நில மோசடி குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் இருவருக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதைக் காட்டிக்கொள்வதற்காக இப்படியொரு ஸ்டண்ட் அடித்திருக்கிறாராம். தோப்பு...

தோழமைக்கே வெச்சிட்டாரப்பா ஆப்பு!

``என்கிட்டயே மாமூலா..?’’
கொந்தளித்த ஆருண்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் தேனி முன்னாள் எம்.பி ஜே.எம்.ஆருணுக்குச் சொந்தமாக மீன் மார்க்கெட் ஒன்று இருக்கிறது. இதைக் குறிவைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம்வரும் பா.ஜ.க பிரமுகர் ஒருவர், ``மாதம் இருபதாயிரம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும்’’ என்று ஆருண் தரப்பை அணுகியிருக்கிறார்.

வெலவெலத்த உதயநிதி... பன்னீரை புறக்கணித்த மினிஸ்டர்...! கழுகார் அப்டேட்ஸ்

``என்கிட்டயே மாமூலா?’’ என்று கொந்தளித்த ஆருண், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகனின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு சென்றிருக்கிறார். முருகன் நிலைமையை சுமுகமாகப் பேசி முடித்துவிட்டதாகத் தகவல்!

கட்சியில் சேரும் ரெளடிகளுக்கும் உண்டா துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!?

தி.மு.க முகாம் தாவும் செங்கோட்டையனின் அண்ணன் மகன்!!

பள்ளிக்கல்வித் துறையில் நிலவும் குழப்பங்களையே சமாளிக்க முடியாமல் திணறும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, குடும்பப் பஞ்சாயத்து வேறு பெரும் குடைச்சலைக் கொடுத்திருக்கிறது.

செங்கோட்டையனின் உடன் பிறந்த அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம், தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும், அகில இந்திய மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளராகவும் இருக்கிறார். மருந்து விற்பனைதான் மெயின் பிசினஸ் என்றாலும், செங்கோட்டையனின் அரசியலுக்கும் உடனிருந்து உதவி வந்திருக்கிறார். கூவத்தூர் ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, அதன் பாதுகாப்புப் பணிகள் முழுவதையும் இந்த செல்வம்தான் மேற்கொண்டிருக்கிறார்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

செங்கோட்டையனுடன் சமீபத்தில் ஏதோ பிணக்கு ஏற்படவே, அவரிடமிருந்து விலகியிருந்த செல்வம், தி.மு.க-வில் இணைய தூதுவிட்டிருக்கிறார். சென்னையில் வைத்து ரகசிய சந்திப்புகளையும் நடத்தியிருக்கிறார். விரைவில் இணைப்பு விழா நடத்த அறிவாலயத்தில் வேலைகள் நடந்துவருகின்றன.

இந்தி ஆதரவு ஆளுநர்; மழுப்பிய அமைச்சர், ஐபேக் `ஏழரை' ரிப்போர்ட்..! டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

இதனைக் கேள்விப்பட்ட செங்கோட்டையன், ‘எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து அ.தி.மு.க-வுல முக்கியத் தலைவரா இருக்கேன். என்னோட குடும்பத்திலிருந்தே ஒருத்தர் தி.மு.க-வுக்குப் போனா நல்லாவா இருக்கும்? எல்லா பிரச்னையையும் பேசி முடிச்சிக்கலாம்’ என செல்வம் தரப்பிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் எடுபடவில்லையாம்.

செங்கோட்டையனின் கோட்டையில் ஓட்டை!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு