Published:Updated:

தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகார் அப்டேட்ஸ்

கழுகாரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு... ``ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்குச் செல்கிறேன்... வாட்ஸ்அப்பைப் பார்க்கவும்’’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கழுகாரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு... ``ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்குச் செல்கிறேன்... வாட்ஸ்அப்பைப் பார்க்கவும்’’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
`முதல்வர்’ சென்டிமென்ட்!
தொகுதி மாறும் மு.க.ஸ்டாலின்...

`வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டார்’ என்பதே தி.மு.க-வில் ஹாட் டாபிக். ``கட்சிக்காரருக்காக விட்டுக்கொடுக்கிறாரா?’’ என்று உடன்பிறப்புகளிடம் கேட்டால், `ம்ஹூம்... அவர் புள்ளை உதயநிதி ஈஸியா ஜெயிக்கணும்கிறதுக்காக கொளத்தூர் தொகுதியை அவருக்குக் கொடுத்துட்டு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில ஸ்டாலின் போட்டியிட முடிவெடுத்திருக்காங்க. மறைந்த ஜெ.அன்பழகனின் செல்வாக்கு, இஸ்லாமியர் வாக்குவங்கினு அவரும் ஈஸியா ஜெயிச்சிடலாம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க பலமா இருக்குறதால, உதயநிதியும் ஈஸியா ஜெயிச்சிடலாம்” என்றவர்கள், இன்னொரு சென்டிமென்ட்டையும் சொன்னார்கள்... ``1996, 2001, 2006 என்று கருணாநிதி மூணு தடவை ஹாட்ரிக் அடிச்ச தொகுதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி. 1996, 2006 ரெண்டு தடவையும் இங்கே ஜெயிச்சுதான் கருணாநிதி முதல்வரானார். அதனால, இங்கே ஜெயிச்சா முதல்வராகிடலாம்னு சென்டிமென்ட்டா நினைக்கிறார் ஸ்டாலின். தொகுதியில வேலைகளை உடனே ஆரம்பிக்கச் சொல்லியிருக்காங்க’’ என்றார்கள்.

அப்பாவுக்கும் புள்ளைக்கும் சீட்டு... கட்சிக்காரனுக்கு வேட்டு!

`கேசரி’ பஞ்சாயத்து...
மிரட்டிய ஸ்வீட் கடை!

சென்னையைச் சேர்ந்த `கேசரி’ பிரமுகர் அவர். இனிப்பாகப் பேசியே சினிமாதுறையிலும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளிலும் `பஞ்சாயத்து’களை முடிப்பதில் வல்லவர். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், தமிழ்த் திரையுலகம் எனப் பல மட்டங்களிலும் செல்வாக்கு பெற்ற இவர், பஞ்சாயத்துக்கு வர வேண்டுமென்றால் டீலிங் கோடிகளில் இருக்க வேண்டுமாம். சென்னை பெருநகர காக்கி உயரதிகாரி ஒருவர் இவருக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறார்.

தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

இருவருக்கும் அயல்நாடுகள் வரை ஏராளமான தொடர்புகள் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் பெருநகர காக்கி மாற்றம் செய்யப்படவே, `கேசரி’யில் முந்திரி, பாதம், திராட்சை என எதுவுமே சிறப்பாக அமையவில்லையாம். பஞ்சாயத்துக்குச் செல்லும் இடங்களில் ஏகப்பட்ட தடங்கல்கள். அதனால், பெருநகரத்தின் புதிய காக்கி அதிகாரியிடம் சென்று நூல்விட்டுப் பார்த்திருக்கிறார்... அவரோ, ``நீங்கள் வெறும் கேசரிதான்... நான் பெரிய ஸ்வீட் கடை’’ என்று மிரட்டி அனுப்பினாராம்.

கேசரியை நல்லா கிண்டுங்க சார்!

டெல்டா ஆணைய உறுப்பினர் நியமனம்
`உல்டா’ ஆனது ஏனோ?!

`காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல வளர்ச்சி ஆணையக்குழுவில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நபர்களை நியமிக்காமல், விவசாயப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்’ என்று விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். `அரசியல் பிரமுகர்களை நியமிக்க மாட்டோம்’ என்று வேளாண்மைத்துறை மேலிடம் உத்தரவாதம் அளித்திருந்தது. இந்தநிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த சாமி அய்யா, காவிரி ரெங்கநாதன், சேரன் ஆகியோரைக் குழு உறுப்பினர்களாக நியமித்திருக்கிறது தமிழக அரசு.

சாமி அய்யா
சாமி அய்யா

இதில், ஒரத்தநாட்டைச் சேர்ந்த சாமி அய்யா அ.தி.மு.க-வின் தஞ்சை தெற்கு மாவட்ட விவசாய அணிச் செயலாளர். முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளர். அ.தி.மு.க நிர்வாகி ஒருவரை ஆணையக்குழுவில் நியமனம் செய்திருப்பது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. `இது தொடர்ந்தால், வரிசையாக ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களே ஆணையத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிக்கம் செலுத்துவார்கள்’ என்று குமுறுகிறார்கள் விவசாயப் பிரதிநிதிகள்.

களை பிடுங்குற இடத்துல `கரை’ வேட்டிக்கு என்ன வேலை?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ரஜினி... சசி... எடப்பாடி...
முக்கோணச் சிக்கலில் வாசன்!

சசிகலாவின் விடுதலையை முன்வைத்து அ.ம.மு.க-வினரைவிட த.மா.கா நிர்வாகிகள்தான் அதிகம் பதற்றமடைகிறார்கள். ``2016 சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவால்தான் அ.தி.மு.க கூட்டணியில் சேர முடியவில்லை. வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் மக்கள்நலக் கூட்டணியில் இணைந்தோம். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து அ.தி.மு.க-வில் மாற்றம் ஏற்பட்டால், எடப்பாடியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடும்.

தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

அதனால், அந்த அணியில் த.மா.கா நீடிக்க வாய்ப்பில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி ரஜினி கட்சி தொடங்கினால், அவருடன் நாங்கள் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதுவரை பொறுமையாக இருக்கச் சொல்லியிருக்கிறார் எங்கள் தலைவர் வாசன்” என்கிறார்கள் த.மா.கா நிர்வாகிகள். இந்தத் தகவல் போயஸ் கார்டன் தரப்புக்கும் செல்லவே... “ஹே... அவர் கட்சியில ஆளே இல்லையேப்பா!” என்று ‘குபீர்’ கமென்ட் வந்ததாம்.

வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது!

காக்கி கொடுத்த தங்கக்காசு!

தென் மாவட்டத்திலிருந்து மாற்றலாகி சென்னைக்கு வந்த காக்கி அதிகாரி ஒருவர்மீது, `சட்டத்துக்குப் புறம்பாக ஏகப்பட்ட சொத்துகளைச் சேர்த்துவிட்டார்’ என்று புகார் உண்டு. இந்த நிலையில், அந்த காக்கி அதிகாரி தனக்கு விசுவாசமான நபர்களுக்கு கடற்கரை ரிசார்ட் ஒன்றில் விடிய விடிய பார்ட்டி கொடுத்தாராம். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வி.ஐ.பி-க்கள் பலரும் பார்ட்டியில் தள்ளாடித் தீர்த்தார்களாம்.

தங்கம்
தங்கம்

அன்றிரவு அங்கேயே ரெஸ்ட்டை போட்டிருக்கிறார்கள். மறுநாள் காலை அனைவரும் கிளம்பும்போது, ஒவ்வொருவரையும் தனியே அழைத்த அதிகாரி, ஒரு கிஃப்ட் பாக்ஸ் அளித்தாராம். திறந்து பார்த்தால்... நாலைந்து பவுன் மதிப்பில் பளிச்சென்று கண்ணைப் பறித்திருக்கிறது தங்கக்காசு.

வானம் பொழியுது... கரன்ஸி குவியுது!

தூது சென்ற கரை வேட்டி...
மலையிறங்கிய சாராயக் கும்பல்!

தூத்துக்குடி, வல்லநாடு மலைப்பகுதியில் ரெளடி துரைமுத்து, காவலர் சுப்பிரமணியன் மீது வெடிகுண்டு வீசிக் கொலை செய்த சம்பவத்தின் சூடே இன்னும் ஆறவில்லை. அதற்குள் வேலூர் மாவட்டம், அல்லேரி மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சும் கும்பல் ஒன்று, போலீஸார் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. `மலை மீது சிலர் சாராயம் காய்ச்சுவதாக’ இன்ஃபார்மர் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து, அணைக்கட்டு காவல் நிலையத்திலிருந்து ஏழெட்டு போலீஸார் அல்லேரி மலையேறியிருக்கிறார்கள். அவர்கள்மீது கற்களை எறிந்தும், கட்டையால் தாக்கியும் கொடூரமாகத் தாக்கியது சாராயக் கும்பல். படுகாயமடைந்த இரு காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அல்லேரி மலை
அல்லேரி மலை

இதையடுத்து, வேலூர் எஸ்.பி தலைமையில் 150-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் அல்லேரி மலையைச் சுற்றிவளைத்தார்கள். ஆனால், மிகவும் அடர்த்தியான அந்தக் காடு ஆம்பூர், கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலம் வரை நீள்வதால் சாராயக் கும்பலைப் பிடிக்க முடியவில்லை. இப்படியாக போலீஸார் கையறுநிலையில் தவித்தபோதுதான், `ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் ஆவின் தலைவரும், வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான வேலழகன் சொன்னால்தான் அந்தக் கும்பல் இறங்கிவரும்’ என்று போலீஸாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. போலீஸார் அவரிடம் கேட்டுக்கொண்டதையடுத்து, சில மணி நேரங்களிலேயே சாராய கும்பலில் 13 பேரை சரணடையவைத்தாராம் வேலழகன்.

காக்கிகளைவிட கரை வேட்டிகளுக்குத்தான் கிரிமினல்கள் ரொம்ப நெருக்கம்போல!

``நாட்டாமை தீர்ப்பைச் சொல்லு!’’
நேருவை முற்றுகையிட்ட போடி உடன்பிறப்புகள்

சமீபத்தில் தி.மு.க கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தேனி வந்திருந்தார் கே.என்.நேரு. தனியார் ஹோட்டலில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒன்றிய அளவில் நிர்வாகிகளை அழைத்துப் பேசிய கே.என்.நேரு, போடி ஒன்றிய நிர்வாகிகளை அழைக்காமல் கிளம்ப எத்தனித்தார். அப்போது அவர் முன்பாகப் பாய்ந்த போடி ஒன்றிய நிர்வாகிகள், ``இப்படி ஒண்ணுமே கேட்காம கிளம்பினா எப்படி... போடி தொகுதியில ஒன்றியச் செயலாளர் லட்சுமணனுக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க.

தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கடந்த முறை ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அவர் போட்டியிட்டபோது, பன்னீரிடம் பணம் வாங்கிக்கொண்டு அமைதியாகிவிட்டார்’’ என்று புகார் வாசித்திருக்கிறார்கள். அதற்கு நேரு, ``சரிப்பா, என்னன்னு விசாரிச்சு முடிவெடுக்கலாம்” என்று சமாதானம் சொல்ல... ``அதெல்லாம் முடியாது... தீர்ப்பை இப்பவே சொல்லுங்க...’’ என்று கண்ணைக் கசக்க... விட்டால் போதும் என்று தப்பிவந்தாராம் நேரு.

நேருவுக்குத் தேவை... நேர்கொண்ட பார்வை!

ஏட்டிக்குப் போட்டி அதிகாரி
கொந்தளிக்குது ஊட்டி!

ஊட்டியிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரியிலுள்ள நேரு பூங்கா, தேயிலைப் பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்பட்டுவருகின்றன. நுழைவுக் கட்டணம் மூலம் பெரும் வருவாயை ஈட்டித்தரும் இங்கெல்லாம் அந்தந்தப் பகுதிகளிலுள்ள படுகர்கள், ஆதிதிராவிடர்கள், ஆதி கர்நாடகா, ஆதி மலையாளி மற்றும் பழங்குடிகள் ஆகிய சமூகத்தினருக்கு தற்காலிக பணி நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இணைப் பொறுப்பிலிருப்பவர், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இதர பிரிவினரெல்லாம் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

தோட்டத்துல களையைப் பிடுங்கலாமே ஆபீஸர்ஸ்!

உதவியாளர் பணிக்கு ரூ.10 லட்சம்
வாணிபக் கழக வசூல் வேட்டை!

தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தில் உதவியாளர்கள் நூறு பேரை வெளியிலிருந்து நேரடியாக நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. இதனால், கடந்த பல ஆண்டுகளாக சீனியாரிட்டி அடிப்படையில் இந்தப் பதவிக்காகக் காத்திருக்கும் இளநிலை உதவியாளர்கள் கடும் விரக்தியடைந்திருக்கிறார்கள்.

இந்த நியமனத்துக்கு எந்தத் தேர்வும் கிடையாது என்பதால், கழகத்தின் உயரதிகாரி ஒருவரும் ஆளும்கட்சிப் புள்ளி ஒருவரும் ஒரு பணியிடத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் என வசூல் வேட்டையில் தூள்கிளப்புகிறார்களாம்!

`சதா'... ஊழல் நினைப்பாவே இருந்தா இப்படித்தான்!

72 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர்
கட்சி சொல்லும் காமெடிக் கணக்கு!

ஆன்லைனில் கட்சி உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது தி.மு.கழகம். ஐபேக் ஐடியாவின்படி `எல்லோரும் நம்முடன்’ என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், `72 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள்’ என்கிறது கட்சித் தலைமை. ஆனால், மாவட்டக் கழக நிர்வாகிகளோ, ``கடந்த பல ஆண்டுகளாக மாவட்டக் கழகங்களில் பொறுப்பிலிருப்பவர்களிடம், ஆயிரக்கணக்கான உறுப்பினர் கார்டுகள் விநியோகிக்கப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன.

தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்!
Britto I

`உறுப்பினர்கள் கார்டு கொடுத்து புதிய உறுப்பினர்களைச் சேர்த்தால், உட்கட்சித் தேர்தலில் நமக்கே போட்டியாக வந்துவிடுவார்கள்’ என்கிற உள்குத்து காரணமாக கட்சிப் பொறுப்பிலிருப்பவர்கள், கட்சி வேலை பார்ப்பவர்களுக்கேகூட உறுப்பினர் அட்டை தருவதில்லை. இப்படி தமிழகம் முழுவதும் தி.மு.க-விலேயே லட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். இப்போது அவர்கள்தான் உறுப்பினர்களாக கட்சியில் சேர்ந்துவருகிறார்கள். புதிதாக யாரும் கட்சியில் சேர்வதில்லை. கட்சித் தலைமை சொல்வதெல்லாம் காமெடி கணக்கு” என்று போட்டு உடைக்கிறார்கள். 72 மணி நேரத்துல ஒரு லட்சம் பேர்... அடேங்கப்பா இதே வேகத்துல போனா எலெக்‌ஷனுக்குள்ள 130 கோடிப் பேரையும் கட்சியில சேர்த்துடலாமே பி.கே சார்!