Published:Updated:

மிஸ்டர் கழுகு: வேஷம் போடும் உறவுகள்... விரக்தியில் சசிகலா!

தொடரும் துரோகங்கள்... சொத்துகளுக்குக் குறி

பிரீமியம் ஸ்டோரி

தொலைக்காட்சியில், ‘‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்... அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்’’ என்று பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் உள்ளே நுழைந்த கழுகார், ‘‘பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலும் இந்தப் பாட்டுதான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், பாடுவது சுசிலா இல்லை... சசிகலா’’ என்று இன்ட்ரோ கொடுக்க, ‘‘புரிகிறது’’ என்றோம்.

மிஸ்டர் கழுகு: வேஷம் போடும் உறவுகள்... விரக்தியில் சசிகலா!

‘‘அடுத்தடுத்து துரோகங்களைச் சந்தித்து நொந்துபோயிருக்கிறாராம் சசி. ஓ.பி.எஸ்-ஸை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்துவைத்து, அவரை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தது வரை சசிகலாவின் பங்கு என்ன என்பது கட்சிக்காரர்கள் அறிந்ததுதான். அவரேதான் ஜெயலலிதா இறந்த பின்பு, சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தத்தை நடத்தினார். ஓ.பி.எஸ் வேண்டாம் என்று முடிவு எடுத்து எடப்பாடியை முதல்வராக்கிவிட்டுச் சிறைக்குப் போனார் சசிகலா. உள்ளே போன பின்பு வெளியே நடந்ததுதான் உமக்கும் தெரியுமே!’’

தினகரன்
தினகரன்

‘‘அதுதான் ஊருக்கே தெரியுமே... இப்போது ஏனிந்த விரக்தி?’’

‘‘இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கும் பலரும் சசிகலா குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவரின் பரிந்துரையால் இந்த இடத்துக்கு வந்தவர்கள்தான். ராவணன் தயவின்றி கொங்கு மண்டலத்தில் பலருக்கு எம்.எல்.ஏ சீட்டே கிடைத்திருக்காது. தினகரன், வெங்கடேஷ், எம்.நடராஜன் என யாரையாவது ஒருவரைப் பிடித்தால் மட்டும்தான் சீட் வாங்க முடியும்; ஜெயித்தாலும் அமைச்சராக முடியும் என்ற நிலைதான் இருந்தது. இப்போது அந்த அமைச்சர்கள் இருக்கும் ரேஞ்சே வேறு... அவர்கள் எல்லோருமே சசிகலா குடும்பத்தைக் கைகழுவிவிட்டார்களாம்!’’

‘‘தெளிவாகச் சொல்லும்!’’

‘‘சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இப்போதுள்ள அமைச்சர்களுடன் ரகசியத் தொடர்பில் இருக்கிறார்கள். காரியங்களைச் சாதிக்கிறார்கள். பலவிதங்களிலும் பலன் அடைந்துவருகிறார்கள். தங்களைப் பற்றிய ரகசியங்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காகவே இவர்களுக்கு அந்த அமைச்சர்களும் சலுகை காட்டு கிறார்களாம். ஆனால், சசிகலாவைப் பற்றி இந்த இரு தரப்பினருமே கவலைப்படுவதேயில்லை என்கிறார்கள்!’’

‘‘சசிகலா, இளவரசியைத்தான் அவரின் குடும்பத்தினர் பலரும் போய்ப் பார்த்து வருகிறார்களே?’’

‘‘பார்க்கப் போகிறார்கள்... ஆனால், எத்தனை பேரை, எத்தனை நிமிடங்கள் அவர் பார்த்துப் பேசுகிறார் என்பது யாருக்கும் தெரியாது. சில உறவுகளைப் பார்ப்பதையே தவிர்த்து விடுகிறாராம் அவர். சொத்துக்குவிப்பு வழக்கில் பட்டியலிடப்பட்ட 306 சொத்துகளில் பெரும்பாலானவை சசிகலா, இளவரசி பெயர்களில் இருக்கின்றன. அவற்றைக் குறிவைத்து ‘அதை எனக்கு எழுதிக்கொடுங்கள், இதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்று குடும்பத்தினர் பலரும் சசிகலாவை நச்சரிக்கிறார்களாம். இதில்தான் ரொம்பவே வெறுத்துப்போயிருக்கிறாராம் சசிகலா.’’

உதயநிதி, ஸ்டாலின்
உதயநிதி, ஸ்டாலின்

‘‘அது மட்டும்தான் காரணமா?’’

‘‘இவ்வளவு பெரிய அடையாளம் தந்த உடன்பிறவா சகோதரி ஜெயலலிதாவும் மறைந்து விட்டார். கணவர் நடராஜனும் இறந்துவிட்டார், குழந்தைகளும் இல்லை. இத்தனை சொத்துகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டாராம். அதனால், ‘எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். நானும் அக்காவும் சேர்ந்து வாழ்ந்த இடங்களை எனக்கு விட்டுவிடுங்கள். இருக்கும்வரை அவரின் நினைவுகளுடன் நான் அங்கே வாழ்ந்துகொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டாராம்.’’

‘‘சேர்ந்து வாழ்ந்த இடங்கள் என்றால்?’’

‘‘வேதா இல்லத்தைச் சொந்தம் கொண்டாட முடியாது. போயஸ் கார்டனில் வேதா இல்லத்துக்கு எதிரே காவலர்கள் தங்கியிருந்த இடமும் சசிகலா பெயரில்தான் இருக்கிறது. அங்கே சசிகலாவுக்காகப் புதிதாக வீடு கட்டப் போகிறார்களாம். விடுதலையானதும் அங்கேதான் அவர் குடியேறப் போகிறார் என்கிறார்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘விடுதலையாகி வந்ததும் அரசியலில் ஈடுபடுவாரா?’’

‘‘அதை முடிவுசெய்யும் மனநிலையில் இப்போது அவர் இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், அவர் சிறையைவிட்டு வெளியே வருவதற்குள் சில சொத்துகளைக் கைப்பற்றிவிட வேண்டுமென்று சிலர் ரொம்பவே மெனக்கெடுகிறார்களாம். சொத்துகளுக்குக் குறிவைக்கும் சொந்தங்கள், தினகரனின் வீழ்ச்சி, உறவுகளின் இரட்டை வேடம் எனப் பல காரணங்களால் ரொம்பவே மனம் நொந்து போயிருக்கிறாராம் சசிகலா.’’

‘‘எடப்பாடி தரப்பு மறைமுகமாக சசிகலாவுடன் இணக்கமாக இருப்பதாக வந்த தகவல்கள் எல்லாம் உண்மை இல்லையா?’’

‘‘சசிகலா வெளியில் வந்தால்தான் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். குறிப்பாக, கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளையில் என்னென்ன கொள்ளையடிக்கப்பட்டன, அங்கே என்னென்ன இருந்தன என்பதெல்லாம் அவரும் இளவரசியும் மட்டுமே அறிந்த ரகசியம். இதனால், அவரின் விடுதலைக்குப் பின்பு அ.தி.மு.க-வுக்குள் அடுத்த பூகம்பம் வெடிக்கலாம்!’’

‘‘தினகரன் கூடாரம் காலியாகிவரும் நிலையில், அவர் பெங்களூருவுக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறாரே?’’

‘‘சசிகலாவின் உத்தரவின் பேரில்தான் அனைத்தையும் செய்வதாக தினகரன் சொல்லிவந்தாலும் சசிகலாவோ தினகரன்மீது கடும் அதிருப்தியில்தான் இருந்திருக்கிறார் என்கிறார்கள். குறிப்பாக, தங்க தமிழ்ச்செல்வனை வெளியே விட்டதில் சசிகலாவுக்கு ஏக வருத்தமாம். தன்னைச் சந்திக்க வரும் நம்பிக்கையான உறவுகளிடம் இதைப் பற்றி வெளிப்படையாகவே அவர் புலம்பி வருகிறாராம்.’’

‘‘நீர் சொல்வது புதுத் தகவலாக இருக்கிறதே?’’

‘‘ஆமாம். சசிகலாவை தினகரன் மட்டுமே சந்திக்கிறார் என்ற செய்தி உண்மையல்ல. இளவரசி குடும்பத்தினரும் நடராஜன் உறவுகள் சிலரும் சசிகலாவை அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள். தினகரனிடம் சொல்ல முடியாத தன் வருத்தங்களைத் தனக்கு வேண்டிய சில உறவுகளிடமும் விசுவாசமான அலுவலர்களிடமும் பகிர்ந்துவருகிறாராம் சசிகலா. சமீபத்தில் தினகரனின் நடவடிக்கைகள் பற்றி தன் கடுமையான அதிருப்தியையும் பலரிடமும் வெளிப்படையாகவே பகிர்ந்திருக்கிறாராம்.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம், ‘தினகரன் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. எனக்கு எந்தத் தகவலும் முழுமையாக வந்து சேருவதில்லை’ என்றும் வருத்தப்பட்டாராம். ‘யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று புரியவில்லை’ என்கிற மனப்போராட்டம் சசிகலாவிடம் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘ஆனால், எல்லாமே சசிகலாவின் உத்தரவின் பேரிலேதான் நடப்பதாக தினகரன் சொல்லிக் கொண்டிருக்கிறாரே?’’

மிஸ்டர் கழுகு: வேஷம் போடும் உறவுகள்... விரக்தியில் சசிகலா!

‘‘சசிகலா தரப்பில் வேறு யாராவது ஒருவர்தான் இதற்குச் சரியான பதில் கொடுக்க வேண்டும். சசிகலா குடும்பத்தில் இப்போது தினகரனுக்கு எதிராகப் பலரும் அணிவகுத்து வருகிறார்களாம். அவர்கள் சசிகலாவிடம், ‘நீண்ட அறிக்கை ஒன்றை நீங்கள் வெளியிடுங்கள். எல்லாவற்றுக்கும் அது முற்றுப்புள்ளியாக அமைந்துவிடும்’ என்று சொல்லியிருக்கிறார்களாம். ஆனால், நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யும் நேரத்தில், தேவையில்லாமல் எதையும் செய்யவேண்டாம் என்று நினைக்கிறார். விரைவில் தினகரன் - சசிகலா சந்திப்பில் உள்ள மர்மத்துக்கு விடை கிடைத்துவிடும் என்கிறார்கள் சசிகலா தரப்புக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘நீர் சொன்னதுபோல உதயநிதிக்கு பதவி கொடுத்துவிட்டார்களே!’’

‘‘கடந்த மாதமே அவர் பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால், ஜோதிடர் குறித்துக்கொடுத்த நாள், நேரத்தின் அடிப்படையில் வளர்பிறை நாளில் பதவியேற்பு நடந்திருக்கிறது. அதுவும் ராகுகாலம் முடிந்து அடுத்த ஐந்து நிமிடங்களில் தி.மு.க தலைமையிலிருந்து இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. உதயநிதியை நியமித்ததும் ஒருபுறத்தில் தி.மு.க-வினர் கொண்டாடுகிறார்கள், மறுபுறத்தில் சமூக ஊடகத்தில் வறுத்தெடுக்கிறார்கள்.’’

‘‘பேப்பரில் அறிவிப்பு கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டதே தி.மு.க தலைமை?’’

‘‘ஜூலை 3-ம் தேதியே, ‘நாளை அறிவிப்பு இருக்கப்போகிறது’ என்று முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு தகவல் கொடுக்கப் பட்டுவிட்டதாம். பலரும் சென்னை அறிவாலயத்தில் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று சென்னை புறப்பட்டு வந்துவிட்டனர். விமரிசையாக அறிவிப்பு விழாவை நடத்தினால், விமர்சனமாகிவிடுமென்று தான் அறிவிப்பை மட்டும் கொடுத்திருக் கிறார்களாம்.’’

‘‘இந்த நியமனத்துக்குப் பொதுக்குழு ஒப்புதல் தேவையா?’’

‘‘பொதுச்செயலாளர் ஒப்புதல் பெற்றால் போதும். கட்சியின் சட்டவிதியின்படியே இந்த நியமனம் நடந்திருக்கிறது என்று அறிவிக்கப் பட்டுள்ளதையும் கவனியும். பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்டவற்றிலும் கலந்துகொள்ளும் தகுதியைப்பெற்றுவிட்டார் உதயநிதி.’’

‘‘வேலூர் தேர்தலை ஒரு வழியாய் அறிவித்து விட்டார்கள். கதிர் ஆனந்த் நிற்பதில் பிரச்னை ஒன்றுமில்லையா?’’

‘‘எதுவுமிருக்காது. மறுபடியும் அங்கே விளையாடப் போகிறது துட்டு!’’ என்ற கழுகார் சிறகு விரித்தார்.

“பணியிட மாறுதலில் ஒளிவுமறைவு இல்லை!”

டந்த 30–06–2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளியான ‘வனச்சரகருக்கு 10 லட்சம் ரூபாய், வனப்பாதுகாவலருக்கு 30 லட்சம் ரூபாய்’ என்ற தலைப்பிட்ட கட்டுரைக்குத் தன் தரப்பு விளக்கத்தைத் தெரிவித்துள்ளார் தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன். அதில், ‘வனத்துறையில், பணியிட மாறுதல்கள் உரிய நடைமுறையின்படியே ஒளிவு மறைவு இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. மலையிடப் பாதுகாப்புக் குழுமத்தில் அனுமதி பெறுவதில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறுவதில்லை. இதில் சட்டத்துக்கு உட்பட்டு, குழுமத்தில் இடம்பெறும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளிடமிருந்து அறிக்கை பெற்ற பிறகே அனுமதி வழங்கப்படுவதோ அல்லது மறுக்கப்படுவதோ நடைபெறும்’ என்று கூறியுள்ள அமைச்சர், தன் துறையின் சாதனைகளாக சில விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அதில், ‘களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில், 8,300 ஏக்கர் பரப்பளவுள்ள வனநிலத்தின் குத்தகை தொடர்பான வழக்கில் சட்டப்போராட்டம் நடத்தி குத்தகை ரத்து செய்யப்பட்டுக் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு மூலமாக யாருடைய தலையீடும் இல்லாமல் 1,178 வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலமாக ரூ.63.70 கோடிக்கு செம்மரம் விற்கப்பட்டுள்ளது. சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 30 ஏக்கர் வன நிலம் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. தற்காலிக வனக்காவலர்களுக்கான ஊதியம் ரூ.6,750-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அவர்களை நிரந்தரப் பணியாளர்கள் ஆக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

வனமும் வன ஊழியர்களின் நலனும் காக்கப்பட வேண்டுமென்பதே நம் விருப்பமும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு