Election bannerElection banner
Published:Updated:

கடுகடு ரஜினி; கொதித்த தளவாய்; உற்சாக தம்பிதுரை; உறுமிய சூரப்புலி! - கழுகார் அப்டேட்ஸ்!

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மெசேஞ்சர் டினுங் டினுங் என்று சிணுங்கியது. மிஸ்டர் கழுகார்தான் இந்தமுறை ஃபேஸ்புக் வழியாக வந்திருக்கிறார். அவர் கொட்டிய தகவல்கள் இதோ...

காக்கியின் வி.ஆர்.எஸ் விசாரணை... மாநகராட்சி ஆக்கிரமிப்பு

சமீபத்தில் வி.ஆர்.எஸ் கொடுத்திருக்கிறார் சென்னையில் காவல்துறை அதிகாரி ஒருவர். ஆனால், அவருக்கு இன்னும் சில மாதங்கள்வரை பதவிக்காலம் இருக்கிறது. வாக்கிடாக்கி ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் அவரது பிரிவு அடிபடுவதாலும், எதிர்க்கட்சியான தி.மு.க அந்த விவகாரங்களை அடிக்கடி நோண்டுவதாலும், ‘அவர் ஏன் முன்கூட்டியே வி.ஆர்.எஸ் கொடுக்கிறார்?’ என்று விசாரிக்க உத்தரவிட்டதாம் ஆட்சித் தலைமை. ‘காவல் துறையில் உயர் அதிகாரிகள் பலரும் பணி ஓய்வு பெற்றவுடனே பிரபல தனியார் நிறுவனங்களில் ஆலோசகர் பதவிகளுக்குப் பணி நியமனம் செய்ய கடும் போட்டி நிலவுகிறது. பணி ஓய்வுபெற்ற பிறகு வேலைக்குச் சேர்ந்தால் ஒரு தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. அதுவே பணியிலிருக்கும்போதே ராஜினாமா செய்துவிட்டு, பணியில் சேர்ந்தால் அதைவிட கூடுதலாக பெரும்தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த டிமாண்டைக் கூட்டவே இப்போது அந்த அதிகாரி வி.ஆர்.எஸ் கொடுத்திருக்கிறார்’ என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்களாம் உளவுத்துறையினர். இந்த விசாரணையில், அந்த அதிகாரி பெசன்ட் நகரில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான காஸ்ட்லியான மூன்று இடங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் தகவல் கூடுதலாக வந்துவிழுந்திருக்கிறதாம். விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்கின்றன காக்கி வட்டாரங்கள்!

ஊரே பார்த்த ரஜினியின் லைவ்... மா.செ-க்கள் பார்க்காத சோகம்!

ரஜினி பிரஸ்மீட்
ரஜினி பிரஸ்மீட்

மார்ச் 12-ம் தேதியன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி பேசியதை ஊரே லைவ்வாகப் பார்த்தது. ஆனால், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் அவரது பேச்சை லைவ்வாகப் பார்க்க முடியவில்லை என்பதுதான் சோகம். ஏனென்றால், ரஜினி லீலா பேலஸுக்குக் கிளம்பிய பிறகு, போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஓர் அறையில் அமரவைக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்த மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அந்த அறையில் டி.வி-யும் இல்லை. ரஜினி பேசத் தொடங்கிவிட்டார் என்று தகவல் வந்ததும், அவசர அவசரமாக ஒரு டி.வி-யைக் கொண்டுவந்து வைத்தார் மாநில தலைமை நிர்வாகியான சுதாகர். அந்த டி.வி-யும் வேலை செய்யவில்லை. ஒருவழியாக அதைச் சரிசெய்து ஆன் செய்தால், ‘லைவ்’ நிகழ்ச்சியில் ரஜினி ‘வணக்கம்’ வைத்துவிட்டுக் கிளம்பிக்கொண்டிருந்தார். தலைவர் என்ன சொன்னாரோ ஏதோ சொன்னாரோ என்று குழம்பிப்போனார்கள் மா.செ-க்கள்!

“குறுக்காலப் பேசாத... கெட்ட பழக்கம்!”

இதுவும் ரஜினி மேட்டர்தான். மார்ச் 5-ம் தேதி ரஜினி தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார் அல்லவா. அந்தக் கூட்டத்தில் ரஜினி பேசும்போதே தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரான சினோரோ அசோக் என்பவர் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசியிருக்கிறார். பிறகு மார்ச் 12-ம் தேதி காலையில் மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினார். அப்போதும் அசோக் குறுக்கிட்டுப் பேசக் கடுப்பாகிவிட்டாராம் ரஜினி. “இதென்ன கெட்ட பழக்கம். உங்களுக்கு நேரம் கொடுக்கும்போது பேசுங்கள்” என்று அவருக்குக் கண்டிப்புடன் அட்வைஸ் செய்தாராம் ரஜினி.

சூரப்புலியின் உறுமல்!

சமீபத்தில் தமிழக உயர்க்கல்வித்துறை செயலாளராகப் பொறுப்பேற்றார் அபூர்வா ஐ.ஏ.எஸ். தமிழகத்திலிருக்கும் 13 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களில் 12 பேர் மரியாதை நிமித்தமாக அவரைச் சென்று சந்தித்திருக்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும், ``அவரை நான் சென்று பார்ப்பதா? வேண்டும் என்றால் என்னை வந்து அவர் பார்க்கட்டும்” என்று சூரப்புலியாக உறுமியிருக்கிறார். விஷயம் ‘வேந்தர்’ வரை சென்று மற்றொரு அதிகாரி மூலம் ‘சுமுகமாகச் செல்லுங்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டதாம். அப்போதும் முறுக்கிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாராம் அந்தத் துணை வேந்தர். முட்டல் மோதல் இன்னும் அதிகமாகலாம் என்கின்றன பல்கலைக்கழக வட்டாரங்கள்.

அண்ணனுக்கு ஒரு பச்சைத்துண்டு பார்சேல்ல்ல்ல்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொங்கு மண்டலத்தில் தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் டெல்டாவில் முதல்வரின் பாராட்டு விழாவுக்குச் சேர்ந்த கூட்டத்தைப் பார்த்து நெகிழ்ந்துவிட்டாராம் எடப்பாடி. இதைத் தொடர்ந்து, ‘இனிமேல் அண்ணனுக்கு அடிக்கடி பச்சைத் துண்டு போர்த்துவது, டெல்டாவுக்கு விசிட் அடிக்க வைப்பது, டெல்டா மண்டலத்தையும் கைப்பற்றுவது’ என்று முடிவு செய்திருக்கிறதாம் எடப்பாடியின் ஆதரவாளர்கள் குரூப்!

மோதிக்கொள்ளும் தளவாய் - ஜான் தங்கம்!

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளராக இருந்ததால் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவி ஜான் தங்கத்துக்குக் கிடைத்தது. இப்போது ஜான் தங்கம், தளவாய் சுந்தரம் இடையே முட்டல் மோதல் அதிகரித்துவிட்டது என்கிறார்கள் ரத்ததின் ரத்தங்கள். ‘ஜான் தங்கத்தைச் செயல்பட விடவில்லை. தளவாய் சுந்தரம் தனி ஆவர்த்தனம் செய்கிறார்’ எனச் சமூக வலைதளங்களில் சிலர் செய்திகளைப் பரப்பினர். இதனால், கோபமான தளவாய் சுந்தரம் ஜான் தங்கத்தை வறுத்து எடுத்துவிட்டாராம். விளவங்கோடு தொகுதியின்மீது ஜான் தங்கத்துக்கு ஒரு கண் உண்டு. ஏற்கெனவே அங்கு போட்டியிட்ட நாஞ்சில் டொமினிக்கின், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் பதவியைப் பறித்திருந்தார் ஜான் தங்கம். உடனே தளவாய் சுந்தரம், நாஞ்சில் டொமினிக்குக்கு இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பதவி வாங்கிக் கொடுத்தார். அப்போதிருந்தே இருவருக்கும் முட்டல் மோதல்கள் தொடங்கிவிட்டன என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

ஈரோடு தி.மு.க-வில் உள்ளாட்சி துரோகம்!

‘கட்சியில் ஆக்டிவாகச் செயல்படுவதில்லை. அமைச்சர் கருப்பணனோடு டீலிங்கில் இருக்கிறார்கள்’ என்று ஈரோடு தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் தரப்பினர்மீது உடன்பிறப்புகள் புகார் வாசிக்கின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் யூனியனில் தி.மு.க கூட்டணி ஏழு கவுன்சிலர்களையும், அ.தி.மு.க கூட்டணி மூன்று கவுன்சிலர்களையும் பெற்றது. இரண்டு முறை ரத்து செய்யப்பட்ட யூனியன் தலைவருக்கான தேர்தல் மூன்றாவது முறையாக மார்ச் 4-ம் தேதி நடைபெற்றது. அதில் மூன்று கவுன்சிலர்களை மட்டுமே வைத்திருந்த அ.தி.மு.க, ஆறு ஓட்டுகளைப் பெற்று யூனியன் தலைவர் பதவியைப் பிடித்து அதிரடி காட்டியது.

ரஜினி சொன்ன பாணியில் கட்சிக்கு கருணாநிதி, ஆட்சிக்கு எம்.ஜி.ஆர்...1979-ல் நடந்தது என்ன?

இந்த வெற்றிக் கணக்கைக் கூட்டிக்கழித்துப் பார்த்தபோது தி.மு.க கவுன்சிலர்கள் இருவர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் என மூன்று பேர் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டது தெரியவந்திருக்கிறது. “தி.மு.க கவுன்சிலர்களை வளைக்கப்போகிறார்கள் என்பது நல்லசிவம் தரப்பினருக்கு ஏற்கெனவே தெரியும்’’ எனக் குமுறித் தள்ளுகின்றனர் கட்சியினர்.

“நல்லசிவத்தை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு என்.கே.பி.பி.ராஜாவைக் களமிறக்குங்கள்’’ எனச் சொல்லி அறிவாலயம் நோக்கிப் படையெடுத்திருக்கிறது ஒரு தரப்பு. நல்லசிவம் தரப்பினரோ, “உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஒரு ஆள்கிட்டயாவது டீ வாங்கிக் குடிச்சோம்னு சொல்லச் சொல்லுங்க, அரசியலை விட்டே போயிடுறோம்” என்று பொங்குகிறார்களாம்!

தம்பிதுரை ரிட்டன்ஸ்!

 தம்பிதுரை
தம்பிதுரை

நாடாளுமன்றத் தேர்தலில் கரூரில் தொகுதியில் தோல்வியைத் தழுவினார் தம்பிதுரை. இதனால், கரூர் பக்கம் கால் பதிக்காமல் ஒதுங்கியிருந்தார். கரூர் மாவட்ட நிகழ்ச்சி அழைப்பிதழ்களில் தம்பிதுரையின் பெயர் அச்சிடப்பட்டபோதும் அவர் கரூருக்கு வருகை தரவில்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் கரூரில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை. கிருஷ்ணகிரியிலேயே இருந்தார். அங்கே தம்பிதுரையை அரசியல் செய்யவிடாமல் கே.பி.முனுசாமி தடை போட, அங்கேயும் தலைகாட்டாமல் ஒதுங்கியிருந்தாராம். இப்போது ராஜ்யசபா எம்.பி வேட்பாளர் ஆக்கப்பட்டதால் கரூருக்கு ரீ என்ட்ரி கொடுக்க முடிவு செய்திருக்கிறார். “இந்தமுறையாவது மக்களுக்கு ஏதாச்சும் நல்லது செய்யுங்க” என்கிறார்கள் கரூர்வாசிகள்!

`பா.ஜ.கவின் தந்திரமா... பழிவாங்கும் படலமா?' - ஜோதிர் ஆதித்ய சிந்தியா முடிவின் பின்னணி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு