Published:Updated:

`நான் தெளிவா இருக்கேன்; ஆண்டவன் பாத்துப்பான்!’ – ரஜினி - கழுகார் அப்டேட்ஸ்!

Mobile @ Kazhugu
Mobile @ Kazhugu

ஃபேஸ்புக் இணைப்பில் வந்த கழுகார், பிட் பிட்டாகச் செய்திகளைத் தட்டிவிட ஆரம்பித்தார்.

`நம்பர் 2’ கலட்டா!

`படையப்பா’ படத்தில், `மாப்பிள்ளை இவர்தான்; ஆனா, அவர் போட்ருக்கிற சட்டை என்னோடது!’ என்று சொல்லிச் சொல்லியே, செந்திலை டிரஸ்ஸைக் கிழித்துக்கொண்டு ஓட வைப்பாரே ரஜினி. அதேபோல ஒரு காட்சிதான் ஆளுங்கட்சியில் அரங்கேறிக்கொண்டிருக்கிறதாம்.

டயலாக் மட்டும், `ஒருங்கிணைப்பாளர் அவர்தான். ஆனால், அதிகாரம் எனக்குத்தான்!’ என்று மாறியிருக்கிறதாம். ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகள் இணையும்போது, `ஆட்சிக்கு எடப்பாடி, கட்சிக்கு பன்னீர்செல்வம்’ என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படிதான் ஆட்சியில் நம்பர் 2-வாக பன்னீர்செல்வம் இருக்கிறார். கட்சியில் நம்பர் 2-வாக எடப்பாடி இருக்கிறார். அங்கே இணை ஒருங்கிணைப்பாளர். இங்கே துணை முதல்வர். இந்தக் கணக்குப்படி பார்த்தால், கட்சியின் முடிவுகளில் பன்னீர்செல்வம்தான் ஆளுமை செலுத்த முடியும். ஆனால், அப்படி நடப்பதில்லை. லேட்டஸ்ட் விவகாரம் ஒன்றைக் கேளும்.

`எப்படித் தேர்வானார் ஜி.கே.வாசன்?' - அதிருப்தியில் தே.மு.தி.க; கொதிப்பில் ஏ.சி.எஸ்.

ஜி.கே.வாசனுக்கு ராஜ்ய பா சீட் வாங்கித் தந்ததில் பி.ஜே.பி-க்குதான் முக்கிய பங்கு உண்டு. ஜி.கே.வாசனுக்கு சீட் ஒதுக்குவது தொடர்பாக பி.ஜே.பி-யின் மேலிட தூதுவராக எடப்பாடியை வந்து பார்த்தவர் முரளிதர் ராவ். பி.ஜே.பி-யின் தமிழகப் பார்வையாளராக இருக்கும் முரளிதர் ராவ், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தைப் பார்க்காமல், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியைத்தான் பார்த்தார். அதற்குத்தான், `என்னை மதிக்க மாட்டீர்களா...’ எனப் புலம்பியிருக்கிறார் பன்னீர்செல்வம்.

மீடியேட்டர் கேம்!

தமிழக அமைச்சர்கள் பலர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வாசிக்கப்படுகின்றன. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ விசாரணைகள் சிலர் மீது ஏற்கெனவே பாய்ந்திருக்கின்றன. பலர் மீது வழக்குகள் பாயத் தயாராகிக்கொண்டிருப்பதாகச் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போதும், ஆட்சிபோன பிறகும் தங்கள் மீது நடவடிக்கைகள் எதுவும் பாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக, டெல்லி வி.ஐ.பி-க்கள் சிலருக்கு மாதந்தோறும் காணிக்கை செலுத்தப்படுகிறதாம். இதற்கு மீடியேட்டராக இருப்பவர் பிரபல உணவகத்தின் உரிமையாளராம். இரண்டு தரப்புக்கும் இடையில் பரிவர்த்தனைகளைப் பார்த்து வந்தவர், சமயம் பார்த்து ஒரு பெரும்தொகையை லவட்டிவிட்டாராம். கெடுபிடியாக ஏதாவது கேட்டால், இந்த இரண்டு தரப்பின் ரகசியத்தையும் பி.ஜே.பி தலைமைக்குப் போட்டுக்கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் திருடனுக்குத் தேள் கொட்டியது போல மத்திய, மாநில வி.ஐ.பி-க்கள் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்களாம்.

கோபம் – சமரசம்!

செந்தில் பாலாஜியின் பவர் பாலிடிக்ஸால், தி.மு.க விவசாய அணி மாநிலச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கரூர் சின்னசாமி, அ.தி.மு.க-வுக்கு தாவப்போவதாகச் செய்திகள் உலா வந்தன. இது தெரிந்து தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கரூர் சின்னசாமியை அழைத்துப் பேசியிருக்கிறார். `கட்சியில் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். அதற்கு வழிவகை செய்கிறேன்’ எனச் சின்னசாமியின் சினத்தைத் தணித்து அனுப்பி வைத்தாராம் நேரு.

அண்ணன் காட்டிய வழி!

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

* ஓ.பி.எஸ்ஸின் தம்பி ஓ.ராஜா, தேனி ஆவின் தலைவராகிவிட்டார். ஜெயலலிதா இருந்தபோது, கைலாசநாதர் கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் சிக்கிய ஓ.ராஜா, கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர், தைரியமாக அரசியலில் தலைகாட்ட ஆரம்பித்தார். இப்போது சொந்த மாவட்டத்தில் ஆவின் தலைவராகியிருக்கிறார். மதுரை ஆவின் தலைவரானதில் பிரச்னை, பலவிதமான வழக்குகள்... என நெருக்கடியில் இருந்த தம்பியிடம், யார் யாரைப் போய்ச் சந்திக்க வேண்டும், சமாதானமாகப் போக வேண்டும் என்று அண்ணன் காட்டிய வழியில்தான் இது சாத்தியமாகியிருக்கிறதாம்.

ஆண்டவன் பார்த்துப்பான்!

ரஜினி
ரஜினி

பேரனின் பிறந்தநாளுக்கு குடும்பத்துடன் வாழ்த்துப் பெறுவதற்காக ரஜினிகாந்த்தைச் சந்தித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி-யான திருநாவுக்கரசர். `ஆட்சிக்கு ஒருவர் கட்சிக்கு வேறொருவர்’ என்கிற தன்னுடைய யோசனை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருநாவுக்கரசரிடமும் இதுகுறித்து பேசினாராம் ரஜினி.

`தமிழக அரசியல் சூழலுக்கு இந்த முயற்சி சரிப்பட்டு வராது. முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்’ எனச் சொன்னாராம் திருநாவுக்கரசர். `நான் தெளிவாக இருக்கிறேன். நீண்ட யோசனைக்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்தேன். அதற்கு மேல் ஆக வேண்டியதை ஆண்டவன் பார்த்துப்பான்’ என்று ரஜினி சொல்லிவிட்டாராம்.

  • அ.ம.மு.க-வின் கட்சித் தலைமை அலுவலகம் சென்னை அசோக் நகரில் இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டுவந்தது. அ.ம.மு.க-வில் அமைப்புச் செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா கடந்தாண்டு ஜூலை மாதமே அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டாலும், தன்னுடைய இடத்தில் அ.ம.மு.க அலுவலகம் செயல்படுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லியிருந்தார். இந்நிலையில், அலுவலகத்தின் ஒப்பந்த காலம் மார்ச் 31-ம் தேதியோடு முடிவடைகிறது. தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட பிரிஸ்ட் கல்வி நிறுவன அதிபர் முருகேசனுக்குச் சொந்தமாக உள்ள சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தைக் கட்சிக்கு வாடகைக்குத் தரச் சம்மதித்திருக்கிறார். விரைவில் பால் காய்ச்சப்போகிறார்கள். `இடம் கொடுத்த இசக்கி சுப்பையா கட்சியைவிட்டு விலகிப்போனார். முருகேசன் முறுக்காமலிருந்தால் சரி’ என்று தொண்டர்கள் முணுமுணுக்கின்றனர்.

  • அ.தி.மு.க ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியான அன்றே முன்னாள் அமைச்சரான பொன்னையன் திட்டக்குழு துணைத் தலைவர் ஆக்கப்பட்டிருக்கிறார். `கட்சியின் சீனியரான என்னை வெறும் பேச்சாளராக மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். நிதி அமைச்சராக இருந்தவன். நிதி சம்பந்தமான பொறுப்பு கொடுங்கள்’ என்று வற்புறுத்தி வந்தாராம். அதனால், நிதித் துறையோடு தொடர்புடைய திட்டக்குழு துணைத்தலைவராக்கிவிட்டனர். இப்போதும், தனது சமூகத்துக்கு தொடர்ந்து எடப்பாடி முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற பேச்சு மறுபடியும் கிளம்பியிருக்கிறது.

  • மார்ச் 13-ம் தேதி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் ஒன்றை சமூக வலைதளம் மற்றும் களப்பிரசாரம் மூலமாக முன்னெடுக்க தி.மு.க திட்டமிட்டிருக்கிறது. பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படிதான் இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறதாம். இந்தப் போராட்டம் அ.தி.மு.க-வின் ஊழல் அமைச்சர்களுக்கு எதிரான முதல் அதிரடி என்று தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது. அடுத்தடுத்து மற்ற ஊழல் அமைச்சர்களின் பராக்கிரமங்களையும் பரப்புரை செய்யவும் திட்டமிட்டிருக்கிறது தி.மு.க.

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்
  • அ.தி.மு.கழக ராஜ்யசபா எம்.பி-யான வைத்திலிங்கத்தால் முன்புபோல வேகமாகச் செயல்பட முடியாத சூழலில், அவர் கோலோச்சிய மத்திய மண்டலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இப்போது ஆளுகை செலுத்த ஆரம்பித்துவிட்டாராம்.

  • முன்னாள் கதர் வாரியத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரனை அ.தி.மு.க-வுக்கு இழுக்கும் வேலையை மாவட்டச் செயலாளர் புத்திச்சந்திரன் மேற்கொண்டு வருகிறாராம்.

  • கேன் குடிநீர் விவகாரத்தில் தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், ஶ்ரீபெரும்புதுார் அருகே எதிர்க்கட்சி உச்ச தலைவருக்குச் சொந்தமான பெரிய குடிநீர் ஆலை மீது அரசின் கரிசனப் பார்வை வீசுகிறதாம்.

  • நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதும், இலங்கையிலிருந்து கோடியக்கரைக்கு தங்கம் கடத்தி வருவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வு. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள அகஸ்தியம்பள்ளியைச் சேர்ந்த கடத்தல் புள்ளியிடமிருந்து நாகை தனிப்பிரிவு அதிகாரி ஒருவர், 5 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளாராம். இதுகுறித்த புகார் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குச் செல்லவே, தற்போது விசாரணை வளையத்தில் அந்த அதிகாரி சிக்கித் தவிக்கிறார். இவர் மீது புதிதாகக் கட்டி வரும் வீட்டுக்கு வேண்டிய மணல் உட்பட கட்டுமான பொருள்கள் அனைத்தையும் லஞ்சமாகப் பெறுகிறார் என்ற குற்றச்சாட்டும் ஏற்கெனவே உண்டு. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் இவருக்கு, இதிலாவது தண்டனை கிடைக்குமா என்று சக காவல் அதிகாரிகளே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  • திருச்சி மாநகர அ.தி.மு.க மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், ஆவின் தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றியிருக்கிறார். ஏற்கெனவே இந்தப் பதவியில் இருந்த அவர், லோக்கல் அரசியலில் தனி ஆவர்த்தனம் செய்வதாகவும், முதல்வர் பெயரைச் சொல்லி ஆட்டம் போடுவதாகவும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் புகார் வாசித்தார்களாம். அடுத்த சில நாள்களில் ஆவின் தலைவர் பதவிகள் கலைக்கப்பட்டன. மீண்டும் அவரே தலைவராக வெற்றிபெற்று பதவியேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு விழாவில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் மாவட்டச் செயலாளர் ப.குமார் உள்ளிட்ட யாரும் கலந்துகொள்ளவில்லை.

காங்கிரஸ் சந்திக்கும் தொடர் பின்னடைவுகள்.. மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
அடுத்த கட்டுரைக்கு