Published:Updated:

கொலை, கொலை மிரட்டல் வழக்குகளில் தி.மு.க எம்.பி-க்கள்!

தி.மு.க எம்.பி
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க எம்.பி

கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்குச் சொந்தமாக பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முந்திரி பதப்படுத்தும் ஆலைகள் இருக்கின்றன.

கொலை, கொலை மிரட்டல் வழக்குகளில் தி.மு.க எம்.பி-க்கள்!

கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்குச் சொந்தமாக பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முந்திரி பதப்படுத்தும் ஆலைகள் இருக்கின்றன.

Published:Updated:
தி.மு.க எம்.பி
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க எம்.பி

கொலை வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு என்று தி.மு.க எம்.பி-க்கள் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே, ‘தி.மு.க ஆட்சி அமைந்தால், ரெளடியிசம் தலைதூக்கும்’ என்று பேச்சு எழும் சூழலில், நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிக்கவேண்டிய பிரநிதிகளே குற்ற வழக்குகளில் சிக்கியிருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!

கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்குச் சொந்தமாக பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முந்திரி பதப்படுத்தும் ஆலைகள் இருக்கின்றன. இவரது பணிக்கன்குப்பத்தின் ஆலையில் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பணியாற்றிவந்தார். செப்டம்பர் 19-ம் தேதி இரவு 10:30 மணிக்கு ரத்தக் காயங்களுடன் கோவிந்தராஜை காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஆலையின் இரு பணியாளர்கள், முந்திரி திருடிவிட்டதாக அவர்மீது வழக்கு பதிவுசெய்யும்படி கூறினார்கள்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
ரமேஷ்
ரமேஷ்

ரத்தக் காயங்களுடன் இருந்த கோவிந்தராஜைப் பார்த்த போலீஸார், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால், மீண்டும் ஆலைக்கே அழைத்துச் செல்லப்பட்ட கோவிந்தராஜ், அன்றிரவு அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, கோவிந்தராஜ் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சென்னையிலுள்ள அவரின் மகன் செந்தில்வேலுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊருக்கு வந்த செந்தில்வேல், ‘எம்.பி ரமேஷ் உள்ளிட்டவர்கள் என் தந்தையைக் கொலை செய்துவிட்டார்கள்’ என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், வழக்கைப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தது போலீஸ்.

அன்று மாலையே, ‘எம்.பி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்ய, வேறு வழியின்றி ‘சந்தேக மரணம்’ என்று வழக்கு பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய பா.ம.க வழக்கறிஞர் பாலு, கோவிந்தராஜின் உடலை ஜிப்மர் மருத்துவக்குழுவினர் உடற்கூறாய்வு செய்வதற்கான அனுமதியைப் பெற்றார். அதன்படி, செப்டம்பர் 23-ம் தேதி கோவிந்தராஜின் உடலை, ஜிப்மர் மருத்துவர்குழு உடற்கூறாய்வு செய்தது.

உடற்கூறாய்வு சோதனையிலும், காவல்துறை விசாரணையிலும் கோவிந்தராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானதால், செப்டம்பர் 26-ம் தேதி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய நடராஜன், கந்தவேலு, அல்லா பிச்சை, வினோத், சுந்தரராஜன் ஆகிய ஐந்து பேரைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அக்டோபர் 9-ம் தேதி இதைக் கொலை வழக்காக மாற்றியதுடன், எம்.பி ரமேஷையும் முதல் குற்றவாளியாகச் சேர்த்தனர்.

கொலை, கொலை மிரட்டல் வழக்குகளில் தி.மு.க எம்.பி-க்கள்!

“எங்கப்பா தற்கொலை செஞ்சுக்கலை”

இதன் பின்னணியில் என்ன நடந்தது என்று கோவிந்தராஜின் மகன் செந்தில்வேலிடம் கேட்டோம். தந்தை கொலை செய்யப்பட்ட விரக்தியில் இருந்தவர், ‘‘நான் சென்னையில டிரைவரா வேலை பார்க்குறேன். அப்பா ஏழு வருஷமா எம்.பி-யோட ஆலையிலதான் வேலை பார்க்குறாரு. வழக்கமா அவர் நைட்டுல என்கிட்ட பேசுவாரு. ஆனா, செப்டம்பர் 18-ம் தேதி போன் வரலை. மறுநாள் ஞாயித்துக்கிழமை நைட் 2:30 மணிக்கு அப்பா நம்பர்ல இருந்து போன் வந்துச்சு. ‘எம்.பி-யோட பி.ஏ பேசறேன். உன் அப்பா விஷம் குடிச்சு செத்துப் போயிட்டாரு’னு சொல்லிட்டு போனை வெச்சுட்டாங்க. நேர்ல வந்து பாத்தா முகமெல்லாம் வீங்கி ரத்தக்காயமா கெடந்தாரு. அதிர்ச்சியடைஞ்ச நான், ‘எங்கப்பா தற்கொலை செஞ்சுக்கலை. எம்.பி ரமேஷும் அவரோட ஆட்களும்தான் அடிச்சுக் கொன்னுட்டாங்க’னு புகார் கொடுத்தேன். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல பின்மண்டை உடைஞ்சதாலதான் அப்பா செத்தாருன்னும், சுவாசக்குழாய்ல விஷம் இருந்துச்சுன்னும் சொல்றாங்க. அங்க பார்க்கக் கூடாத எதையோ அப்பா பார்த்திருக்காரு. அது வெளியில தெரிஞ்சுடக் கூடாதுன்னுதான் அவரை அடிச்சு கொலை செஞ்சிருக்காங்க’’ என்றார் கண்ணீருடன்.

செந்தில்வேல்
செந்தில்வேல்

நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகளோ, ‘‘காயங்களுடன் இருந்த கோவிந்தராஜை காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது வேறு வழக்குகளுக்காக அங்கிருந்த பலரும் பார்த்திருக்கிறார்கள். அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறோம். ‘காயங்களுடன் இருந்த கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவுசெய்ய முடியாது’ என்று போலீஸார் கூறியதும், எம்.பி ரமேஷே தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். வழக்கின் ஏ1 குற்றவாளி எம்.பி என்பதால் அவரைக் கைதுசெய்வதற்கு நாடாளுமன்ற சபாநாயகரின் அனுமதியைக் கேட்டிருக்கிறோம். அவரைக் கைதுசெய்த பிறகுதான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க ரமேஷைப் பலமுறை தொடர்புகொண்டும் எந்த பதிலும் வரவில்லை. இதற்கிடையே, அக்டோபர் 11-ம் தேதி காலை 10:45 மணியளவில் பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார். அதற்கு முன்பு அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில், “நல்லாட்சியின் மீது வீண்பழி பேசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்துவிட வேண்டாம் என்று கருதி சரணடைகிறேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதைச் சட்டத்தின் முன்பு நிரூபித்து வெளியே வருவேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சட்டம் இயற்றவேண்டிய இடத்திலிருப்பவர்களே, சட்டத்தை மீறுவது அவர்கள் வகிக்கும் பதவியையே கேள்விக்குள்ளாக்குகிறது.

*****

‘‘நடக்குறது எங்க ஆட்சி... இங்க நாங்க வெச்சதுதான் சட்டம்!’’ அடித்து உதைத்தாரா ஞானதிரவியம்?

மேற்கண்ட விவகாரம் கொலை வழக்கு என்றால், இன்னொரு பக்கம் கொலை மிரட்டல் வழக்கில் சிக்கியிருக்கிறார் திருநெல்வேலி தி.மு.க எம்.பி ஞானதிரவியம். உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பா.ஜ.க தொண்டர்களை அடித்து உதைத்ததாக அவர்மீது வழக்கு பதிவாகியிருக்கிறது.

ஞானதிரவியம் மற்றும் அவரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பாஸ்கர், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் நம்மிடம், ‘‘பா.ஜ.க சார்பா வள்ளியூர் யூனியன் 12-வது வார்டுல போட்டியிட்ட நிமிதாவுக்கு ஆதரவா தேர்தல் வேலை செஞ்சேன். அதே வார்டுல எம்.பி ஞானதிரவியத்தோட மைத்துனர் மனைவி மல்லிகா தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டாங்க. அதனால, கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னைக் கூப்பிட்ட எம்.பி., ‘நீ பா.ஜ.க-வுக்கு வேலை செய்யக் கூடாது. மீறி வேலை செஞ்சா, உன்னை அழிச்சுருவேன்’னு மிரட்டுனாரு. ஆனா, நான் அதைப் பெருசா எடுத்துக்கலை.

ஞானதிரவியம்
ஞானதிரவியம்

அக்டோபர் 8-ம் தேதி தேர்தல் வேலையை முடிச்சுட்டு, காவல்கிணறு பகுதியில் சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். அப்போ அங்கே வந்த ஞானதிரவியம், ‘நான் சொன்னா கேட்க மாட்டியாலே’னு கோபமா சொல்லிக்கிட்டே என்னை மிதிச்சுத் தள்ளினார். கீழே விழுந்த என்னை அவரோட மகன்கள் சேவியர் ராஜா, தினகர் ரெண்டு பேரும் நெஞ்சுல மிதிச்சாங்க. 40-க்கும் அதிகமான தி.மு.க ஆட்களும் தாக்கினாங்க. ஞானதிரவியம், ‘நடக்குறது எங்க ஆட்சி. இங்க நாங்க வெச்சதுதான் சட்டம்’னு சொல்லி மறுபடியும் மிதிச்சார். அதோட, ஹோட்டல்ல இருந்த சிசிடிவி கேமராவையும் உடைச்சு எடுத்துட்டுப் போயிட்டாங்க’’ என்றார் பதற்றத்துடன்.

பாஸ்கர்
பாஸ்கர்

இந்தச் சம்பவத்தை அடுத்து, ‘தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.க-வினர் நெல்லை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதானார்கள். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பா.ஜ.க நெல்லை மாவட்டத் தலைவர் மகாராஜன், ‘‘ஒரு எம்.பி-யே நேரடியாகத் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட எங்களைக் கைது செய்வதில் போலீஸார் காட்டிய வேகத்தை, ஞானதிரவியத்தைக் கைதுசெய்வதில் காட்டவில்லை. எம்.பி-யைக் கைது செய்யும்வரை போராட்டம் தொடரும்’’ என்றார் காட்டமாக. ஞான திரவியத்திடம் பேசினால், ‘‘நடக்காத சம்பவத்துக்காக பா.ஜ.க-வினர் அரசியல் ஸ்டன்ட் அடிக்கிறார்கள். என்மீதான புகார்கள் அனைத்தும் பொய் என்பதைச் சட்டப்படி நிரூபிப்பேன்’’ என்றார். நெல்லை எஸ்.பி-யான மணிவண்ணனோ, “ஞானதிரவியம் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றார்.