ஆனாலும் விமர்சனங்கள், விவாதங்கள் அனல் பறக்கின்றன. `இந்தச் சட்டம், இஸ்லாமிய நாடுகளில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டுவிட்டது’ என்றெல்லாம் வாதங்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.

சரி, இந்தியாவில் இந்தச் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் திருமணச் சட்டங்களைப் பொறுத்தவரை, அந்தந்த மத நம்பிக்கைகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா 2019’ எனப்படும் முத்தலாக் மசோதா, இஸ்லாமியர்களின் திருமண முறிவைக் கையாளுகிறது. இஸ்லாமியர்களின் திருமணத்தில் பிணக்கு ஏற்படும்போது, ஓர் ஆண் தன் மனைவியிடம் மூன்று முறை ‘தலாக்’ என்று சொன்னால், அந்தத் திருமணம் சட்டபூர்வமாக முறிந்ததாகக் கருதப்படும். தற்போது நிறைவேறியிருக்கும் புதிய சட்ட மசோதா, இந்த முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக அறிவித்திருக்கிறது.

புதிய முத்தலாக் சட்ட மசோதாவில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்...

ஒரே நேரத்தில் முன்று முறை தலாக் சொல்வது சட்டப்படி செல்லாது. அப்படிச் சொல்லும் நபரை கைதுசெய்து, மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். அபராதமும் விதிக்கப்படும்.

முத்தலாக் சொன்னதாக புகார் அளிக்கும் உரிமை, சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கும், அவருக்கு நெருக்கமான உறவினருக்கும் உண்டு. அப்படி அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் மட்டுமே போலீஸார் வழக்கு பதிய முடியும். அதே நேரத்தில், மனைவி புகார் அளித்த பிறகு கணவருடன் உடன்பாடு செய்துகொண்டால், புகாரைத் திரும்பப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

இந்தப் புகாரின் பேரில் கைதுசெய்யப்படும் ஒருவரின் மனைவியிடம் விசாரணை செய்த பிறகு, கணவரை பிணையில் விடும் அதிகாரம் நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. திருமண முறிவுக்குப் பிறகு குழந்தைகள் தாயிடம் வசிக்கவும், அவருக்கு கணவர் ஜீவனாம்சம் வழங்கவும் வழிசெய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு சட்டத்திருத்த மசோதாவில் இந்தக் குற்றம் பிணையில் வர முடியாத குற்றமாகவும், புகார் அளித்த மனைவியால்கூட புகாரைத் திரும்பப் பெற முடியாத குற்றமாகவும், போலீஸார் தாமாக முன்வந்து வழக்கு பதியும் குற்றமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சரி, சட்டத்திருத்தம் சொல்வது இருக்கட்டும்... சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதுகுறித்துப் பேசும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, ‘‘பெண்களுக்கான சொத்துரிமை குறித்து, கடந்த ஒரு நூற்றாண்டாகத்தான் நாம் பேசிவருகிறோம். ஆனால், 1,400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்த மதம் இஸ்லாம். ‘தலாக்’ என்ற அரபுச் சொல்லுக்கு `விவாகரத்து’ என்று பொருள். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், இந்த தலாக் முறை குறித்து தெளிவான வரையறைகளை வகுத்திருக்கிறது. அதாவது, ஓர் ஆண் தன் மனைவியை விவாகரத்து செய்ய மும்முறை தலாக் கூற வேண்டும். அதன்படி முதலில் கூறப்படும் ‘தலாக்’குக்கும் அடுத்தமுறை கூறப்படும் தலாக்குக்கும் இடையே மூன்று மாத இடைவெளி இருக்க வேண்டும். இந்த வகையில், மூன்று தலாக் சொல்லி முடிப்பதற்கு மொத்தம் ஒன்பது மாத கால இடைவெளி இருக்கிறது.

இந்தக் கால இடைவெளி என்பது, சம்பந்தப்பட்ட அந்த ஆணும் பெண்ணும் மனம் திருந்தி, புரிதல் ஏற்பட்டு மீண்டும் திருமண பந்தத்தில் இணைவதற்கான காலக்கெடுதான். அதாவது, அந்த ஆண் - பெண்ணைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் இந்தப் பிரச்னை குறித்துக் கூடி விவாதித்து அறிவுரைகள் கூறி சம்பந்தப்பட்ட ஆண் - பெண்ணை மீண்டும் குடும்பமாக வாழ வகை செய்ய முடியும். `ஆணுக்குப் பெண் சமம்’ என்ற கொள்கையை வலியுறுத்துகிற குர் ஆன், தலாக் முறைக்கு ஈடாக, ‘குலா’ என்ற வழிமுறையையும் வகுத்து வைத்திருக்கிறது. இதன்படி ஒரு பெண்ணுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் தன் கணவனைப் பிடிக்காமல்போனால், ‘குலா’ வழிமுறையில் விவாகரத்து செய்யும் முறைதான் அது.

எனவே, ஓர் இஸ்லாமியர், தொடர்ச்சியாக மூன்று முறை தலாக் சொல்லிவிட்டாலே, அவரின் மனைவியை விவாகரத்து செய்து விடலாம் என்று இஸ்லாத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. தமிழகத்தில் 16,000 ஜமாத்கள் இருக்கின்றன. இவற்றில் எங்கேயாவது, ஒரு ஜமாத்தில் இப்படி தொடர்ச்சியாக மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றவர்கள் யாரையேனும் காட்ட முடியுமா?

வட மாநிலங்களில், படிப்பறிவு பெறாத ஏதேனும் ஓரிரு கிராமப்புறங்களில், இதுபோன்று சில சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம். அரிதிலும் அரிதான இந்தச் சம்பவங்களை இஸ்லாமிய அமைப்புகளே ‘இது செல்லாது’ என்று கண்டிப்பதோடு, ‘தலாக்’ பற்றி அவர்களிடையே புரிந்துகொள்ள வழி செய்துவருகின்றன. இந்த நிலையில், இஸ்லாமிய மக்களின் மீது அக்கறை காட்டுவதாகக் கூறிக்கொண்டு ‘முத்தலாக் தடைச் சட்டத்தை’ மத்திய பி.ஜே.பி அரசு நிறைவேற்றி யிருப்பதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்-தான் இருக்கிறது. ஏனெனில், இந்தச் சட்ட அமைப்பும் அதன் தண்டனை விவரங்களும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முன்னோட்ட மாக இருக்கின்றன.

ஒரு நிமிடத்துக்குள் மும்முறை தலாக் கூறினால், சட்டப்படி அது தவறு. அப்படியெனில், அந்த விவாகரத்து செல்லாது. பிறகு ஏன் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை? சாதாரண ஒரு சிவில் பிரச்னையை, ஏன் கிரிமினல் சட்டமாக மாற்றியிருக்கிறார்கள்? சம்பந்தப்பட்ட பெண், ஒப்புதல் கொடுத்தாலன்றி அந்த ஆணுக்கு ஜாமீனும் வழங்கப்படுவதில்லை. அடுத்ததாக, இஸ்லாமிய வழக்கப்படி ஒரே கட்டமாக ஜீவனாம்சத் தொகையை வழங்கும் முறையை மாற்றி, மாதம்தோறும் அந்த ஆண் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்கிறார்கள். ‘மூன்று வருட சிறைத் தண்டனை பெற்று உள்ளே இருக்கும் ஓர் ஆண், எப்படிச் சம்பாதிக்க முடியும்?’ என்ற எங்களின் அடிப்படைக் கேள்விக்குக்கூட விடை இல்லை.

எல்லோருமே ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்தானே, நாங்களும் சகோதரி, மனைவி, மகள் என்று பெண்கள் சூழத்தானே வாழ்ந்துவருகிறோம். அப்படியிருக்கும்போது எங்கள் வீட்டுப் பெண்கள்மீது எங்களுக்கு இல்லாத அக்கறை, பி.ஜே.பி-க்கு வந்திருப்பது ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதைதான்!’

உண்மையிலேயே மத்திய பி.ஜே.பி அரசு பெண் களின் நலன்மீது அக்கறைகொண்டிருந்தால், ஆண்டாண்டு காலமாகக் கிடப்பில் இருக்கும் மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்தியிருக்கலாமே! சமீபத்தில், வட மாநிலம் ஒன்றில், காவிக்கொடி ஏந்திய ஒரு கும்பல் நடுவீதியில் ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து ஓட ஓட விரட்டும் காணொலிக் காட்சி, இணையத்தில் பரவியது. இப்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த ஓர் அவசரச் சட்டத்தை இயற்றாத இந்த பி.ஜே.பி அரசு, முத்தலாக் விவகாரத்தில் மட்டும் இவ்வளவு ஆர்வமும் அவசரமும் காட்டுவதுதான் ஏன்?’’ என்றார் தெளிவாக.

‘முத்தலாக் தடைச் சட்டம்’ குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். ‘‘குர் ஆனில் நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், நடைமுறை என்னவாக இருக்கிறது? பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில்தான் ‘முத்தலாக் தடைச் சட்டம்’ கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஒருவேளை பி.ஜே.பி அரசு இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவராமல் விட்டிருந்தால், ‘இஸ்லாமியப் பெண்களின் நலனில் அக்கறையில்லாமல் செயல் படுகிறது இந்த அரசு’ என்றும் சொல்லியிருப்பார்கள்.

இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்துகொண்டவர் களின் ஜீவனாம்ச வழக்கிலும் கூட கிரிமினல் சட்ட நடைமுறைகள் தான் பின்பற்றப்படுகின்றன. தனிப் பட்ட முறையில், ‘சட்டத்தைத் தவறாகப் பயன் படுத்தினால் என்னாகும்?’ என்ற கேள்வி எல்லா சட்டங்களுக்குமே பொருந்தும். அம்மாதிரி யான சூழலிலும்கூட நீதிமன்றத்தை நாடி உரிய தீர்வைப் பெறலாம்தானே?

மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்படும் கட்சிகள், முதலில் தங்கள் கட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுக்கட்டும். இந்த வகையில் பார்த்தால்கூட, 33 சதவிகித இடஒதுக்கீட்டை முதலில் கட்சிக்குள் நடைமுறைப்படுத்தியுள்ள கட்சி பி.ஜே.பி-தான். மசோதா கொண்டு வருவது அடுத்தகட்டம்.

பி.ஜே.பி அடிப்படைக் கொள்கைகளில், பொது சிவில் சட்டமும் ஒன்று. இந்தக் கொள்கைகளின் அடிப்படையில்தான் இன்றைய பி.ஜே.பி அரசைப் பெருவாரியான மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனவே சாதி, மத பேதம் இல்லாமல், அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டால், எந்தப் பிரச்னையும் எழாது’’ என்றார் உறுதியாக.

‘சட்டங்கள் சரியாக இருந்தாலும்கூட, அவற்றை நடைமுறைப்படுத்துபவர் களும் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே அந்தச் சட்டம் பயனளிக் கும்’ என்று அரசியல் நிர்ணய சட்ட அவையில், பாபா சாகேப் அம்பேத்கர் கூறிய வார்த்தைகளை அனைவரும் மனத்தில் இருத்திக் கொள்வது அவசியம்!