Published:Updated:

அன்புச்செழியனிடம் இருப்பது யார் பணம்? - முத்தரசன் சொல்லும் `ப' `உ' அரசியல் பிரமுகர்கள்

முத்தரசன்
முத்தரசன்

``டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டால் இளைஞர்கள், போட்டித் தேர்வுகளின் மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர். இந்த முறைகேட்டில் சிக்கியுள்ளது எலிகள்தான். பல பெருச்சாளிகள் மறைந்துள்ளது” என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ``டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் மாட்டியது எலிகள்தான். இவர்களுக்குப் பின்னால் பல பெருச்சாளிகள் மறைந்துள்ளார்கள். அந்தப் பெருச்சாளிகள் அமைச்சர்களாக்கூட இருக்கலாம். எப்போதுமே இதுபோன்ற வழக்குகள், பிரச்னைகள் என்று வந்தால், உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் தப்பித்துக்கொள்வார்கள். சாதாரணமானவர்கள் மீது வழக்குபோட்டு பிறகு ஒன்றுமே இல்லாததுபோல அப்படியே மறைத்துவிடுவார்கள். ஆனால், இந்த முறைகேடு சாதாரணமானது அல்ல.

முத்தரசன்
முத்தரசன்

இதில் ஈடுபட்டவர்கள், கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்துள்ளார்கள் என்பது மட்டுமல்ல. இந்த முறைகேட்டால் வேலையில்லாத இளைஞர்கள் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகள் மீது நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்கள். இனி, எந்தத் தேர்வாக இருந்தாலும் பணம் இருந்தால் எந்த வேலைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். பணத்துக்கு முன் திறமை மறைந்துவிடும் என்கின்ற மனநிலை அவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இந்த முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிப்பதைவிட சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள். தமிழகத்தில் சில அமைச்சர்கள் அவர்களது விரும்பம்போலப் பேசுவது என்பது கண்டனத்துக்கு உரியது. மதக்கலவரத்தை தூண்டக்கூடிய வகையில் பேசி வரும், கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பதுடன் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கம் செய்ய வேண்டும்.

முத்தரசன்
முத்தரசன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் இப்படியெல்லாம் பேச முடியுமா? பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்பது என நினைக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. வேலையின்மை என்பது கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வகையில் நிலவுகிறது. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக ஆக்குவோம் எனச் சொன்னபடி செய்யவில்லை. உணவு, மீன்வளத்துறை, விவசாயம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த பட்ஜெட்டைவிட குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சோதனை மூலம் நடிகர் விஜய்யை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பா.ஜ.க முயற்சி செய்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

முத்தரசன்
முத்தரசன்

திரைத்துறையினருக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் மதுரை அன்புச்செழியனிடம் இருப்பது தமிழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் `ப’ மற்றும் `உ’ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் அரசியல் பிரமுகர்களின் பணம்தான் எனக் கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் உண்மையாக ரெய்டு நடத்தியிருந்தால் யார் அந்த `ப’ மற்றும் `உ’ என்பதைக் கூற வேண்டாமா?” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு