Published:Updated:

`பா.ஜ.க எழுதிக் கொடுத்ததை ரஜினி வெளிப்படுத்தியிருக்கிறார்!' - முத்தரசன் விமர்சனம்

முத்தரசன்
முத்தரசன் ( உ.பாண்டி )

``அரசியலைப் பொறுத்தமட்டில், தனது படங்கள் வெளியாகும் நேரங்களில் மட்டும் பேசும் ரஜினி, இன்னும் கட்சியைத் தொடங்கவில்லை. கட்சியை அவர் தொடங்கப்போவதும் இல்லை. அவர் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவார் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.''

ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று ராமநாதபுரம் வந்திருந்தார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,``ரஜினிகாந்த் நல்ல நடிகர். ஆனால், அவரது நடிப்பினை இன்றைய இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், அவர் நடித்து வெளிவந்த 'தர்பார்' படம் ஓடவில்லை. இதனால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் ரஜினியை சந்திக்க முயன்றும் முடியவில்லை. இதனால் அவர்கள் ரஜினிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

முத்தரசன்
முத்தரசன்
உ.பாண்டி

சினிமாவில் இயக்குநர்கள் நடித்துக் காட்டுவதை, தனது நடிப்பாக வெளிப்படுத்தும் ரஜினிகாந்த், அவர்கள் எழுதித்தரும் வசனங்களையே பேசுவார். அதைப்போன்றே குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் அவராகப் பேசவில்லை. அவரை இயக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் எழுதிக் கொடுத்தவற்றை, தனது கருத்தாக வெளியிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்தை தமிழகத்தில் உள்ள பா.ஜ.க-வினரைத் தவிர வேறு யாரும் ஏற்கவில்லை; பாராட்டவில்லை.

அரசியலைப் பொறுத்தமட்டில், தனது படங்கள் வெளியாகும் நேரங்களில் மட்டும் பேசும் ரஜினி, இன்னும் கட்சியைத் தொடங்கவில்லை. கட்சியை அவர் தொடங்கப்போவதும் இல்லை. அவர் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவார் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். அவர் நிச்சயம் வரமாட்டார். கட்சி என்ற குழந்தையைப் பெற தயாராக இல்லை. இந்நிலையில், பிறக்காத குழந்தைக்கு எங்கே பெயர் வைக்கப்போகிறார்?

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் நடந்த முறைகேடுகளில் இதுவரை சில சுண்டெலிகளே சிக்கியுள்ளன. பெருச்சாளிகள் தப்பிவிட்டன. இதுபோன்ற வழக்குகளில் எப்பொழுதும் அவை சிக்கவும் செய்யாது. அரசியல் பெரும்தலைகள் தலையீடு இல்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, சி.பி.ஐ அமைப்பிடம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும். அதில்கூட உண்மை வெளிவருமா எனத் தெரியாது. ஏனெனில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக அமைப்புகள் எல்லாம் பா.ஜ.க தலைமை சொல்வதைச் செய்வதையே வழக்கமாகக்கொண்டு இயங்கிவருகின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளுமே மோடி அரசினால் சீர்குலைக்கப்பட்டுள்ளன'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு